கோவிட்-19 தடுப்பூசியை இலவசமாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
கோவிட்-19 தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சைப்பணியில் சிறப்பாக பணியாற்றிய
அனைத்து அரசு மருத்துவர்களுக்கும், பிற மருத்துவத்துறை ஊழியர்களுக்கும்
முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட "சிறப்பு ஊதியத்தை" இன்னும் அளிக்காமல்
இழுத்தடிப்பதை சிபிஐ (எம்) மாநிலக்குழு வண்மையாக கண்டிப்பதோடு, அதனை
உடனடியாக விரைந்து வழங்கிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.
மக்கள், கோவிட்-19 தொற்று அபாயத்திலிருந்து இன்னும் முழுமையாக
விடுபடாத நிலையில், இதற்காக ஏற்படுத்தப்பட்ட" சிறப்பு
மருத்துவமையங்களை" தொடர்ந்து பராமரிக்கவேண்டும். கோவிட் தொற்று
முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட பின்பும் அவ்வப்போது மக்களை
அச்சுறுத்துகிற"டெங்கு" போன்ற தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்க
ஏதுவாக, அவற்றை "தொற்று நோய் மருத்துவமனைகளாக"தொடர்ந்து பராமரிக்க
வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
கோவிட்-19 தடுப்பூசிகளை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இலவசமாக அளித்திட
மாநில அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென சிபிஐ (எம்)
மாநிலக்குழு வலியுறுத்துகிறது.