tamilnadu

img

‘இந்தியா முழுவதுமே நீட் தேர்வு கூடாது’

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூன் 18) வள்ளுவர் கோட்டம் அருகே திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் ஆற்றிய உரைகளின் சாராம்சம்:

ஜி.ராமகிருஷ்ணன்

ஜி.ராமகிருஷ்ணன் தமது உரையில், “சமூக வலைதள செய்திகளை ஆய்வு செய்து  உண்மையை வெளியிடக்கூடிய ஆல்ட்நியூஸ் நிறுவனர் ஜுபைர் மீது நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் மாட்டு இறைச்சியை கடத்தியதாக இஸ்லாமியர்களை அடித்துக் கொன்றுள்ளனர். மணிப்பூர் எரிந்து கொண்டே இருக்கிறது. தேர்தல் முடிவுக்கு பிறகும் மோடி பாடம் கற்றுக் கொள்ளவில்லை. பாசிச பாணி தொடர்ந்து கொண்டுள்ளது. எனவே, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்றார்.

ராஜஸ்தான், பீகார் மாநிலங்களில் நீட் வினாத்தாள் கசிவு; 1523 மாணவர்களுக்கு கருணை (கிரேஸ்) மதிப்பெண் அளித்துள்ளனர். இத்தகைய முறைகேடுகளுக்கு எதிராக வட மாநிலங்களில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது. 

கல்வி தொடர்பாக மாநில அரசு இயற்றும் சட்டத்திற்கு, ஒன்றிய அரசு சட்டம் முரண்பாடு இல்லாத வகையில் இருந்தால் அதை அமலாக்கலாம். இதற்கு நேர்மாறாக ஒன்றிய அரசு செயல்படுகிறது என்று ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார். நீட்டுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்த தயாராவோம் என்றும் அவர் கூறினார்.

டி.கே.எஸ்.இளங்கோவன்

திமுக செய்தி தொடர்புக்குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., பேசுகையில், “குழந்தைகளிடத்தில் உளவியல் ரீதியான தாக்குதலை நீட் நடத்துகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இங்குள்ள மருத்துவ இடங்களை கைப்பற்ற நீட் தேர்வை கொண்டு வந்துள்ளார்கள். தேர்தலில் குளறுபடி செய்தவர்கள் தேர்வை விட்டு விடுவார்களா” என்று கேள்வி எழுப்பினார்.

இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், “நீட் தேர்வு என்ற பெயரால் ஒன்றிய அரசால் அனிதா கொல்லப்பட்டார். தமிழகத்தின் முன்முயற்சியால் பல மாநிலங்கள் தற்போது விலக்கு கோருகின்றன. நுழைவுத் தேர்வே கூடாது என்பதுதான் நமது நிலைபாடு. நால்வருண முறையை நிலை நிறுத்தும் முயற்சியாக நீட் தேர்வு உள்ளது” என்றார்.

தொல்.திருமாவளவன்

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், “தவறு நடந்திருப்பதால் அதை சுட்டிக்காட்டி நீட் வேண்டாம் என்கிறோம். சமூக நீதி, விளிம்பு நிலை மக்களின் கல்வி உரிமை, மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுவதால் நுழைவுத் தேர்வு முறையே கூடாது என்கிறோம். ஒத்திசைவு பட்டியலில் கல்வி இருப்பதால் அதைப் பயன்படுத்தி ஒன்றிய அரசு ஆதிக்கம் செலுத்துகிறது. மாநில அரசின் கல்வித் திட்டத்தை சிதைக்கிறது. பொதுவானது என்று கூறி உயர் கல்வியில் இருந்து விளிம்பு நிலை மக்களை வெளியேற்றுகிறது. எனவே இந்தியா முழுவதுமே நீட் தேர்வு கூடாது” என்றார்.

கு.செல்வப்பெருந்தகை

“தமிழகத்தில் தேர்வு எழுத செல்லும் மாணவர்களின் மூக்குத்தியைக் கூட கழற்றச் சொல்கிறார்கள். ஆனால் பணம் கொடுத்தால் மாணவர்களுக்காக ஆசிரியர்களே தேர்வு எழுதுகின்றனர். தேசிய தேர்வு முகமையே கூடுதல் மதிப்பெண் வழங்குகிறது. மாநிலங்கள் விரும்பும் போது நீட் தேர்வை செயல்படுத்துங்கள்” என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை குறிப்பிட்டார்.

பேரா.ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா குறிப்பிடுகையில், “நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி இரண்டு முறை சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் ஒன்றிய அரசு திணித்து வருகிறது. பாஜக கொண்டு வந்த அனைத்து நுழைவுத் தேர்வுகளிலும் முறைகேடு நடந்துள்ளது. கார்ப்பரேட் நலனுக்காக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. நுழைவுத் தேர்வே தவறானது. எந்த ஒரு நுழைவுத் தேர்வும் தேவையற்றது” என்றார்.

கி.வீரமணி

திக தலைவர் கி.வீரமணி நிறைவுரையாற்றுகையில், “ஊழலை ஒழிக்க கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்ட நீட் தேர்வில்தான் ஊழலும் முறைகேடுகளும் நடக்கிறது. மருத்துவம் படிக்க அன்றைக்கு சமஸ்கிருதம் வேண்டும் என்றவர்கள் இன்றைக்கு நீட் வேண்டும் என்கிறார்கள். சமூகநீதியை அழிக்க நீட் கொண்டு வந்துள்ளனர். நீட் தேர்வு கொண்டு வர ஒன்றிய அரசுக்கு உரிமை இல்லை. இதை அரசியலமைப்பு சட்டம் தெளிவாக வரையறுத்துள்ளது. அரசியல் சட்டத்திற்கு முரணாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த நீட் தேர்வு முறையை எதிர்த்து தோழமைக் கட்சிகளோடு ஆலோசித்து வழக்கு தொடுக்க உள்ளோம்” என்றார்.

மாநிலம் தழுவிய பிரச்சாரம் 

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழக மாணவரணி, இளைஞரணி சார்பில் ஜூலை 11ஆம் தேதி மாநிலம் தழுவிய இருச்சக்கர வாகன பிரச்சாரம் நடைபெறுகிறது. 5 மையங்களில் இருந்து தொடங்கும் இந்த  பிரச்சாரம் ஜூலை 15ஆம் தேதி நிறைவுபெறும். பிரதமர் தன்னை அவதாரம் என்கிறார். அவதாரம் என்றால் மேலே இருந்து கீழே இறங்குதல் என்று பொருள். மேலே இருப்பவரை கீழே இறக்குவோம் என்றும் அவர் கூறினார். 

திராவிடர் மாணவர் கழகத்தின் மாநிலச் செயலாளர் இரா.செந்தூர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், ஐயுஎம்எல் பொதுச்செயலாளர் முகம்மது அபுபக்கர், மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ.வந்தியதேவன், திக பொருளாளர் குமரேசன், துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோரும் பேசினர். 

;