tamilnadu

img

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு: தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட சிபிஎம் வேண்டுகோள்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டுமானால் தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு நல்கி ஊரடங்கை கறாராக கடைபிடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரிழப்பு ஏற்பட்டு வருவது மிகுந்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு நோய்த் தொற்று மிகத் தீவிரமடைந்து மக்கள் மோசமான பாதிப்புக்குள்ளாகும் நிலைமை ஏற்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். கொரோனா நோய்த் தொற்று பரவல் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும், மருத்துவக் குழுவினர்களும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும், கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு 2021 மே 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. பதவியேற்றது முதல் தமிழக முதலமைச்சரும் மற்றும் அமைச்சர்களும் கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது.

மேலும் கொரோனா நிவாரணமாக ரூ. 2,000/- அறிவித்துள்ளதும் மிகவும் உதவிகரமானதாக இருக்கும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டுமானால் தமிழக அரசின் அறிவிப்பிற்கு தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு நல்கி ஊரடங்கை கறாராக கடைபிடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறது.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு மிகக் கொடூரமான முறையில் கூடுதலான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணக் கொள்ளையால் பல குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரம் அனைத்தையும் இழக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு தமிழக அரசு நியாயமான கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டுமெனவும், அதனை உடனடியாக பொதுவெளியில் அறிவிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் பயன் பெற தீர்மானிக்கப்பட்டுள்ள வருமான வரம்பினை உயர்த்தினால் மட்டுமே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் காப்பீட்டு சலுகை பெற முடியும். எனவே, வருமான வரம்பினை உயர்த்திட கேட்டுக் கொள்கிறோம்.

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் இரண்டு மடங்கு தேவை அதிகரித்துள்ளதால் தமிழக அரசு கேட்டுள்ள ஆக்சிஜனை உடனடியாக மத்திய அரசு வழங்கிட வேண்டும். தமிழகத்திற்கு தேவையான ரெம்டிசிவர் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களையும் வழங்கிட வேண்டும்.

தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரணம் ரூ. 2,000/-த்தை உடனடியாக இந்த ஊரடங்கு காலத்திலேயே வழங்கிட வேண்டும்.

முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி கூடுதல் விலையில் விற்பவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

முழு ஊரடங்கிற்கு இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் வெளியூரில் தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு கூடுதலான பேருந்துகள் மற்றும் இதர போக்குவரத்து வசதிகளை செய்து தர வேண்டும்.

ஊரடங்கை அமல்படுத்துகிறோம் என்ற பெயரால் பொதுமக்களை காவல்துறை மற்றும் அதிகாரிகள் அச்சுறுத்தக் கூடாது எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழக மக்கள் இந்த முழு ஊரடங்கு காலத்தில் அவசரத் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாமெனவும், மாஸ்க் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற கொரோனா தடுப்பு வழிமுறைகளை கறாராக கடைபிடிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

 

கட்சி அணிகளுக்கு வேண்டுகோள்:

அதிகரித்து வரும் கொரோனா பேரிடரிலிருந்து மக்களை காக்கும் பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள், கிளைகள் ஈடுபட வேண்டும். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ஊரடங்கிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை நல்க வைப்பது, நோய் பரவல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களை சந்தித்து முறையிடுவது, கபசுர குடிநீர் - முகக் கவசம் வழங்குவது, சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட உயிர் காக்கும் பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டுமென கட்சி அணிகளை மாநில செயற்குழு வேண்டுகிறது.

;