tamilnadu

img

நாளை முதல் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம்  

நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.  

நாடு முழுவதும் வரும் 17 ஆம் தேதி 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடைபெறவுள்ளது. நீட் தேர்வினை எழுத இந்த ஆண்டு 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட இந்தாண்டில் கூடுதலாக 2.57 லட்சம் பேர் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர். இந்த நீட் தேர்வு தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களில் இருக்கும் மையங்களில் இந்த தேர்வு நடைபெறும். முன்னதாக, தேர்வு மையங்கள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு சீட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.  

இந்நிலையில் நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, அத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் neet.nta.nic.in என்ற தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.