tamilnadu

img

மத்திய- மாநில அரசுகளை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் மறியல்.... தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பேர் கைது....

சென்னை:
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்-2016ன்படி தனியார்துறை பணிகளில்  குறைந்தபட்சம் 5 சதவீத இடங்களைஉத்தரவாதப்படுத்த வேண்டும், அரசுத்துறைகளில் பின்னடைவு  காலிப்பணியிடங் களை 3  மாத  காலத்தில் நிரப்ப வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்தியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு நிரப்ப வேண்டும். தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களைப் போன்று மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 2 புதன்கிழமையன்று தமிழகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட மையங்களில் அரசு அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு அனைத்து வகைமாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. 

மாநிலம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்ற மறியல் போராட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டனர். தென் சென்னையில் சைதாப்பேட்டை பனகல்மாளிகை முன் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாநிலத் தலைவர் பா.ஜான்ஸி ராணியும், வடசென்னையில் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன் மாநில பொதுச்செயலாளர் எஸ். நம்புராஜன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாநில துணைச் செயலாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மத்திய சென்னை எழும்பூர் தாலுகா அலுவலகம் முன் நடைபெற்ற மறியலுக்கு மாநில துணைச்செயலாளர் எஸ்.கே. மாரியப்பன் தலைமை வகித்தார்.

தருமபுரி அரூரில் மாநில பொருளாளர் கே.ஆர். சக்கரவர்த்தி தலைமை ஏற்றார்.மாநில செயலாளர்கள் பி.ஜீவா திருச்சியிலும், பகத்சிங் பழனியிலும், மதுராந்தகத்தில் டி.வில்சனும், முத்துக்காந்தாரி கோவில்பட்டியிலும், மாநில துணை தலைவர்கள் பாரதி அண்ணா உத்திரமேரூரிலும், எஸ்.சண்முகம் திருப்போரூரிலும், பி. திருப்பதி ஊத்தங்கரையிலும் தலைமை ஏற்று கைதாகினர். மாநில துணைச் செயலாளர்கள் அப்பு செம்பட்டியிலும், பி. ராஜேஷ் திருப்பூரி லும், கே.பி. பாபு காஞ்சிபுரத்திலும் மறியல் செய்து கைதாகினர். திண்டுக்கல் மாவட்டத்தில் 6, திருவண்ணாமலை காஞ்சிபுரம் மாவட்டங்களில் தலா 5, தூத்துக்குடியில் 4, விழுப்புரம், மதுரைபுறநகர், தருமபுரி மாவட்டங்களில் தலா 3 எனகூடுதல் மையங்களில் மறியல் போராட்டங்கள்நடைபெற்றன.  இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று கைதாகி னர்.  

புயல் அச்சுறுத்தல், கனமழை அறிவிப்புக்கு மத்தியிலும் மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட இடங்களிலும் மறியல் நடைபெற்றது. சேலம், கள்ளக்குறிச்சி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் மறியல் நடைபெற்று நூற்றுக்கணக்கானோர் கைதாகினர்.

;