tamilnadu

img

வடசென்னை தொகுதியில் திமுக அமோக வெற்றி!

சென்னை, ஜூன் 4- வடசென்னை மக்களவைத் தொகுதியில் அதிக முறை வெற்றி பெற்றுள்ள திமுகவே இந்த முறையும் அமோக வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதி களில் ஒன்றான வட சென்னை மக்களவைத் தொகுதி மிகவும் பழமையானது. தமிழ்நாட்டின் இரண்டாவது மக்களவை தொகுதி என்ற பெருமையும் பெற்றிருக்கிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு கொளத்தூர், ராயபுரம், ஆர்.கே.நகர், திருவொற்றியூர், பெரம்பூர், திருவிக நகர் (தனி) ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் வடசென்னை மக்களவை தொகுதியில் இடம் பெற்றுள்ளன. வட சென்னை தொகுதிக்கு 1957 முதல் 2024ஆம் ஆண்டு வரை தேர்தல் நடந்துள்ளது. முதல் முறையாக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட எஸ்.சி.சி.அந்தோணிப்பிள்ளை வெற்றி பெற்றார். வட சென்னை தொகுதியை பொறுத்தவரை திமுக அதிக முறை வெற்றி பெற்றுள்ளது.

அதற்கு அடுத்து இடதுசாரி (யுசிபி) கட்சி இரண்டு முறையும், காங்கிரஸ், அதிமுக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 71.68 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் திமுக வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி 5,90,986  வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 1,29,468 வாக்குகள் பெற்ற தேமுதிக வேட்பாளர் ஆர்.மோகன்ராஜ் இரண்டாம் இடம் பிடித்தார். அதற்கு அடுத்த இடத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஏ.ஜி.மவுர்யா 1,03,167 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பி.காளியம்மாள் 60,515  வாக்குகளும் பெற்றனர். தற்போது வடசென்னை மக்களவைத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் - 7,24,968, பெண் வாக்காளர்கள் - 7,59,208, மூன்றாம் பாலின வாக்காளர்கள் - 513 என மொத்தம் 14,84,689 வாக்காளர்கள் உள்ளனர்.

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் டாக்டர் கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் ராயபுரம் மனோகரன், பாஜக சார்பில் ஆர்.சி.பால் கனகராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் அமுதினி உள்ளிட்டு 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் வடசென்னை தொகுதியில் 60.11 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இதில் மீண்டும் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி 4 லட்சத்து 97ஆயிரத்தி 333  வாக்குகள் பெற்று மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.

அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோகரன் 1லட்சத்து 58ஆயிரத்தி 111 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும், பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 1 லட்சத்து 13அயிரத்தி 318வாக்குகள் பெற்று 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 95 ஆயிரத்தி 954 வாக்குகள் பெற்று 4ஆம் இடத்தையும் பிடித்தனர்.