tamilnadu

img

இனி மூட்டை தூக்குறதுக்கும் வழியில்லை

எஸ்.முத்துகிருஷ்ணன்- காய்கறி மார்க்கெட் கடைக்காரர்


500, 1000 ரூவா செல்லாதுன்னு அறிவிச்சப்பறம் தொழில் ரொம்ப நசிஞ்சு போச்சு. கடன் தொல்லை தாங்க முடியல. தலை நிமிறரொம்ப கஷ்டப்படறோம். பணப் புழக்கம் இல்ல. மக்களிடம் காசு இல்ல. இருந்தால்தானே காய்கறி வாங்க வருவாங்க. ஒரு கிலோ வாங்கற எடத்தில கால் கிலோ வங்கிறாங்க. இந்த நிலமையில இங்க இந்த மார்க்கெட்ல 800 கடைங்க இருக்கு. இத நம்பி 300 பேர் இருக்காங்க. தலைக்கு மேல கடனாயிருச்சி. இன்னக்கி சரியாகிடும், நாளக்கி சரியாகிடும்னு நாள எண்ணிட்டு இருக்கோம். ஆனா, ஒன்னும் விடிஞ்ச மாதிரி இல்ல..


மினி ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன்


ஆன் லைன் மார்க்கெட்டிங் வந்திருச்சு. போன் செய்தால் போதும் பொருட்கள் வீடு தேடி வருகிறது. இதுவும் தொழில் நசிவுக்கு ஒரு காரணம். மேலும் ஒரு லட்ச ரூபாய்வண்டிக்கு 18 ஆயிரம் இன்சூரன்ஸ் செலுத்த வேண்டியுள்ளது. இப்படி தினம், தினம் நெருக்கடியோட வாழ்க்கைய நகர்த்த வேண்டியிருக்கு.


லாரி புக்கிங் ஆபீஸ் ராஜீ ஓட்டுநர்


கோவையிலிருந்து சென்னை வரை சரக்கு வாகனம் செல்ல ரூ.8000 வரை சுங்க கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. சேலத்திற்கு சென்று வர ரூ.2000 வசூலிக்கப்படுகிறது. 32 ஆண்டுகளாக தொழில்லஇருக்கிறோம். மற்ற எந்த மாநிலத்திலயும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் மட்டும் தான் டீசல் விலை ரூ.3.50 அதிகம். லாரி தொழில்ல 3 வேளை சாப்பிட முடியாது. 2 வேளை தான் சாப்பிடறோம்.இங்க பாருங்க லாரி ஸ்டேண்டு சுத்தமா இல்ல. குப்பைல தான கிடக்குறோம். கழிப்பிட வசதி சரியாயில்ல. ரூ.15 ஆயிரத்துக்கு மேல போனா செக்தான் (காசோலை). ஆன்லைனில் போடறோம்பாங்க. லோடு இறக்கிய உடன் பணம் கிடைக்காது. 25 நாளுக்கு மேல வாடகை வராம காத்திட்டுருக்கோம். வீட்டுக்கு போக முடியல. இதில தேர்தல் வந்த பிறகு போலீஸ்காரங்க தொல்லை தாங்க முடியல.எவ்வளவு இருக்கு எடு, எடுங்கறாங்க. அவங்க எதிர்பார்க்கற மாதிரி இருந்தா நாங்க ஏன் குப்பையிலயும், கொல பட்டினியிலயும் கெடக்கணும். நல்லா சாப்ட்டு,குடும்பத்தோட இருக்கமாட்டமா?


அரிசி கடை உரிமையாளர் சங்க நிர்வாகி சுல்தான்


பூரா முடிஞ்சு போச்சு. மோடி வந்தப்புறம் சுத்தமா முடிஞ்சு போச்சு. ஜனங்களிடம் வாங்கும் சக்தி இல்ல.முதல்ல 75 கிலோ வாங்குனவங்க இன்னிக்கு 25 கிலோ மூட்டை தான் வாங்குறாங்க. 25 கிலோ மூட்டை வாங்குனவங்க இன்று 5 கிலோ, 10 கிலோக்கு மாறிட்டாங்க.அடித்தட்டு மக்கள் ரேசன் கடையில கிடைக்கிற அரசி கோதுமையவாங்கிக்கறாங்க. உணவு பழக்கம் மாறிப் போச்சு. காலையில கடைக்கு போயி ஒரு பாக்கெட் மாவு வாங்கி இட்லியோ, தோசையோ செய்து சாப்பிட்டுக்கறாங்க. மாலையிலயும், கோதுமையோ, தோசையோ சாப்டுக்கறாங்க. மதியம் ஒரு வேளைக்கு தான் சாப்பாடு. பணப்புழக்கம் சுத்தமா இல்ல. தேர்தல் வந்தப்பறம் தொழிலுக்கு பணம் கொண்டு போகமுடியல. அரசியல்வாதிய விட்றாங்க. இந்த 2 டேபிள் நிறைய சேம்பில் தான் இருக்கும். இன்னிக்கு டேபிளே காலியாக இருக்கு. பக்கத்து கடையில பேப்பர் படிக்கபோயிருந்தேன். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. நிறைய பேர் வியாபாரத்தை விட்டே போய்விட்டார்கள் என்றார்.


சகாப்தீன், மளிகை கடைக்காரர்


கடந்த 30 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறோம். கம்பு, சோளம், ராகி, தட்டப்பயறு, கொள்ளு, மக்காசோளம், மஞ்சள் சோளம் உள்ளிட்டவை விற்பனை செய்து வருகிறோம். இதில் சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில்லை. சில பொருட்களுக்கு வரியுள்ளது. இந்த வரி விதிப்பு மற்றும் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த பிறகு சமாளிக்க முடியவில்லை. அதற்கு முன்பு கடன்இல்லை. இன்று ரூ.10 லட்சம் வரைக்கும் கடன்காரனாகியுள்ளேன். முன்பெல்லாம், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து பொருட்கள் வாங்க வருவார்கள். ஜிஎஸ்டிக்குப் பிறகு சரக்குவாங்க அண்டை மாநிலத்தவர் எவரும் வருவதில்லை. எனவேதொழில் நலிவுக்கு காரணமான பிஜெபியும், எந்த உதவியும் செய்யாத அதிமுக அரசும் மாற வேண்டும்.


ஆண்டவர் லாரி புக்கிங் ஆபீஸ்


5 வருடத்திற்கு முன்பு இருந்த தொழில் இன்று இல்லை. ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, டேக்ஸ், இன்சூரன்ஸ் போன்ற பிரச்சனைகளால் தொழில் 20 வருடங்கள் பின்னால் போய்விட்டது. 10 லோடுஅனுப்பிய காலம் கடந்து இன்று 5 லோடுகளாககுறைந்து விட்டது. சின்ன சின்ன வண்டிகள்,கம்பெனிகள் காணாமல் போய் விட்டது. பெரிய நிறுவனங்கள் மட்டுமே நீடிக்க முடிகிறது. 10 வண்டிகளிலிருந்து வரும் வருமானம் இதன் பராமரிப்புக்கும், வரி கட்டவுமே சரியாகிவிடும். ஒரு வண்டி வருமானம் தான் மிஞ்சும். லாரி எப்சி காட்டும் போது ஒரு லட்சம் வரை செலவாகிறது. ஒரு வருடத்தில் 12 மாதங்களுக்கு கணக்கு போட்டால் கையிலிருந்து சுமார் ரூ.1.5 லட்சம்வரை போட வேண்டிய நிலையுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம் சென்று வரும் போது ரூ.30 ஆயிரம் வரை சுங்க கட்டணமாக பறிக்கப்படுகிறது. ஆகவே, டோல் கேட்களை அகற்ற வேண்டும். இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும். டீசல் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும். இதுக்கு முக்கியம் மோடி ஆட்சியை அகற்ற வேண்டும் என கூறுகிறார்.


தங்கவேல் (சுற்றுலா கார் ஓட்டுனர்)


இன்சூரன்ஸ் தொகை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.17 ஆயிரமாக இருந்தது. இன்னிக்கு 32 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. பர்மிட்போட ரூ.3000 செலவாச்சு. இன்று ரூ.6 ஆயிரமா மாறியுள்ளது. லைசென்ஸ் ரெனிவல் செய்ய 200, 400 லிருந்து ரூ.1500 ஆக உயர்ந்துள்ளது. எப்சிக்கு ரூ.2500 உயர்ந்தள்ளது. டீசல் விலை ஏறிக்கிட்டே போகுது. அதற்கேற்ப வாடகை ஏத்த முடியல. மக்களிடம் பணப் புழக்கம் இல்லை. காசு இருந்தால்தானே சுற்றுலா செல்வாங்க. நாளுக்கு நாள்நிலைமை மோசமாகி வருகிறது. 90 வண்டி இருந்தஸ்டேண்டுல இன்று 30 வண்டி தான் இருக்கு. ஆட்சி மாற வேண்டும். அப்போ தான் மோட்டார் தொழிலுக்கு விடிவு காலம் பிறக்கும்.


சுமைப்பணி தொழிலாளர் கார்த்திக்


தொழில் நிலைமை சரியில்லை. 400 ரூபா கூலி கிடைத்த இடத்தில் இன்று 200 ரூபா மட்டடுமே கிடைப்பதால் சிரமமாக உள்ளது. ஒரு வேலைக்கு லாயக்கில்லாதவனை மூட்டை தூக்கத்தான் லாயக்குன்னு சொல்வாங்க. அப்படி வெளியூரிலிருந்து இங்க மூட்ட தூக்க வந்தவருக்கு இப்ப 200 ரூபாய் கிடைப்பதே சிரமமாக உள்ளது. இதிலகுழந்தைகள வளர்க்கறது, ஸ்கூல் பீஸ், மளிகை சாமன், வீட்டுவாடகைன்னு எல்லாத்தையும்சமாளிக்கனும். ஏதாவது மாற்றம் வரணும். இல்லன்னா எதுவும் சமாளிக்க முடியாது.


எஸ்.கார்த்திகேயன் மினி ஆட்டோ ஓட்டுநர்


கடந்த 18 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். 50 ஆயிரம் ரூபாய் கையில் சேமிப்பு இருந்தது. மேலும் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஒரு செகன்ட் ஹேன்ட் ஆட்டோ வாங்கினேன். ஒரு நாளைக்கு 2000 ரூபாய்க்கு ஓட்டினால் தான் ஆள் கூலி, டீசல் செலவு மற்றும் வண்டி தேய்மானம் போக கடனை கட்ட முடியும்.இன்று ரூ.1000, 1200க்கு வண்டி ஓடுகிறது. இது சம்பளத்திற்கும், டீசலுக்குமே ஆகிறது. இதற்கு மேல் தாண்ட முடியவில்லை. இதனால் மேலும் கடன் வாங்க வேண்டிய நிலை தான் உள்ளது.


செல்வராஜ், சண்முகம், பழனிசாமி (சரக்கு மினி லாரி ஓட்டுநர்கள்)


30 ஆண்டுகளாக இந்த தொழிலில் உள்ளேன். டீசல் விலை நிலையாக இல்லை. டீசல் விலைஉயர்விற்கேற்ப வாடகை நிர்ணயிக்கமுடியவில்லை. விலைவாசி ஏறிவிட்டது. டேக்ஸ், இன்சூரன்ஸ் கட்டணம் ரூ.30 ஆயிரம், 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியால் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூருக்கு மாதம் 3, 4 வாடகை வரும். இப்போது அது இல்லாமல் போய் விட்டது. நீண்ட தூரம் செல்லும் வாடகைகள் வருவதில்லை. 40 வண்டிகள் இருந்த இடத்தில் இன்று 20 வண்டிகள் தான் உள்ளது. அதில் ஒரு வண்டி மாதத்தில்15 நாட்கள் ஓடுவதே சிரமமாக உள்ளது. 80 சதவிகிதம் தொழில் அழிந்து விட்டது.

இப்படி அனைத்து தரப்பினரையும் புலம்ப வைத்துள்ள  மோடி- எடப்பாடி அரசுகளுக்கு பாடம் கற்பிக்கும் நாள் ஏப்ரல் 18.;