உருமாற்றம் பெற்ற கொரோனா பரவுவதால் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் பரிசோதனையைக் கட்டாயமாக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உருமாற்றம் பெற்ற கொரோன பரவுவதால் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் பரிசோதனையைக் கட்டாயமாக்கக் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் செய்த அதே தவறை மத்திய அரசு தற்போதும் செய்வதாகப் புகார் தெரிவித்துள்ளார். மேலும், மேற்கத்திய நாடுகளைப் போல இன்னொரு ஊரடங்கை அறிவித்தால் மிக மோசமான நிலை ஏற்படும். அதனால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியை மக்கள் விரும்பவில்லை.
ஆகவே, பிரிட்டனில் இருந்து வருவோரை மட்டும் அல்லாமல் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் கட்டாயக் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். வெளிநாட்டு பயணிகளை 14 நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்த வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.