வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியறுத்தி தடையை மீறி கோவை பிஎஸ்என்எல் தலைமையகத்திற்குள் நுழைந்து மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசின் மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தலைநகர் டெல்லியில் கடந்த 6 நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதற்கு மாறாக கண்ணீர் புகை குண்டு, தண்ணீர் பீச்சியடிப்பு, தடியடி என மத்திய பாஜக அரசின் காவல்துறை விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவி விட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழகம் முழுவதும ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவை சிங்கை, கிழக்கு நகரக்குழுக்களின் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநபான் தலைமையில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் ஆவேசமடைந்து ஊழியர்கள் வேளாண் சட்டத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியபடி பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினரின் தடையை மீறி பிஎஸ்என்எல் அலுவலகத்திற்குள் நுழைந்து தரையில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், ஏ.ராதிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.மனோகரன், அஐய்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், சிங்கை நகர செயலாளர் வி.தெய்வேந்திரன், பீளமேடு நகர செயலாளர் கே.பாண்டியன் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்