கோவை, டிச. 9 – வயிற்றுக்குச்சோறிடும் உழவர்கள் பக்கம் நாங்கள் நிற்கிறோம் என்பதை நிருபிக்கும் வகையில் கோவையில் வியாபாரிகள், தொழிலாளர்கள் பொதுமக்கள் தன்னெழுச்சியாக முழு அடைப்பு போராட்டத்திற்கு பேராதரவை அளித்துள்ளனர்.
மத்திய மோடி அரசின் வேளான் விரோத சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் உட்சமாய் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு கடந்த பத்து நாட்களுக்கு மேலாக லட்சக்கணக்கான விவசாயிகள் எழுச்சிகரமான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். கார்ப்ரேட்டுகளின் நலனே முக்கியம் என்கிற வகையில் விவசாயிகளின் நியாமான கோரிக்கையை பரிசீலிப்பதற்கு மோடி அரசு முன்வராத நிலையில் நாடு முழுவதும் டிசம்பர் 9 ஆம்தேதி பாரத் பந்த் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒருங்கினைப்புக்குழு அறைகூவல் விடுத்தது. இப்போராட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், வியாபாரிகள் சங்கம், தொழில் அமைப்புகள் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவை தெரிவித்தன. இது போராட்ட களத்தில் நிற்கிற விவசாயிகளுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. நாடு முழுவதும் பாரத் பந்த் போராட்டம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இதன்ஒருபகுதியாக உழவர்கள் பக்கம் நாங்கள் நிற்கிறோம் என்கிற வகையில் முழு அடைப்பு போராட்டம் கோவையில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
உழவர் சந்தைகளின் வாயிற்கதவு பூட்டப்பட்டும், 90 சதவீத ஆட்டோக்கள் இயக்காமலும் தங்களின் ஆதரவை தெரிவித்தனர். இதேபோன்று கோவைமாவட்டத்தில் உள்ள 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. சிஐடியு, தொமுச, ஏஐடியுசி, எம்எல்எப், ஐஎன்டியுசி உள்ளிட்ட பெரும் தொழிற்சங்கங்கள் இப்போராட்டத்தை ஆதரித்ததால் அரசு பேருந்துகள் குறைவான அளவிலேயே இயங்கியது. இதிலும் பொதுமக்கள் குறைவான அளவிலேயே பயணம் செய்தனர். காந்திபுரம் பகுதியில் செயல்படும் செல்போன் உதிரிபாக விற்பனையாளர்கள் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் கடைகள் அடைக்கப்பட்டன. எவ்வித நிர்பந்தமுமின்றி வியாபாரிகள் தன்னெழுச்சியாக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கடைகளை முழுமையாக அடைத்து மத்திய அரசுக்கு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.