tamilnadu

img

பன்முகத் தன்மை கொண்ட மகத்தான தலைவர்

ஒரு மகத்தான சிந்தனையாளர். வீரமிக்கசுதந்திர போராளி. இந்திய கம்யூனிஸ்ட்இயக்கத்தின் முதுபெரும் தலைவர். செயலாற்றல் மிக்க திறமையான கம்யூனிஸ்ட் என்று தோழர் ஸ்டாலினால் புகழப்பட்டவர் இந்திய தொழிலாளி வர்க்கத்தின் தன்னிகரற்ற தலைவரான பி.டி.ரணதிவே. மும்பையில் சாதி, மத பேதங்களை கடந்த சமூக சீர்திருத்த குடும்பத்தில் பிறந்தபி.டி.ரணதிவே பள்ளியில் படிக்கும் பொழுதுதனது குடும்பத்தினர் அன்றாடச் செலவுக்காக தனக்குத் தரும் காசுகளை சேர்த்துவைத்து தன்னுடன் படித்த சக தலித் மாணவர்களுக்கு புத்தகங்கள் வாங்குவதற்கும்எழுதுபொருள் வாங்குவதற்கும் செலவிட்டார். பம்பாய் பல்கலைக்கழகத்தில் முதுகலையில் பொருளாதார படிப்பில் அந்தமாகாணத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் பரிசுபெற்றார். அவரது படிப்பிற்கும் திறமைக்கும்பொருளாதார பேராசிரியராகவோ அரசாங்கத்தில் உயர் பதவியிலோ அமர்ந்து இருக்க முடியும். ஆனால் அவற்றையெல்லாம் உதறித்தள்ளி கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியராக ஆனார். தேசபக்த உணர்வும் தீவிரவாத சிந்தனையும் ஆட்கொள்ளப்பட்ட ரணதிவே ஒருபுதிய தத்துவத்தை தேடும் முயற்சியில் இறங்கினார். சமூக அமைப்பு முழுவதையும் முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும்என்ற முடிவுக்கு வந்தார். சி. ஜி.ஷா என்பவரால் அரசியல் தெளிவு பெற்றார். வர்க்கப் போராட்டம்தான் அனைத்து தொழிலாளர்களையும் ஒன்றுபடுத்தும். அது சாதி, மதப் பிரச்சனைகளை எல்லாம்கடந்தது என்ற முடிவுக்கு வந்தார். தொழிலாளர்களின் பொருளாதாரப் போராட்டங்கள் சாதி, மதங்கள் அனைத்துக்கும் அப்பாற்பட்டு நிற்கிறது. அது ஏகாதிபத்திய எதிர்ப்புபோராட்டத்திலும் அந்த மக்களை ஒன்றுபடுத்தும். சாதாரண மக்களின் வர்க்கப் போராட்டம் சாத்தியம் என்பதில் உறுதியாக நின்று போராடினார்.

தேசத் துரோக வழக்கு - சிறை வாழ்க்கை

1929ஆம் ஆண்டில் பம்பாயில் நடைபெற்ற பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டத்திற்கு வழிகாட்டிய தலைவர்களுள் இவரும் ஒருவர். அவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் கைது செய்யப்பட்ட அவர் செப்டம்பர் மாதத்தில் விடுதலையானார். அக்டோபர் மாதத்தில் ஆங்கிலேய அரசாங்கம் இந்து- முஸ்லிம் கலவரங்களை தூண்டிவிடுவதை கண்டித்து ரயில்வே தொழிலாளர் பத்திரிகையில் கட்டுரை எழுதினார். அதற்காக அவருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. 1934ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பஞ்சாலைத் தொழிலாளர் வேலைநிறுத்தம் துவங்கியது. இதையொட்டி ரணதிவேயும், பல தோழர்களும் கைது செய்யப்பட்டனர். அவர் சிறையில் இருக்கும்பொழுது அவர் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு இன்றையபாகிஸ்தானில்உள்ள ஹைதராபாத் (சிந்து) சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்தச் சிறையில் விளக்குகள் கிடையாது. மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரைஇருட்டில்தான் இருக்க வேண்டும். மிகமோசமான உணவு தரப்பட்டது. சிரமங்களை தாங்கிக் கொண்டு ரணதிவே கார்ல்மார்க்சின் மூலதனம் நூலின் மூன்று பகுதிகளையும், மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் கடிதப் போக்குவரத்து நூலையும் படித்து முடித்தார்.1936ம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையானார்.

மக்கள் யுத்தம்... 

1939ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதிதுவங்கிய இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து ஆங்கிலேய அரசாங்கம் ‘நேஷனல் பிரண்ட்’ ஏட்டை தடை செய்தது. தலைமறைவான ரணதிவே சில மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு ராஜஸ்தான்மாநிலம் தியோலி முகாம் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அரசியல் கைதிகள் உரிமைக்காக உண்ணாவிரதங்கள் மற்றும்போராட்டங்கள் நடத்தினார். 1941ஆம் ஆண்டு ஜுன் மாதம் 22ஆம் தேதியன்றுபாசிச ஜெர்மனியின் ஹிட்லர் சோவியத்நாட்டின் மீது படையெடுத்தான். இதைத் தொடர்ந்து இங்கிலாந்தும் சோவியத் நாடும் கூட்டு ஒப்பந்தம் செய்தன. ஹிட்லரை எதிர்த்து இரு நாடுகளும் கூட்டாகப் போரிடுவது என்று முடிவு செய்தன. இது இரண்டாம்உலக யுத்தத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ‘மக்கள் யுத்தம்’ என்று அழைக்கப்பட்ட இந்த யுத்தத்திற்கு இந்திய மக்கள் தங்கள் பங்கைஆற்றச்செய்ய வேண்டும் என்ற நிலையை உணர்த்தினார். சிறையிலிருந்த ரணதிவே இவற்றையெல்லாம் நன்கு ஆராய்ந்து மக்கள் யுத்தம் குறித்து ஒரு ஆவணம் எழுதினார். அது தலைமறைவாயிருந்த கட்சித் தலைமைக்கு அனுப்பப்பட்டது. தலைமை அதை ஏற்றுக்கொண்டு “மக்கள் யுத்தத்தில்இந்திய மக்கள் தங்கள் பங்கை ஆற்றச்செய்க” என்ற தலைப்பில் ஒரு தீர்மானத்தைவெளியிட்டது. இதைத் தொடர்ந்து ஆங்கிலேய அரசாங்கம் அவ்வாண்டு ஜுலை 21ஆம்தேதி சிறையில் இருந்த அனைத்து கம்யூனிஸ்ட் கைதிகளையும் விடுதலை செய்ய உத்தரவிட்டது.

கப்பற்படை எழுச்சி

1943ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு பம்பாயில் நடைபெற்றது. இதில் ரணதிவே கட்சியின் அரசியல் தலைமைக்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏராளமான கட்டுரைகள் எழுதினார். நாடு முழுவதும் சென்று ஏராளமான கூட்டங்களில் ஆவேசகரமான உரை நிகழ்த்தினார். 1946ஆம் ஆண்டில் இந்திய கப்பற்படை வீரர்கள்பெரும் எழுச்சியில் ஈடுபட்டனர். ரணதிவே அந்த வீரர்களுக்கு பம்பாய் தொழிலாளி வர்க்கத்தின் ஆதரவை திரட்டுவதற்கு பெரிதும் பாடுபட்டார். இரவு பகலாக கட்சி அலுவலகத்திலேயே தங்கியிருந்து போராடும் வீரர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைத் திரட்டி அனுப்பினார். பிப்ரவரி 22ஆம் தேதியன்று பம்பாயில்35 லட்சம் தொழிலாளிகள் பெரும் வேலை நிறுத்தம் செய்தனர். இதற்கு ஏற்பாடு செய்வதில் ரணதிவே முன்னின்றார். 1948ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில்கல்கத்தாவில் நடைபெற்ற கட்சியின் இரண்டாவது மாநாட்டில்பி.டி. ரணதிவே கட்சியின்பொதுச்செயலாளர் ஆனார். அதன் பின்னர்மகாராஷ்டிர மாநிலத்தில் கட்சிப் பணியாற்றகட்சியால் பணிக்கப்பட்டார்.1955ம் ஆண்டில் கட்சியின் மகாராஷ்டிரா மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ரணதிவே, சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கத்திற்கு பெரும் உத்வேகத்தை கொடுத்தார்.அந்த இயக்கமானது மொழிவழி அடிப்படையில் மகாராஷ்டிரம்பிரிக்கப்பட வேண்டும்என்ற பிரதான கோரிக்கையையும்கொண்டிருந்தது. இந்தப் போராட்டம் வெற்றிபெற்று தனி மகாராஷ்டிர மாநிலம் பிறந்தது.ரணதிவே உள்ளிட்ட நவரத்தின தலைவர்களால், 1964ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. அதன்மாநாட்டில் ரணதிவே கட்சியின் அரசியல் தலைமைக்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய தொழிற்சங்க மையம்

1970ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி அன்று (சிஐடியு) இந்திய தொழிற்சங்க மையம்கல்கத்தாவில் ஒரு பெரும் மாநாட்டில் உருவாக்கப்பட்டது. ரணதிவே அதன் தலைவராகவும் பி ராமமூர்த்தி அதன் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொழிற்சங்கங்களில் ஜனநாயகச் செயல்பாடு எப்போதும் இருக்க வேண்டும்என்று தொடர்ந்து பி டி ஆர் வலியுறுத்துவார். அவருடைய கூற்று இன்றும் பொருந்தும்.வகுப்புவாதம் மற்றும் சீர்குலைவு சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து எச்சரிக்கை செய்து கொண்டு இருப்பார். தொழிற்சங்கங்கள் ஒன்றுபட்டு இந்த அபாயத்தைஎதிர்கொள்ள வேண்டும் என்றும்எங்கெல்லாம் தொழிலாளிவர்க்கம் பலமாக இருக்கிறதோ அங்கெல்லாம் இடதுசாரி இயக்கமும்மார்க்சிய செல்வாக்கும் பலமாக இருக்கிறதோ அங்கெல்லாம்வகுப்புவாதிகள் எந்தவிதமான சேட்டையும் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு முறை தொழிலாளிவர்க்கம் இறங்கும்படி செய்யப்பட்டுவிட்டால்அது தேசிய ஒற்றுமையின் மிக பிரதானபாதுகாவலனாக விளங்கும். வகுப்புவாதிகளுக்கு எதிராக போராடும். வகுப்புவாத கலவரங்கள் நடக்கும்போது அது சக்தி வாய்ந்தமுறையில் தலையிட்டு அது வகுப்புவாதிகளை அடக்கும் என்று முழங்கினார்.இன்றைய மத்திய மோடி அரசாங்கம் ரயில்வே, பாதுகாப்புத் துறை, துறைமுகங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிலக்கரிச் சுரங்கங்களை இந்தியமுதலாளி வர்க்கத்தின் கொள்ளை லாபத்திற்காக தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. தொழிலாளர் விரோத முதலாளி ஆதரவு தொழிலாளர் சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. நிரந்தர தன்மையுள்ள தொடர்ச்சியான பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியிலமர்த்துவது குறித்து ஆரம்பத்திலேயே இனம் கண்டவர் பி.டி.ஆர்.தொழிலாளி வர்க்கம் எப்போதும் வெறும் பொருளாதாரக் கோரிக்கையோடு நின்றுவிடக் கூடாது. அதற்கு அப்பாலும் சென்று தேசிய ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும். சீர்குலைவு சக்திகளுக்கு எதிராகஈவிரக்கமற்ற போராட்டத்தை நடத்த வேண்டும் என்று பி.டி.ஆர் தொடர்ச்சியாக வலியுறுத்தினார்.

உழைக்கும் பெண்கள் அமைப்பு

பெண்களின் அரசியல் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில் சட்டமன்றம் மற்றும்நாடாளுமன்றத்தில் 33சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி போராடி வருகின்றஇன்றைய சூழ்நிலையில் பி. டி. ஆர்.பெண்களுக்கு ஆண்களைப்போல் சம உரிமைதர வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்து மதம் மற்றும் மனுதர்மம் போன்றவற்றை காட்டி விதவைகள் மறுமணம் செய்து கொள்ளக்கூடாது என்றபழமைவாதிகளின் கூற்றை கடுமையாக எதிர்த்தார் சிஐடியுவை உருவாக்கிய பின்அவர் ஒரு விஷயத்தை ஆழமாக வலியுறுத்தினார் போராட்டம் என்ற பிரதான நீரோடையில் பெண்கள் சேராமல் எந்த ஒரு தொழிலாளி வர்க்க இயக்கமும் அல்லது மக்கள் ஜனநாயக இயக்கமும் வெற்றி பெறமுடியாது என்று வலியுறுத்தினார். நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியவர். விமர்சனம், சுயவிமர்சனம் எனும்அடிப்படையில் தன் தவறுகளை திருத்திக்கொண்டு விமர்சனங்களை கூர்மையாகமுன்வைத்து அனைவருக்கும் வழிகாட்டியவர். சோவியத்தில்சோசலிசத்திற்கு பின்னடைவு ஏற்பட்டபோது, உலகில் எவர் மார்க்சிய பதாகைகளை கீழே போட்டாலும் மார்க்க்சிஸ்ட் கட்சி அதை உயர்த்திப் பிடிக்கும் என்று உறுதியிட்டு சொன்னவர் ரணதிவே. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல்பாசிசத்திற்கு எதிரான ஜனநாயக யுத்தம். எனவே மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைய பாடுபடுவோம் என்று பி. டி. ரணதிவே அவர்களின் நினைவு நாளில் உறுதியேற்போம்.


ந.ராஜா 

வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர், பிஎன்பி ஒன்றியம், கோவை


;