சென்னை/;
சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் தோழர் ரகுநாத்சிங் மறை வுக்கு சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிஐடியு மாநில உதவி பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
சிஐடியு பஞ்சாப் மாநிலப் பொதுச்செயலாளரும், சிஐடியு அகில இந்திய துணைத்தலைவருமான தோழர் ரகுநாத்சிங் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஒருமாத காலமாக சிகிச்சை மேற்கொண்டு சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பிய நிலையில் மரணமடைந்தார். பஞ்சாப் மாநிலத்தில் மாணவர் இயக்கத்தை உருவாக்குவதில் மிகப்பெரிய பங்களிப்பை செலுத்தியவர் தோழர் ரகுநாத் சிங். அதன்பிறகு தன்னை சிஐடியுவில் இணைத்துக்கொண்டு முழுநேர தொழிற்சங்கப் பணிகளை மேற்கொண்டவர். சிஐடியுவில் மாநில, அகில இந்திய பொறுப்புகளில் திறம்பட செயல்பட்டவர்.
தோழர் ரகுநாத்சிங் மறைவு பஞ்சாப் மாநில உழைப்பாளிகளுக்கு மட்டுமல்ல அனைத்துப் பகுதி உழைப்பாளி மக்களுக்கும் பேரிழப்பாகும். ரகுநாத்சிங் மறைவுக்கு சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது. தோழர் ரகுநாத் சிங்கை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பஞ்சாப் மாநிலத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை சிஐடியு தெரிவித்துக் கொள்கிறது.தோழர் ரகுநாத்சிங் மறைவு செய்தியறிந்து சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் இரங்கல் செய்தி யினை அனுப்பியுள்ளனர்.