tamilnadu

img

சென்னப் பட்டணத்தின் பிறந்த நாளை கணித்தவர் முத்தையா

சென்னை நகரின் திறமிகு முன்னோடி ஆய்வாளர்க ளில் ஒருவரான முத்தையா அவர்களின் மரணம் நிச்சயமாக ஆய்வுலகிற்கு பேரிழப்பாகும். அறிவியலுக்கும் வாழ்வியலுக்கும் பொருத்தமற்ற ஸ்தல புராணங்களையே நகர வரலாறாக சித்தரிக்கும் போக்கிற்கு இடையில், ஒரு நவீன நகரம் எத்தகைய வழியில் உருப்பெற்றது என்பதோடு அதன் பின்னணியில் இருந்த அரசியலையும் அத்தோடு பிரிக்க முடியாத அதன் வர்த்தக நோக்கங்களையும் பண்பாட்டியல் கூறுகளையும் வெளிப்படுத்துவது அவரது நகர வரலாற்றின் அடித்தளமாக இருந்து வந்தது. சென்னை நகரத்திற்குள் முத்தையா பிரவேசிக்கும் முன்னரே வேறு பலரும் நகரின் வரலாற்றை கூறும் முயற்சியில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். இம்முயற்சிகளில் குறிப்பிடத்தக்கவர் மறைந்த என்.எஸ். ராமஸ்வாமி. இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் துணையாசிரியராக பணியாற்றிய அவர் எழுபதுகளின் இறுதியில் தொடங்கி எண்பதுகளின் இறுதி வரை சென்னை நகரம் பற்றி பல்வேறு கட்டுரைகளையும் பத்திகளையும் எழுதி வந்தார். ஆய்வறிஞர்கள் அல்லது ஆர்வலர்கள் மட்டுமே அறிந்திருந்த நகர நிர்மாணம் பற்றிய பல்வேறு தகவல்களை செய்திகளை அவர் அனைவரும் அறியத்தக்க விதத்தில் சென்று சேர்த்தார். டால்பாய், லவ், பார்லோ போன்ற முந்திய நூற்றாண்டு நகர வரலாற்றாசிரியர்களின் ஆய்வுகளிலிருந்து பல்வேறு தகவல்களை அளித்ததோடு பல்வேறுபட்ட மனிதர்களின் உழைப்பில் உருவானது இந்நகரம் என்பதையும், அந்த அடிப்படையில் சென்னை மட்டுமின்றி எந்நகரும் அனைவருக்கும் சொந்தமானது என்பதையும் அவர் வற்புறுத்தத் தவறுவதில்லை. 

கர்நாடக நவாப்புகளைப் பற்றியும் சென்னை நகரம் உருவானதையும் அவர் எழுதியுள்ளார். இவை புத்தகங்களாகவும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. மகாபலிபுரம் பற்றி இவர் எழுதிய ஆய்வு நூல் இத்தகைய நூல்களில் ஆகச் சிறந்ததாக கருதப்படுகிறது. சிறப்பு வாய்ந்த தொல்லியல் ஆய்வாளர் சி.சிவராம மூர்த்தியின் மகாபலிபுரம் பற்றிய புத்தகத்திற்கு நிகரானதாகும் அது. அதே தருணத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் சென்னை நகரம் பற்றி அக்கறையுடன் பல்வேறு படங்களை வெளியிட்டு வந்ததோடு பத்திகளை எழுதி வந்த ஹாரி மில்லரின் நோக்கமோ வேறாக இருந்தது. ஒரு மிகச் சிறந்த ஒளிப்பட கலைஞரான இவர் நகரின் அவலங்களுக்கு நடைபாதைவாசிகளையும் பிச்சைக் காரர்களையும் மற்ற உதிரி உழைப் பாளிகளையும் காரணகர்த்தாவாக சித்தரித்து வந்தது என்பது அவரது காலனீய மனோபாவத்தின் மிச்ச சொச்சமே என்று தீர்க்கமாக கூற முடியும்.  என்.எஸ்.ராமசாமி பாரி நிறுவனம் உருவாகி 200 ஆண்டு நிறைவையொட்டி அதன் வரலாற்றை எழுதி வரும் தருணத்தில் 1987ல் காலமானார். அதன் பின்னர் அன்னாளில் டிடிகே நிறுவனத்தில் பணியாற்றி வந்த முத்தையா, என்எஸ்ஆர் குறிப்புகளின் அடிப்படையில் அவ்வரலாற்றை எழுதி முடித்தார். ஏற்கனவே 1981ல் முத்தையா மெட்ராஸ் டிஸ்கவர்ட் எனும் 160 பக்க புத்தகத்தை நேரடியாக வெளியிட்டிருந்தார். வீலர், டே ஆகியோரின் குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த ஆங்கில புத்தகத்தை ஈஸ்ட் வெஸ்ட் பிரஸ்தான் வெளியிட்டிருந்தது. இதே புத்தகம் பல்வேறு புதிய தகவல்களைக் கொண்டு 1987லும், பின்னர் 1992லும் வெளியிடப்பட்டது. பின்னர் 1999ல் விரிவான அளவில் மெட்ராஸ் ரி டிஸ்கவர்ட் என்று வெளியிடப்பட்டது. இதுவே 2009ல் சி.வி.கார்த்திக் நாராயணன் மொழிபெயர்ப்பில் சென்னை மறு கண்டு பிடிப்பாக வெளியாகியது. 

இவையன்றி நகர வரலாற்றுடன் இணைந்த பல்வேறு நிறுவனங்களின் வரலாற்றையும் முத்தையா எழுதியுள்ளார் என்பதை பெரும்பாலானோர் அறிந்திடார். நகர வரலாற்றோடு இணைந்த சிம்சன், ஸ்பென்சர்ஸ் நிறுவனங்கள் பற்றிய அவரது வரலாற்றுப் பதிவு முக்கியத்துவம் வாய்ந்தது. சென்னை துறைமுகக் கழகத்தின் 125வது ஆண்டையொட்டி கடலோடி நரசய்யாவுடன் இணைந்து உருவாக்கிய துறைமுக வெற்றிச் சாதனை ஒரு அசாதாரண முயற்சி என்றே சொல்ல முடியும்.  தமிழிலும் ஆங்கிலத்திலும் இப்புத்தகம் வெளியானது.இவையன்றி காஃபி டேபிள் வகையில் அஜய் குல்லரின் படங்கள் நிறைந்த மதராஸ் தி க்ளோரியஸ் சிட்டி, மதராஸ் தட் ஈஸ் சென்னை என்ற இரு புத்தகங்களும் அவரது நகரம் பற்றிய ரசனை உணர்வை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள் ளது. அவரது எழுத்து மட்டுமின்றி படங்களை தேர்வு செய்யும் விதமும் வித்தியாசமானதாகும்.  முன் சொல்லப்பட்ட புத்தகத்தில் உள்ள அஜய் குல்லரின் பின்னி ஆலை முகப்பு படம் எவரும் படம் பிடிக்கக்கூடியதுதான். ஆயின் அதன் உச்சியில் ஒரு காக்கை உட்கார்ந்திருப்பது பல்வேறு கற்பனைகளை சிறகடித்து பறக்க வைக்கக்கூடியது. இந்து ஆங்கில நாளிதழில் வாரந்தோறும் அவர் எழுதி வந்த பத்திகளின் ஒரு பகுதி தொகுக்கப் பட்டுள்ளது. நகரத்தின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும் அவரது பத்தி எழுத்து வாசிப்போரை நகரத்தை நேசிக்க வைக்கக்கூடியது. 1989 களில் அவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த மாதமிரு முறை பத்திரிக்கையான மதராஸ் ம்யூசிங்ஸ் நகரத்துக்கான பிரத்யேகமான டேப்லாயிட்டாக வெளிவந்தது. சிறீராம், ரஞ்சித், கார்த்திக் பட் போன்றோரின் கட்டுரைகள் நகரத்தை பல்வேறு பரிமாணங்களில் அணுகியவையாகும். இப்பத்திரிக்கையில் வெள்ளி விழவையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் முத்தையா எழுதிய “ ஃபைவ் ஸ்டெப்ஸ் டுவார்ட்ஸ் ய வாய்ஸ் ஃபார் மெட்ராஸ்’’ என்ற கட்டுரையை நகரத்திற்கான அவரது பிரகடனமாக கொள்ளமுடியும். 

2016ல் நிகழ்த்தப்பட்ட சென்னை பெருவெள்ளத்தில் அவர் சேகரித்து வைத்திருந்த அபூர்வமான ஆய்வுக் குறிப்புகள் கிட்டத்தட்ட அனைத்துமே அழிந்தொழிந்தது. இருப்பினும் மனந்தளர்ந்திடாது நகரத்தின் மேன்மைக்காக ஒப்பற்ற தனது பணிகளை மனந்தளராமல் விக்கிரமாதித்தனாகத் தொடர்ந்தார்.  வரலாற்றாய்வாளர் என்ற அடிப்படையில் அவர் பழம் பெருமைகளை சிலாகித்தவர் அல்ல. ஆயின் அதற்காக வரலாற்று சிறப்பு வாய்ந்த கட்டுமானங்களை அழித்தொழிப்பதை கடுமையாக எதிர்த்தவர். அவ்வாறே நகரின் வரலாற்றோடு இணைந்த பல்வேறு ஆங்கிலேயர்களின் பெயராய் அமைந்துள்ள தெருக்கள் நினைவிடங்கள் பெயரை மாற்றுவதையும் எதிர்த்தார். அதே தருணத்தில் நகர உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்தோர் நகரத்திலிருந்து அப்புறப்படுத்துவது குறித்து குறிப்பிடத்தக்க வகையில் பதிவேதும் இல்லாதது வருத்தமளிக்கிறது.  

இவரது முன் முனைப்பில்தான் சென்னப்பட்டணத்தின் பிறந்த நாள் நிர்ணயிக்கப்பட்டது. இது வேறு எந்த நகரத்திலும் நிகழாதது என்றே சொல்ல முடியும்.  சென்னை நகரம் பற்றி மக்கள் மத்தியில் அக்கறையை உருவாக்கும் நோக்கம் கொண்டோர் பலரும் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், சென்னை தினம் பற்றிய சிந்தனை ஏதுமின்றிதான் இருந்து வந்தனர். ஜே.டால்பாய் வீலர் என்பவரால் முதலில் தொகுக்கப்பட்ட நகர வரலாறு “மதராஸ் இன் ஓல்டன் டைம்” என்ற பெயரில் வெளியிடப்பட்டது. 1639 முதல் 1748 வரையிலான நிகழ்வுகளை இது விவரிக்கிறது. பின்னர் இதை அடிப்படையாகக் கொண்டு 1640 முதல் 1800 வரையிலான வரலாற்றுக் குறிப்புகளை விவரித்து ஹென்றி டேவிசன் லவ் என்பவரால் தொகுக்கப்பட்டது “வெஸ்டிஜெஸ் ஆஃப் ஓட் மெட்ராஸ்” என்ற பெயரில் வெளிவந்தது. பின்னர் 1921ல் அன்றைய தினம் சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த “மெட்ராஸ் டைம்ஸ்’ ஆசிரியர் க்ளைன் பார்லோ “தி ஸ்டோரி ஆஃப் மெட்ராஸ்” எனும் பதிப்பை வெளியிட்டார். 1939ல் சென்னை நகரம் உருவாகி 300வது ஆண்டையொட்டி பல்வேறு ஆய்வாளர்களின் கட்டுரைத் தொகுப்பொன்று பேராசிரியர் ராவ் பகதூர் சி.எஸ்.சிறீனிவாஸாச்சாரியால் தொகுக்கப்பட்டது. இவரே “தி சிட்டி ஆஃப் மெட்ராஸ்” எனும் புத்தகத்தையும் எழுதியுள்ளார். இந்த பதிப்புகள் எவற்றிலும் சென்னை நாள் பற்றிய தகவல்கள் ஏதுமில்லை என்றே சொல்ல முடியும்.  

ஆயின் நகரம் பற்றிய உணர்வை அக்கறையை உருவாக்கிடும் வகையில் நாளொன்று தேவையென்பதை உணர்ந்த அவர் நிர்ணயித்த நாள்தான் ஆகஸ்ட் 22. இதைத்தான் சென்னை உருவான தினமாக கொண்டாடி வருகிறோம். கிழக்கிந்திய கம்பெனியின் ஊழியரான பிரான்சிஸ் டே தளமொன்றை உருவாக்கிடும் நோக்கில் 1639 ஜூலை 27ம் நாள் சோழமண்டலக் கடற்கரையில் கால் பதித்தாலும் அந்நாளை தேர்வு செய்யாது ஆகஸ்ட் 22 அன்று இப்பிராந்தியத்தின் உரிமைக்காக சந்திரகிரியில் இருந்த வெங்கடகிரி மன்னரிடம் ஒப்பந்தத்தை உருவாக்கிய நாளை தேர்வு செய்யப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பிய போதிலும் அதன் குறியீட்டை அவரின் மரணத்திற்குப் பின்னரே உணர முடிகிறது.இறுதியாக முத்தையாவின் மறைவுச் செய்தி பல்வேறு நாளிதழ்களில் சம்பிரதாயமாக வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கில நாளிதழ்களில் சென்னையின் க்ரானிகிளர் என்று பதம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. க்ரானிகிளர் என்பதற்கு கால வரிசைப்படுத்தப்பட்ட வரலாற்று முறைத் தொகுப்பாளர் என்று ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கிலம் தமிழ் அகராதியில் பொருள் தரப்பட்டுள்ளது. ஆயின் நடைமுறையில் நகரை நேசித்த வரலாற்று ஆய்வாளரேயொழிய க்ரானிகிளர் என்பதற்குள் அடங்கக்கூடியவல்ல.

;