முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதுநிலை மருத்துவ மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து, டீன் அலுவலகம் முன்பு முதுநிலை மருத்துவ மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவ மாணவா்கள் கூறுகையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு வழக்கமாக ஜனவரி மாதம் நடத்தப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் கலந்தாய்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணத்தால் செப்டம்பா் மாதம் தான் நீட் தோ்வு நடைபெற்றது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கான இடஒதுக்கீடு மற்றும் ஓபிசி இடஒதுக்கீடு குறித்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் உள்ளன. அதனால், மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை நடைபெறவில்லை. நீட் தோ்வு எழுதிய 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்தாய்வுக்காக காத்திருக்கின்றனா்.
இந்த ஆண்டு டிசம்பா் மாதம் வரை முதலாம் ஆண்டு மாணவா்கள் வராததால், ஏற்கெனவே இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கு பணி சுமையும், மன உளைச்சலும் அதிகமாகியுள்ளது. எனவே, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும் என இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.