கோவை சிறுமி வன்கொடுமை: குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கோவை துடியலூரை அடுத்த பன்னிமடையில் கடந்த மார்ச் மாதம் 7 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சந்தோஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா , சாட்சி விசாரணைகளின் அடிப்படையில் சந்தோஷ்குமார் குற்றவாளி என அறிவித்தார். இதைத்தொடர்ந்து பிற்பகலில் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதிராதிகா குற்றவாளிக்கான தண்டனை விபரத்தை அறிவித்தார். இதில் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு மரண தண்டனை, ஒரு ஆயுள் தண்டனை, 7 ஆண்டு சிறை ஆகியவற்றை ஏக காலத்தில் அனுமதிக்க வேண்டும் மேலும் ரூ.2000 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த குழந்தையின் தாயார் நீதிமன்றத்தில் வியாழனன்று தாக்கல் செய்த மனுவில் சந்தோஷ் குமார் ஒருவர் மற்றும் குற்றவாளி அல்ல. மேலும் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக டிஎன்ஏ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால் அந்த குற்றவாளியும் தண்டிக்கப்பட வேண்டும் குறிப்பிட்டிருந்தார். அந்த மனுமீது மேல் விசாரணை நடத்தவும் நீதிபதி ராதிகா உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி தலைமையில் மாதர் சங்க நிர்வாகிகள் தீர்ப்பை வாசிக்கப்பட்டவுடன் தீர்ப்பை வரவேற்று நீதிமன்ற வளாகத்தில் முழக்கங்களை எழுப்பினர்.
தீர்ப்பு குறித்து சிறுமியின் தாயார் செய்தியாளர்களிடம் கூறுகையில் தீர்ப்பை வரவேற்பதாகவும் மேலும் ஒரு குற்றவாளி இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளதால் சம்பந்தப்பட்டவரையும் கைது செய்து உரிய தண்டனை வழங்கினால் மட்டுமே இந்த தீர்ப்பை முழுமையாக நான் வரவேற்பதாக இருக்கும். அதேநேரத்தில் இனிவரும் காலங்களில் இதுபோன்ற பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எதிர்த்து மாதர் சங்கத்துடன் இணைந்து போராடுவேன். ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை எனது நீதிக்கான போராட்டத்தில் உடன் நிற்கும் மாதர்சங்கத்தினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் கூறுகையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்கவேண்டும் என்கிற உறுதியோடு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தி வந்தது. இதன் விளைவாகவே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். மாதர் சங்கத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இவ்வழக்கில் மற்றொருவர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதால் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தரவேண்டும்.