tamilnadu

img

இந்நாள் ஜன. 02 இதற்கு முன்னால்

533 - திருத்தந்தையாக(போப்) பதவி யேற்கும்போது பெயரை மாற்றிக் கொள்வது முதன்முறையாக நிகழ்ந்தது. அப்போது போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மெர்க்குரியஸ், தன் பெயர் பாகனிச ரோமானியக் கடவுளான மெர்க்குரி யைக் கொண்டிருந்ததால், கத்தோலிக்கத் திருச்சபை யின் தலைமைப்பதவிக்கு ஏற்றதல்ல என்று கருதி, அவருக்கு முந்தைய போப்பான ஜான் என்பதையே தன் பெயராகத் தேர்ந்தெடுத்து, தன்னை இரண்டாம் ஜான் என்று அழைத்துக்கொண்டார். கி.பி.4ஆம் நூற்றாண்டிலிருந்து, ரோமானியர்களின் பலதெய்வ வழிபாட்டை பாகனிசம் என்று குறிப்பிட்டு, கிறித்தவத்துக்கு முரண்பட்டதாக கிறித்த வர்கள் ஒதுக்கத் தொடங்கியிருந்ததால், தன் பெயரை மெர்க்குரியஸ் மாற்றிக் கொண்டார். அவருக்கு முன்பு போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், திருமுழுக்கின் போது இருந்த இயற்பெயரையே  பயன்படுத்தி வந்தனர். 10ஆம் நூற்றாண்டுக்குப்பின், ரோமில்(இத்தாலி) மட்டுமின்றி, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற பிற பகுதிகளிலிருந்த மதகுருக்களும் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்படத் தொடங்கியபின், லத்தீனியப் பெயர்களாக இன்றி, அந்நியப் பெயர்களாகத் தோற்றமளித்த தங்கள் பெயர்களை மாற்றிக்கொள்வது அதிகரித்தது.

1555இல் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் இரண்டாம் மார்சிலஸ்தான் சொந்தப் பெயரைப் பயன்படுத்திய கடைசி போப்! அவருக்குப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருமே பெயரை மாற்றிக்கொள்ள, தற்போது, போப் பதவியேற்பிலேயே, எந்தப் பெயரால் அவர் அழைக்கப்பட விரும்புகிறார் என்ற கேள்வி இடம்பெற்றுவிட்டது. பெயரைத் தேர்ந்தெடுக்க எவ்வித கட்டுப்பாடோ, மரபோ இல்லை. அதனால், தங்களுக்கு முன்பு போப்பாக இருந்தவர்கள், தங்கள் வழிகாட்டிகள், புனிதர்கள் போன்றோர் பெயரை மட்டுமின்றி, தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரைக்கூட போப்கள் தேர்ந்தெடுக்கின்றனர். குறிப்பிட்ட போப்பைப் போலச் செயல்படுவேன் என்று காட்டிக்கொள்ளும் நோக்கிலும், முன்பிருந்த ஒரு போப்பின் பெயர் தேர்ந்தெடுக்கப்படுகிறது. 1978இல் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆல்பினோ லூசியானி-தான் முதன்முறையாக இரண்டு பெயரைத்  தேர்ந்தெடுத்தார். அவரை ஆயராக்கிய(பிஷப்) போப் 23ஆம் ஜான், மறைமுதுவராக்கிய(பேட்ரியார்ச்) ஆறாம் பால் ஆகியோரின் பெயரைச் சேர்த்து, தன்னை முதலாம் ஜான் பால் என்று அவர் அழைத்துக்கொண்டார்.  போப், ஆண்ட்டி-போப்(எதிர் திருத்தந்தை) உட்பட ஜான் 22 முறையும், கிரிகோரி, பெனடிக்ட் ஆகியவை 16 முறையும், க்ளமெண்ட் 14 முறையும், இன்னொசெண்ட், லியோ ஆகியவை 13 முறையும், பயஸ் 12 முறையும் போப்பின் பெயர்களாக இருந்துள்ளன என்பதுடன், இடையில் 20ஆம் ஜான் என்ற பெயர் பயன்படுத்தப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கவை!

- அறிவுக்கடல்

;