tamilnadu

img

வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதனுக்கு நீதிமன்றத்திலேயே அநீதி! - சிபிஎம் கண்டனம்

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய சில தீர்ப்புகள் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் எதிராகவும் உள்ளது என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு புகார் அளித்த  வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதனுக்கு நீதிமன்றத்திலேயே அநீதி நடந்திருப்பதற்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
"சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய சில தீர்ப்புகள் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும், நீதிபதிகள் பதவி ஏற்பின் போது எடுத்துக் கொள்ளும்  உறுதிமொழிக்கு மாறாகவும் அமைந்துள்ளதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு  புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
நீதிபதிகளின் தீர்ப்புகளில் ஐயப்பாடுகள் எழும்போது இவ்வாறு புகார்கள் எழுப்பப்படுவது சட்டப்படியானது தான். அதுவும் நீதித்துறைக்குள்ளேயே விசாரிக்கப்பட வேண்டும் என்பதற்காக உச்சநீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் புகார் அனுப்பியுள்ளார்.
ஆனால், இப்புகார் அதிமுக ஆட்சி காலத்தில் அரசு வழக்கறிஞராக செயல்பட்ட வழக்கறிஞர் இராஜராஜன் என்பவரால் தற்போது சமூகவலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. இது எவ்வாறு இவருக்கு கிடைக்கப் பெற்றது என்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உரிய பதில் அளித்திட வேண்டும். ஏனெனில், புகார் மனுவை உச்சநீதிமன்றம் தவிர வேறு எவருக்கும் அனுப்பவில்லை என்று புகார்தாரர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 25.07.2025 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் திடீரென விசாரணைக்கு அழைக்கப்பட்டதும், ஒரு நீதிபதியின் மீதான புகாரை அவரே விசாரிப்பதும் இயற்கை நீதிக்கு எதிரானது.
அதேபோல், விசாரணையின் போது திறந்த நீதிமன்றத்தில் "நீ ஒரு கோழை" என்று வழக்கறிஞரை குறிப்பிட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு, நீதிகேட்டு புகார் அளித்த ஒரு வழக்கறிஞரை குற்றவாளி போல் பாவிப்பதையும், நீதிமன்ற அவமதிப்பு என்று மிரட்டுவதையும் ஏற்க முடியாது. மேலும், ஆதாரங்களுடன் புகார் அனுப்பியுள்ளதாக புகார்தாரர் தெரிவித்துள்ள நிலையில் உச்சநீதிமன்றம் இதன் மீது உரிய   நடவடிக்கைகளை துவங்கிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.