சென்னை:
பயிர்க் காப்பீடு - பிரிமியம் செலுத்த கால நீடிப்பு செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
நடப்புப் பருவகால சாகுபடிக்கான பயிர்க் காப்பீடு பிரிமியத் தொகை அறிவிக்கப்பட்டு, அதனை செலுத்த வரும் 30.11.2020 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக எச்சரிக்கப்பட்ட நிவர் புயல் வீசத் தொடங்கியுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக தடுப்பு முன்னேற்பாடுளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் பயிர் காப்பீட்டுக்கான பிரிமியம் செலுத்துவதும் சேரும் போது கடுமையான கூட்ட நெருக்கடி ஏற்படுகிறது. பெரும் பகுதி விவசாயிகள் விட்டுப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே, பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகள் பிரிமியம் செலுத்தும் நாட்களை நீடித்து, டிசம்பர் 31 வரை கால அவகாசம் வழங்க தமிழ்நாடு அரசு காப்பீட்டு நிறுவனங்களுடன் பேசி உரிய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் முத்தரசன் தெரிவித்துள்ளார்.