tamilnadu

img

அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு!

கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் ராட்சத பேனர் சரிந்து விழுந்து 14 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை மாநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்ற மண்டல அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மண்டல உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, சென்னைக்குள் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன. மும்பை புழுதி புயல் சம்பவத்துக்குப் பிறகு அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 460 விளம்பரப் பலகைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளது. இதில், 30 அடி உயரத்துக்கு மேல் வைக்கப்பட்டிருந்த 250 விளம்பரப் பலகைகள் அஸ்திவாரத்தோடு அகற்றப்பட்டுள்ளன.

சென்னையில் விளம்பரப் பலகைகள் வைக்க மாநகராட்சி நிர்வாகம் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. தற்போதுள்ள அனைத்து விளம்பரப் பலகைகளும் விதிகளை மீறி வைக்கப்பட்டவைதான். அவற்றை அகற்றி வருகிறோம். உரிய அனுமதி பெற இதுவரை 1100 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 40 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

மற்றவற்றுக்கு உரிமம் வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.30 கோடி வரை வருவாய் கிடைக்கும். அரசு கட்டிடங்களில் விளம்பரப் பலகைகள் வைத்து வருவாய் ஈட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் மாநகராட்சிக்கு ரூ.200 கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று கூறினர்.

 

;