tamilnadu

img

தமிழக அரசு செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

தமிழக அரசு செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச்செயலளார் கே.பாலகிருஷ்ணன்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

தமிழக அரசு, மருத்துவ பணிகள் தேர்வாணையம் (Medical Recuitment Board) மூலம்
கடந்த 2015ம் ஆண்டு 7243 செவிலியர்களையும், அதன் தொடர்ச்சியாக இன்றுவரை
சுமார் 10,000க்கும் மேற்பட்ட செவிலியர்களை மருத்துவ பணிகள் தேர்வாணையம்
மூலம் தேர்வு செய்து மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லுhரி
மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.7,700/-
ஊதியத்தில் செவிலியராக பணியமர்த்தியது.

பணியில் சேர்ந்த இரண்டு வருடத்தில் காலமுறை ஊதியம் வழங்கி பணிநிரந்தரம்
செய்யப்பட்டும் என பணி நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தும், ஆறு
வருடங்களில் 2000 பேர் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
மீதியுள்ளோர் பணி நிரந்தரம் செய்யப்படாமல் ஒப்பந்த செவிலியர்களாகவே
இன்று வரை பணியாற்றி வருகின்றனர். நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக
அரசு மருத்துமனையின் அனைத்து பிரிவுகளிலும் இவர்கள் பணிபுரிந்து
வருகின்றனர்.
“தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம்” சார்பாக, கடந்த 2017ம்
ஆண்டு நவம்பர் மாதம் பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தி, சுமார் 5
ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு
போராட்டம் நடத்தினர். அதன் விளைவாக கட்டாயத்தின் பேரில் செவிலியர்களின்
ஊதியம் ரூபாய் 14 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. கடந்த ஆறு வருடமாக அவர்கள்
பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. காலமுறை ஊதியமும்
வழங்கப்படவில்லை. நிர்ப்பந்தத்தின் பேரில் உயர்த்தப்பட்ட ஊதியம் உட்பட ரூ.
14,000/- மட்டுமே பெற்று பணியாற்றும் நிலை உள்ளது. இது மருத்துவ பணியில்
சேவை புரியும் செவிலியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். தமிழக அரசின்
இந்த நடவடிக்கை வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
எனவே, இவர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம்
வழங்கிட வேண்டுமென தமிழக அரசை சிபிஐ(எம்) மாநிலக்குழு
வலியுறுத்துகிறது.