tamilnadu

img

நேதாஜி பிறந்த நாளில் இந்தியாவிற்காக இணைவோம்! - பெரணமல்லூர் சேகரன்

இந்திய வரலாற்றின் ஒப்பற்ற நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த தினம் இன்று. ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாய், இந்திய இளைஞர்களின் கனவாய் வாழ்ந்தவர் நேதாஜி.

ஐ.சி.எஸ் பதவியை உதறினார்

இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான ஐ.சி.எஸ் தேர்வில், இந்திய அளவிலேயே நான்காம் இடம்பெற்று தேர்ச்சியடைந்தார் சுபாஷ். மிகப்பெரிய பதவி.. சர்க்கார் உத்தியோகம்… ஆனால் அவையெல்லாம் ஆங்கிலேயர் முன் அவரை மண்டியிடச் செய்யவில்லை. தேர்ச்சி பெற்ற உடனேயே தனது ராஜினாமா கடிதத்தை மாண்டேகு பிரபுவிடம் அளித்தார் சுபாஷ். மதிப்புமிக்க பதவியை உதறித்தள்ளிய அவரைப் பார்த்து, “உன் பெற்றோர் வருத்தப்படமாட்டார்களா” என்று அவர் கேட்டதற்கு, “என் தாய் தந்தையருக்கு வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால் என் தாய்நாட்டின் வருத்தம் அதைவிடப் பெரியது” என்று சொல்லி அவருக்கே அதிர்ச்சியளித்தார்.

சிறையிலிருந்தே சீறினார்

1924ம் ஆண்டு பர்மாவின் மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் நேதாஜி. அந்த மோசமான சிறையிலேயே அவரை முடக்க நினைத்தது ஆங்கில அரசு. ஆனால் அப்போது நடந்த வங்க சட்டமன்றத் தேர்தலில் சிறையிலிருந்தவாரே வெற்றி வாகை சூடினார் போஸ். அதுதான் வங்க மக்கள் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கை. இந்த வெற்றி தான் ஆங்கில அரசின் கூரிய பார்வையை போஸின் பக்கம் திருப்பியது. தங்களது தடங்கல்கள் அத்தனையையும் மீறி ஒருவரால் சிறையிலிருந்து வெல்ல முடிகிறது என்றால், இவர் நமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று பிரிட்டிஷ் அரசை உணர வைத்தது அந்த வெற்றி. மாண்டலே சிறையில், காசநோயால் சுபாஷ் அவதிப்பட, அனைவரும் அவரை விடுவிக்கச் சொல்லி போராட்டம் நடத்தினர். அவரது உயிர் ஆபத்தான நிலையை  எட்டியதால் இரண்டு நிபந்தனைகளோடு அவரை விடு தலை செய்ய நினைத்தது பிரிட்டிஷ் அரசு. ஒன்று, சுபாஷ் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 3 ஆண்டுகள் இந்தியாவில் நுழையாது இருத்தல் வேண்டும் என்பது. சுபாஷின் தாய், சகோதரர் உட்பட அனைவரும், அவர் விடுதலை ஆனால் போதும் என்று நினைத்திருக்க, “நான் ஒன்றும்  கோழையல்ல மன்னிப்புக் கேட்க. என்னை என் நாட்டுக்குள் வரக்கூடாதென்று சொல்ல இவர்கள் யார்? இந்த நிபந்த னைகளை என்னால் ஏற்க முடியாது” என்று சொல்லி விடு தலையாக மறுத்துவிட்டார் சுபாஷ். மரணத்தின் பிடியிலும் மங்காமல் ஒலித்த அந்த சிங்கத்தின் கர்ஜனைக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் அரண்டுதான் போனது.

நேதாஜியின் துணிவு

இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் இவரது பெயர் ஒலிக்க ஒரு நிகழ்வு தான் காரணம். வீட்டுச் சிறையில் தீவிர  கண்காணிப்பில் இருந்த நேதாஜி, ஆங்கிலேயரின் கண் களில் மண்ணைத் தூவி தரை வழியாகவே பயணம் செய்து ஆப்கனையும், பின்னர் அங்கிருந்து பெருமுயற்சி எடுத்து ஜெர்மனியையும் அடைந்தார். சுபாஷைக் காண வில்லை என நாடே பரபரக்க, ஜெர்மனியிலிருந்து சுபாஷ் அவர்கள் முழங்க, மொத்த உலகமும் இந்தப் போராளியைப் பார்த்து வியந்தது. தன் நாட்டின் சுதந்திரத்திற்காக, தனி ஒரு மனிதனால் இவ்வளவு தூரம் செல்ல முடியுமா என்று ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளே இவரை வியந்து போற்றின.

1938 குஜராத் காங்கிரஸ் மாநாட்டில், இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தனது முதல் உரையை வாசித்தார் சுபாஷ். “ஆங்கிலேய அரசு பிரித்தாளும் சூழ்ச்சி யை இங்கு அமல்படுத்தும். நம் தேசத்தை சுக்குநூறாக உடைக்கும். நாம் ஒற்றுமையோடு அதை எதிர்த்து வெல்ல வேண்டும்” என்று கூறினார். எது நடக்கக்கூடாது என்று அவர் நினைத்தாரோ, அதுவே ரத்தமும் சதையும் சிதற இந்நாட்டில் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையாக அரங்கேறியது. ஆங்கில அரசின் ஒவ்வொரு அசைவும் எப்படி இருக்கும் என்று நன்கு அறிந்தவர் போஸ். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கையாண்ட அதே பிரித்தாளும் சூழ்ச்சியை இன்று பாஜக அரசு பின்பற்று கிறது. அதை எதிர்த்த அதே போஸ், நமக்கு இன்றும் வெளிச்சம் தருகிறார்!

நேதாஜி போன்ற மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் பிறந்த மண்ணில், சுதந்திரப் போராட்டத்திற்கே தொடர்பு இல்லாத ஆர்எஸ்எஸ் தலைமையிலான பா.ஜ.க. அரசு தொடர்ந்து மக்கள் விரோத அரசாக ஆட்சி புரிந்து வருகிறது. நாட்டை பாசிசம் சூழ்ந்து வருகிறது. இந்திய அரசியல்  அமைப்புச் சட்டம் அரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதிதான் குடியுரிமை திருத்தச் சட்டம் தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு எனும் திரிசூலத் தாக்குதல். எனவே வரலாற்று நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளான ஜனவரி 23ல் இந்திய நாடு  முழுவதும் பேரியக்கம் நடைபெற உள்ளது. இப்பேரி யக்கத்தில் சாதி, மதம், இனம், மொழி, மாநிலம் கடந்து நாட்டை... நாட்டு மக்களை நேசிக்கும் அனைவரும் ஒருங்கிணைந்துப் போராட உறுதி ஏற்போமாக!


 

;