tamilnadu

img

நில உரிமைக்காக மலைவாழ் மக்கள் காத்திருப்புப் போராட்டம்...

ஆம்பூர்:
மலைவாழ் மக்கள் நில உரிமையை பெற்றிட தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் திருப்பத்தூர் சாராட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஜவ்வாது மலைவாழ் மக்கள் சங்கத் தலைவரும் மாநிலக்குழு உறுப்பினருமான லட்சுமண ராஜா தலைமையில் காத்திருப்பு போராட்டம் துவங்கியது.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.டில்லிபாபு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.சக்திவேல், அரசு போக்குவரத்து கழக சிஐடியு சங்க நிர்வாகி கேசவன், தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் ரங்கன் மாவட்ட குழு உறுப் பினர் ஞானசேகரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு, புங்கம்பட்டி நாடு, நெல்லி வாசல் நாடு ஆகிய மூன்று நாடுகளில் மலையாளி இனத்தை சார்ந்த 45 ஆயிரத்துக்கு மேல் பழங்குடி மக்கள் சுமார் நூறாண்டு காலமாக வாழ்ந்து வருகிறார்கள்.இவர்கள் ஜீவனத்திற்காக வன நிலங் களையும், அரசு தரிசு நிலங்களில் பயிர் செய்து வரும் நிலங்களுக்கும் அதில் கட்டியுள்ள வீடுகளுக்கும் 2006 வன மசோதா சட்டப் படி பட்டா வழங்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் முத்தானூர்,கோட்டூர் கிராமங்களில் பயிர் செய்துவரும் நிலங்களும் வீடுகளும் 2006 வன மசோதா சட்டப்படி பட்டா வழங்க வேண்டும்.
தலைமுறை தலைமுறையாக அவர்கள் அனுபவத்தில் வீடு கட்டி பயிர் ஜீவனம் செய்து வரும் ஏலகிரி மலைவாழ் மக்களை வெளியேற்றி தாவரவியல் பூங்கா அமைத்திடும் முயற்சிகளைக் கைவிட வேண்டும். மாற்று இடத்தில் பூங்கா அமைக்க வேண்டும், நிலப் பட்டா வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். அனைத்து பழங்குடி இன மக்களுக்கு கேரளா அரசு ஆறு லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு கட்டிக் கொடுப்பது போன்று கட்டி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தப் போராட்டத்தில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் செயலாளர் ஜெயராமன், பொருளாளர் சுப்பிரமணி கமிட்டி உறுப்பினர் லோகநாதன், மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதி மலைவாழ் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

போராட்டத்தின்போது சாராட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட சார் ஆட்சியர், சாதி சான்று உடனடியாக வழங்கப்படும் என்றும் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று விசாரணை செய்து 15 நாட்களுக்குப் பிறகு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.இந்தப் பேச்சுவார்த்தையின் போது, ஏலகிரி மலையில் அமைக்கப்படும் தாவரவியல் பூங்காவிற்கு மலைவாழ் மக்களின் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் மலைக்கு சம்பந்தமில்லாமல் வெளியாட்கள் (முன்னாள், இந் நாள் அமைச்சர்கள் ) வாங்கியுள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களை கைப்பற்றி தாவரவியல் பூங்கா அமைக்க வேண்டும் என்றும் டில்லிபாபு வலியுறுத்தினார்.

;