சென்னை, செப். 30 - ‘பியாண்ட் ஹெட்லைன்ஸ்’ யூடியூப் சேனலை பத்திரிகையாளர் என். ராம் தொடங்கி வைத்தார்.
சிஐடியு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த யூடியூப் சேனலை உருவாக்கி உள்ளன.
சேனலின் தொடக்க விழா திங்களன்று (செப்.30) சென்னையில் நடைபெற்றது. அக்டோ பர் 2 முதல் இயங்க உள்ள இந்த சேனலை தொடங்கி வைத்து என். ராம் முதல் சந்தாதாரராக இணைந்தார்.\
சங்கம் அமைப்பது உரிமை
அப்போது அவர் பேசுகையில், “வறுமையைப் பற்றி எழுதுவது எளிது. தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்கள், அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமையான சங்கம் அமைக்கும் உரிமை யை பற்றி ஊடகங்கள் எழுதாது. மூலதனம் வர வேண்டியது முக்கியம்தான். அதேசமயம் நியாய மாக தொழிலை நடத்த வேண்டும். தொழிற்சங்கம் கூடாது என்பது மோசமான அபத்தமான நிலைப்பாடு. இதற்கெதிராக தொழிலாளர்களின் போராட்டம் தொடரும்” என்றார்.
திருப்புமுனை போராட்டம்
“சாம்சங் நிறுவனத்தில் வேலை நிறுத்தம் நடைபெறுவது உலக அளவிலான செய்தி. அந்நிறுவனத்தில் 85 விழுக்காடு தொழிலாளர்கள் 22 நாட்களாக வேலைநிறுத்தம் செய்து வரு கின்றனர். சங்கம் சேரவும், கூட்டுப்பேர உரிமையை நிலைநாட்டவுமே போராட்டம் நடத்துகின்றனர். ஆனால், போராட்டம் நடத்தினால் முதலீடு வராது என்று அச்சுறுத்துகிறார்கள். இந்தப் போராட்டம் ஒரு திருப்புமுனை. தகவல் தொழில்நுட்ப மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களாக பார்த்து அதிக சம்பளம் தருவார்கள் என்ற கருத்து- கட்டமைப்பை மீறி சாம்சங் தொழிலாளர் போராட்டம் நடக்கிறது” என்றும் அவர் கூறினார்.
‘தலைப்புக்கு அப்பால்’ (Beyond Headlines) என்ற சேனலின் பெயரே சிறப்பானது என்று குறிப்பிட்ட என். ராம், “வேண்டுமென்றே பரப்பப்படும் போலியான செய்திகள் தொழி லாளி வர்க்கத்திற்கும், சமூகத்திற்கும் ஆபத்தானது. சமூக வலைதளங்களை நேர்மறை யாக பயன்படுத்த வேண்டும். உலக அளவில் யுடியூப் சேனலை பயன்படுத்துவதில் இந்தியா (47.50 கோடி பேர்) முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா இரண்டாவது (24 கோடி பேர்) இடத்தில்தான் உள்ளது. எனவே, இதுபோன்ற யுடியூப் சேனல்கள் அதிகளவில் வர வேண்டும். தொழிலாளர்களின் பிரச்சனையோடு சமூக பிரச்சனைகளை எடுத்துரைக்கும் சிஐடியுவின் பணி தொடர வேண்டும்” என்றும் கூறினார்.
பாதிக்கப்படும் தொழிலாளர்கள்
சேனலை வாழ்த்தி பேசிய சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், “வர்த்தக நோக்கமற்று, சமூகத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கோடு, குரலற்றவர்களின் ஆயுதமாக இந்த சேனல் இருக்கும்; அதிர்வை உருவாக்கும். தாராளமயக் கொள்கையை அமல்படுத்திய நாடுகளில் குழப்பம், ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதற்கான அரசியல், பொருளாதார உண்மைக்கார ணங்களை மறைப்பதற்குத் தான் இன்றைய ஊடகங்கள் உள்ளன. இதற்கு நேர்மாறாக சேனல் இருக்கும்; போராட்டங்கள், விவசாயிகளின் துன்பங்களை ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வரும்” என்றார்.
“சேவைத்துறையில், செயலிகளை நம்பி, சமூக பாதுகாப்பின்றி, முதலாளி - தொழிலாளி என்ற உறவே இல்லாமல் பணியாற்றும் நிலை உள்ளது. புதுப்புது வடிவங்களில் சுரண்டல் அதி கரித்துக் கொண்டே செல்கிறது. ஐடி துறையில் நடை பெறும் சுரண்டலை எண்ணிப்பார்க்க முடியாத வகையில் உள்ளது. பணிச்சுமையை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்ற னர். பணிச்சோர்வு, அயற்சி போன்ற அறி யப்படாத நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கெதிராக, சமூக பிரச்சனைகளுக்காக போராடுகிறோம். அவற்றை ஆவணப்படுத்து வதோடு, அவற்றை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் இந்த சேனல் செயல்படும்” என்றும் அவர் கூறினார்.
பேசுபொருளாக்க வேண்டும்
பத்திரிகையாளர் ஷபீர் அகமது குறிப்பிடுகை யில், “ஆங்கில தொலைக்காட்சிகளில் தொழி லாளர்கள் போராட்டம், சிஐடியு, கம்யூனிஸ்ட் செய்திகளுக்கு இடம் இல்லை. தொழிலாளர்கள் பிரச்சனையை பேசுவதற்காக தொடங்கப்பட்ட ‘நியூஸ் கிளிக்’ இணையத்தையும் ஆட்சியாளர்கள் முடக்கி விட்டனர். முதலமைச்சர் வெளிநாடு சென்று முதலீட்டை பெற்று வந்தால் விவாதிக்கும் ஊடகங்கள், ‘சாம்சங்’ போன்ற தொழிலாளர் போராட்டங்களை பேசுவதில்லை. எனவே, பிரச்ச னைகளை பேசு பொருளாக மாற்ற வேண்டும்.” என்றார். இந்நிகழ்வில் சிஐடியு மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு, நிர்வாகிகள் கே. ஆறுமுக நயினார், கே.சி. கோபி குமார், தி. ஜெய்சங்கர், எஸ். சந்தானம் உள்ளிட்டோர் பேசினர்.