tamilnadu

img

நூறு நாள் வேலை கூலிப் பாக்கி 3 மாதமாக வழங்கப்படவில்லை....

சென்னை:
 தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் பல மாதங்களாக  வழங்கப்படாமல் உள்ள கூலிப் பாக்கியை உடனே வழங்க வேண்டுமென்று அகிலஇந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர்  ஏ.லாசர், பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கொரோனா தொற்று காலத்தில் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக கிராமப்புற ஏழை-எளிய விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், வேலையின்மை ஏற்பட்டு வருமானமும் இல்லாமல் கடும் சிரமத்தில் வாழ்க்கையை நடத்துகின்றனர். மத்தியஅரசு நித்தம் ஒரு விலை என்ற தன்மையில் அனைத்துப் பொருட்களின் விலையையும் கடுமையாக உயர்த்தி ஏழைகளை வாட்டிவதைத்து வருகிறது. வேலையிழந்துள்ள விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட கிராமப்புற உழைக்கும் பிரிவினர் கொரோனா கால வாழ்க்கைச் சிரமங்களிலிருந்து மீண்டிட மத்திய அரசு எவ்வித நிவாரணமும் வழங்காமல் காலம் கடத்திவிட்டது. ஆனால், வாய்ப்பந்தலுக்கு மட்டும் குறைச்சல் இல்லை.மாநில அரசோ, சொற்ப நிவாரணங்களை அளித்துவிட்டு, சுயதம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறது.இந்தக் காலங்களில் மக்களுக்கு ஓரளவு ஆறுதல் அளிக்கும் விதமாக தேசிய ஊரக நூறு நாள்வேலைத்திட்டம்தான் உதவி வந்தது. ஆனால், இந்தத் திட்டத்தில் முழுமையாக வேலை வழங்குவதோ சட்டஊதியம் ரூ.256 ஐ வழங்குவதோ எந்த மாவட்டத்திலும் அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் செய்த  வேலைகளுக்குக் கூட கடந்த 3 மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை. கீழ்மட்ட அதிகாரிகளிடம் கேட்டால்,மத்திய அரசு பணம் அனுப்பவில்லை.

எனவே, வங்கிக் கணக்கில் கூலிப்பணம் ஏற்றப்படவில்லை என்று காரணம் சொல்கிறார்கள். மத்திய அரசு இதுபோன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டும். கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்வது மட்டுமே மத்திய அரசின் கொள்கையாக உள்ளது. இதற்கு சங்கம் கண்டனத்தை தெரிவிக்கிறது. பட்டினியோடு காத்திருக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கான ஊதிய நிலுவை பாக்கியை உடனேவிடுவிக்க  மத்திய, மாநில அரசுகள்துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று  மாநிலக்குழு கேட்டுக்கொணள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;