tamilnadu

நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து

நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து

2 மீனவர்களை காணவில்லை

சென்னை, ஜூலை 4- சென்னை அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போன, 2 மீனவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.  சென்னை காசிமேடு மீன்பிடி  துறைமுகத்தில் இருந்து ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காசிமேடு காசிமா நகர் 3ஆவது தெருவைச் சேர்ந்த ராஜா (61), அதே பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி (60) , சேகர், ஜெகன், விஜயமூர்த்தி, சுதாகர் ஆகியோர் ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க பிடிக்க கடந்த 30ஆம் தேதி புறப்பட்டுச் சென்றனர்.  அவர்கள் சென்னை கடற்கரையில் இருந்து சுமார் 58 கடல் மைல் தொலைவில் கடந்த 1ஆம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது  காற்று வேகமாக வீசியது, கடலடி நீரோட்டமும் வேகமாக இருந்ததாம். கடலடி நீரோட்டத்தின் காரணமாக, படகில் இருந்து வலையோடு கடலுக்குள் வீசப்பட்டிருந்த கயிறு பாறையில் சிக்கியது. ஒரு கட்டத்தில் நீரோட்டம் மிகவும் வேகமாக இருந்ததால் படகு பாறை மீது மோதியது. இதில் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதன் காரணமாக படகில் இருந்த 6 மீனவர்களும் கடலுக்குள் குதித்தனர்.  மேலும் அவர்கள், மிதவை மூலம் கரையை நோக்கி புறப்பட்டனர். ஆனால் ராஜாவும், மாசிலாமணியும் கடலில் நீந்த முடியாமல், அங்கேயே சிக்கிக் கொண்டனர். ஆனால் மீதி 4 பேரும் கடலில் நீந்தி, ஆந்திர மாநிலம்   ஸ்ரீஹரிகோட்டா அருகே கரையேறினர். சென்னை வந்த 4 பேரும், காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் கடலில் காணாமல் போன மீனவர்கள் ராஜா, மாசிலாமணியை கடலோர காவல் படையினர் உதவியுடன் தேடி வருகின்றனர்.