புதுவை போல் தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாநாடு கோரிக்கை
கள்ளக்குறிச்சி, செப். 2- புதுவை மாநிலத்தில் வழங்குவது போல் தீபாவளி போனஸ் 5 ஆயிரம் ரூபாய் தமிழக அரசும் வழங்க வேண்டும் என்று கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட மாநாடு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் சங்கம் கள்ளக்குறிச்சி மாவட்ட 12 ஆவது மாநாடு உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆர்.பச்சையப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.முருகன் வரவேற்றார். சிஐடியு முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜசேகர் கொடியேற்றி வைத்தார். மாவட்ட துணைச் செயலாளர் எம்.வீரபாண்டியன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.செந்தில் துவக்க உரை ஆற்றினார். கட்டு மான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.சேகர் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்டப் பொருளாளர் கே.ராம மூர்த்தி வரவு-செலவு அறிக்கை வாசித்தார். சிஐடியு மாவட்டப் பொருளாளர் எ.வீராசாமி மாநாட்டை வாழ்த்திப் பேசினார். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டி.குமார் நிறைவுரையாற்றினார். கோரிக்கைகள் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய பணப்பயன்களை உயர்த்தி வழங்க வேண்டும், நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துள்ள தொழிலாளர்களை இஎஸ்ஐ திட்டத்தில் சேர்த்திட வேண்டும், முறைசாரா கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், சொந்தமாக வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசு வீடு கட்ட ரூபாய் 4 லட்சம் வழங்க வேண்டும், தொழிலாளர்கள் நல சட்டம் 44 திருத்தி நாலு சட்ட தொகுப்புக்களாக மாற்றியதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றினர். நிர்வாகிகள் தேர்வு 27 பேர் கொண்ட நிர்வாக குழுவில் தலைவராக ஆர்.பச்சையப்பன், செயலாளராக எஸ்.சேகர், பொருளாளராக டி.எஸ்.மோகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.