tamilnadu

img

மோடி அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை முறியடிக்க மேலும் வலுவாக போராடுவோம்

சிஐடியு மாநாட்டில் அனைத்து தொழிற்சங்கத் தலைவர்கள் முழக்கம்

சென்னையில் 2020 ஜனவரி 23 அன்று பேரெழுச்சியுடன் துவங்கி நடைபெற்று வருகிற இந்திய தொழிற்சங்க மையம்(சிஐடியு) 16வது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்று சகோதர தொழிற்சங்க தலைவர்கள் நிகழ்த்திய வாழ்த்துரையின் சுருக்கம்:

கோவில்களை விற்கும் மோடி அரசு

முருகேசன் (ஐஎன்டியுசி)

மத்திய அரசின் தொழிலாளர் விரோத தேச விரோத கொள்கைகளுக்கு எதிராக ஜனவரி 8 அன்று நடைபெற்ற நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தேசிய அளவிலான தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெறாத பல சங்கங்களும் கலந்துகொண்டது ஒரு திருப்புமுனையாகும்.  மத்திய மோடி அரசின் கொள்கையால் துயரத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கும் விவசாயிகள் இந்த  வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து இயக்கங்கள் நடத்தியதால் நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் வேலை நிறுத்தத்தால் இயல்பு நிலைமை முடங்கியது.  இந்த தொழிலாளர் - விவசாயி ஒற்றுமை நீடிக்கவேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களைச் சீர்குலைக்கும் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தைத் தீவிரப்படுத்த இந்த மாநாட்டில் சிஐடியு எடுக்கும் முடிவுகளுக்கு ஐஎன்டியுசி ஆதரவு நல்கும். சிஐடியு-வுடன் இணைந்து போராடும். மத்திய அரசின் தவறான கொள்கை முடிவுகளால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. உண்மையான புள்ளிவிவரங்களோடு நிபுணர்கள் பலர் பொருளாதாரம் மிக மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றுகூறினால் அதை ஏற்றுக் கொள்கையை மாற்றிக்கொள்ள ஆட்சியாளர்கள் தயாராக இல்லை.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தொழிலாளர்களாகிய நாம் கணிசமாகப் பங்களிப்பை வழங்கி வருகிறோம். பொருளாதாரம் சீர் குலைந்தால் முதலில் பாதிக்கப்படுவது நாம் தான்.  கடந்த 70ஆண்டுகளில்  பொதுத்துறை நிறுவனங்களை நாம் மிகப்பெரிய அளவில் மேம்படுத்தியிருக்கிறோம். நவீன இந்தியாவின் கோவில்கள் இந்த பொதுத்துறை நிறுவனங்கள் என்று, மறைந்த பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு கூறினார். ஆனால் அந்த கோவில்களை இன்றைய ஆட்சியாளர்கள் திட்டமிட்டுச் சீர்குலைத்து தனியாருக்கு விற்றுக்கொண்டிருக்கின்றனர். எனவே மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் அதிகரித்துள்ள சூழலில் சிஐடியு அகில இந்திய மாநாடு நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மாநாடு வெற்றிபெற ஐஎன்டியுசி வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

தொழிலாளி வர்க்கத்தின் எச்சரிக்கை

அமர்ஜித் கவுர் (ஏஐடியுசி பொதுச்செயலாளர்)

இந்தியத் தொழிலாளி வர்க்கத்திற்கு நீண்ட பாரம்பரியம் உண்டு. நாட்டில் உள்ள இருபெரும் தொழிற்சங்கங்களில் சிஐடியு 50வது ஆண்டு விழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. ஏஐடியுசி நூற்றாண்டு விழாவை விரைவில் கொண்டாட உள்ளது.  இந்தியாவில் உள்ள உழைக்கும் வர்க்கம் பிரிட்டிஷ் ஆட்சியின் போதே போராடி உரிமைகளைப் பெற்ற இயக்கமாகும். தொழிற்சங்கங்களின் போராட்டம் காரணமாகத்தான் 1926ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்  தொழிற்சங்க சட்டத்தை நிறைவேற்றினார்கள்.  தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம் 1923ல் கொண்டுவரப்பட்டது. தொழிற்சாலை சட்டம் 1921ல் நிறைவேற்றப்பட்டது.  இவையனைத்தும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் கெஞ்சி நாம் வாங்கவில்லை. போராடி அந்த சட்டங்களைப் பெற்றோம். 

இந்தியத் தொழிலாளி வர்க்கம் வெறும் தொழிலாளர்கள் நலன்களுக்கு மட்டுமல்லாமல் சுதந்திரப்போராட்டத்திற்கான திசையையும் காட்டியது.  இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து தேவையில்லை, முழு சுதந்திரம் வழங்கவேண்டும் என்று முழங்கியதோடு 1921ல் கூடிய ஏஐடியுசியின் 2வது மாநாட்டில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் போராடி நாம் பெற்ற உரிமைகள் அனைத்தையும் தற்போதுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சிதைத்து வருகிறது. இவற்றுக்கு எதிராகத் தொழிற்சங்கங்கள்   ஒன்றுபட்ட போராட்டங்களை மேலும் தீவிரமாக நடத்தவேண்டியுள்ளது. மோடி அரசு முதல்  முறையாக ஆட்சிக்கு வந்தபோது 2015 செப்டம்பர் 2 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை  நடத்தி  முதல் எச்சரிக்கையைத் தொழிலாளி வர்க்கம் விடுத்தது. அப்போது பத்து கோடி தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். 2016ஆம் ஆண்டு  வேலைநிறுத்தத்தின்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.

2020 ஜனவரி 8 அன்று நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் 25 கோடிப் பேர் பங்கேற்றது அரசுக்கு எதிராகத் தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ள கோபத்தை  எடுத்துக்காட்டுகிறது.  மத்திய அரசுக்கு எதிராகத் தொழிலாளர்கள் மட்டுமல்ல, விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் ஆசிரியர்களும் அறிவுஜீவிகளும் தெருவில் இறங்கிப் போராடி வருகிறார்கள். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் மற்றும் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம். அவர்களின் தீரமிக்க போராட்டம் மெய்சிலிர்க்கவைக்கிறது. அவர்கள் வருங்கால இந்தியாவைப் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை நமக்கு  ஏற்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் முடிவுகளும் இந்தியத் தொழிற்சங்க இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும். 

பொதுத்துறை நிறுவனங்களை விற்று பற்றாக்குறையைச் சரிக்கட்டுவதா?

மு.சண்முகம் (தொமுச)

சிஐடியு அகில இந்திய மாநாடு வெற்றிபெற எங்களது கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  மத்திய ஆட்சியாளர்கள் ஒருபுறம் வேலை நியமன தடை சட்டத்தைக் கொண்டு வந்து காலிப்பணியிடங்களை நிரப்பாமல், படித்து முடித்துள்ள இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தாமல் அந்த பணியிடங்களை அப்படியே சரண்டர் செய்கிறார்கள். மறுபுறம் வேலைவாய்ப்பை  நாங்கள்தான் ஏற்படுத்தி யிருக்கிறோம் என்கிறார்கள். நாடுமுழுவதும் பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்படுகின்றன. அரசியல் வேறுபாடு களைக் கடந்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் இணைந்து மத்திய அரசுக்கு எதிராகப் போராடுகிறோம். இந்த ஒற்றுமை தொடர வேண்டும். கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற வேலைநிறுத்தம் வரலாற்றுச் சிறப்பு மிக்க வேலைநிறுத்தமாகும். அமைப்பு சாரா தொழிலாளர்களும் அந்தப்போராட்டத்தில் பெருமளவில் கலந்துகொண்டதால் மோடி அரசு அதிர்ந்துபோயுள்ளது. 

உழைக்கும் மக்களை நாம் ஒன்றுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் மக்கள் விரோத கொள்கைகளைத் திரும்பப் பெறுவதற்கு  நாம் ஒவ்வொருவரும் சார்ந்திருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் மூலமாகவும் மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் அளிக்கவேண்டும். தமிழகத்தில் பல ஆண்டுகளாக நாம் இணைந்து போராடி வருகிறோம்.  கடந்த காலத்தில் நமது வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்ற கூறி வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட  தொழிலாளர்கள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டாலும் நீதிமன்றத்தில் போராடி வேலை நிறுத்தம் செய்வது சட்டம் வழங்கி யுள்ள உரிமை என்பதை நிலை நாட்டியிருக்கிறோம். அரசின் பல மோசமான முடிவுகளைத் திரும்பப் பெற வைத்துள்ளோம். இவை எல்லாம் நாம் போராட்டத்தால் சாதித்தவை ஆகும். பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்கும் அரசை இதற்குமுன்பு நாம் பார்த்ததில்லை. மிகவும் நெருக்கடியான காலகட்டத்தை உழைக்கும் வர்க்கம் கடந்து கொண்டிருக்கிறது. எனவே  தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பாக இந்த மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு மணிநேரத்திற்கு ஒரு வேலையில்லாதவர் தற்கொலை

ராஜா ஸ்ரீதர் (எச்.எம்.எஸ்) 

நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மத்தியில் உள்ள பாரதிய பனியா பார்ட்டிக்கு (பாரத வியாபார கட்சி) இதைப்பற்றி கவலையில்லை. பொருளாதார மந்த நிலை நிலவுகிறது என்ற உண்மையைக் கூட ஏற்றுக்கொள்ளக்கூட ஆட்சி யாளர்களுக்கு மனமில்லை. இந்தியாவில் இருக்கும் போதெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி 5டிரில்லியன் பொருளா தாரம்குறித்து பேசுவதை வழக்கமாக வைத்திருக் கிறார். ஆனால் இந்தியப்பொருளா தாரம் வீழ்ந்து கொண்டிருப்பது மட்டுமல்ல உலக பொருளாதா ரத்தையும் சேர்த்து கீழே தள்ளிக்கொண்டிருக்கிறது என்று ஐஎம்எப் தலைமை பொருளாதார ஆலோசகர் கூறியிருக்கிறார். இதை ஏற்றுக்கொள்ளாமல் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் நாசப்படுத்தும் வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.  

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலை யின்மை 7.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. வேலையில்லாத விரக்தியால் ஒரு மணிநேரத்திற்கு ஒருவர் எனத் தற்கொலை  செய்துகொண்டிருக்கிறார்கள்.  பத்துகோடி பேருக்கு வேலை தருவோம் என்று பொய்யான வாக்குறுதியை முன்வைத்து ஆட்சிக்கு வந்த மோடி அரசு பணமதிப்பு நீக்கம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் ஆகியவற்றால்  சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மூடி பலகோடி வேலைவாய்ப்புகளைப் பறித்து விட்டது. இதனால் பலரது வாழ்வாதாரம் பறிபோய்விட்டது. எனவே உழைப்பாளி வர்க்கம் மேலும்  ஒற்றுமையை வலுப்படுத்தவேண்டிய தேவை எழுந்துள்ளது. உழைக்கும் வர்க்கம் முன்பு எழுந்துள்ள இந்த சவால்களை வெற்றி கரமாக எதிர்கொள்ள இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் விஷயங்கள் நிச்சயம் பயன்படும் என்று கூறி எச்எம்எஸ் சார்பில் சிஐடியு மாநாடு வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

வலுவான போராட்டம் தேவை

கே.ராதாகிருஷ்ணன் (ஏஐயுடியுசி)

தொழிலாளர்களும் நாட்டுமக்களும் பெரும் துயரத்தில் இருக்கும்போது மோடி அரசு இந்துத்துவா கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்துவதில் அக்கறை காட்டிக்கொண்டிருக்கிறது. தொழிலாளர்களின் வலுவான போராட்டத்தின் மூலமாக இந்த அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளைத் தோற்கடிக்கமுடியும். அதற்காக இந்தியத் தொழிலாளி வர்க்கம் மேலும் தீவிரமாகப் போராட உறுதியேற்கவேண்டும்.

அனைத்தையும் தலைகீழாக்கும் பாஜக அரசு

வி.சங்கர் (ஏஐசிசிடியு)

உழைக்கும் வர்க்கம்தான் இந்த நாட்டின் செல்வத்தை உருவாக்குபவர்கள்.ஆனால் மோடி கார்ப்பரேட் முதலாளிகள் செல்வத்தை உருவாக்குபவர்கள் என்று தலை கீழாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். உழைப்பாளி மக்களை மேலும் மேலும் நசுக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அரசு தனது சொந்த சட்டங்களைக் கூட அமல்படுத்த மறுக்கிறது. இஎஸ்ஐ,பிஎப் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கவேண்டும். அந்த திட்டத்திற்கான பாதித்தொகையை வேலை அளிக்கும் நிறுவனங்கள் வழங்கவேண்டும். ஆனால் மோடி அரசோ இது வேலையளிப்பவரின் கடமை அல்ல என்றும் தொழிலாளி தன் நிலையைத் தானே சமாளித்துக்கொள்ளவேண்டும் என்று கூறுகிறது. இது இதுவரை இருந்த அரசுகள் கடைப்பிடித்த கொள்கையிலிருந்து முற்றிலும் தலைகீழான நிலைப்பாடாகும்.

ஏமாற்றப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள்

சோனியா (சேவா யூனியன்)

மோடி அரசாங்கம் வந்த பின்னர் தொழிற்சாலைகள் மூடப்படுவதும்  அதனால் பெண்களும் அமைப்பு சாரா தொழிலாளர்களும் பாதிக்கப்படுவதும் பல மடங்காக அதிகரித்துள்ளது. அந்த மக்களைப் பாதுகாக்க மோடி தயாராக இல்லை. அவரது கவலையெல்லாம் அம்பானி, அதானியை எப்படிப் பாதுகாப்பது என்பதுதான். இப்படி ஒரு மோசமான ஆட்சியை நாம் இதற்கு முன்பு பார்த்ததில்லை. மோடி அரசின் கொள்கைகளால்   பாதிக்கப்பட்டவர்களில் பெண்களும் அமைப்புசாரா தொழிலாளர்களும் கணிசமானவர்கள். ஆஷா திட்டம்,அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் பல லட்சக்கணக்கான பெண்கள் மோடி அரசால் ஏமாற்றப்பட்டுள்ளனர். நாட்டில் உள்ள அமைப்புசாரா துறையின் அளவு 97 விழுக்காடு என்றும் அமைப்பு சார்ந்த துறையின்  அளவு 3விழுக்காடு என்றும் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசின் ஒட்டுமொத்த நலத்திட்டங்கள் இந்த 3விழுக்காட்டினருக்கு மட்டுமே வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இதனால் பல மாநிலங்களில் மக்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு இடம்பெயர்ந்து, கிடைக்கிற வேலையைச்  செய்து வாழ்க்கையைத் தள்ளவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை மாற்ற தொழிற்சங்கங்களால்தான் முடியும்.

 



 









 

;