tamilnadu

img

முந்தைய அரசின் சாதனைகளுக்கு ரிப்பன் வெட்டியதே மோடியின் சாதனை சிபிஎம் கோவை வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் குற்றச்சாட்டு

கோவை, ஏப். 4 –

முந்தைய அரசால் நிறைவேற்றி முடிக்கப்பட்ட திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்தது மட்டுமே மோடியின் ஐந்தாண்டு ஆட்சியின் சாதனை. இவரின் ஐந்தாண்டுகளில் மக்களுக்கான திட்டங்கள் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை என கோவை சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் குற்றம் சாட்டினார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை மக்களவை தொகுதி வேட்பாளராக மார்க்சிஸ்ட் கட்சியின் பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். இவர் வியாழனன்று கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். கோவை மணீஸ் திரையரங்கம் முன்பு துவங்கிய வாக்கு சேகரிப்பு பிரச்சார பயணத்தை திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்தி துவக்கிவைத்தார். இதில் திமுகவின் குமரேசன், சாமி, காங்கிரஸ் கட்சியின் கணபதி சிவக்குமார், மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், சூர்யநந்தகோபல், சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், கொமதேக ஆர்.எஸ்.தனபால், வடிவேல், விடுதலை சிறுத்தைகள் மனோகரன், சிங்கை நாகராஜ், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்சி.பத்மபநாபன் மற்றும் கே.மனோகரன், வி.தெய்வேந்திரன், கே.பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இப்பிரச்சார பயணத்தில் ராமானுஜநகர், வரதராஜபுரம், நீலிக்கோணாம்பாளையம், ஒண்டிப்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.


முன்னதாக, கோவை இஎஸ்ஐமருத்துவ கல்லூரி முன்பு பி.ஆர்.நடராஜன் வாக்கு சேகரித்து பேசுகையில், மத்தியில் அமையவிருக்கிற புதிய அரசில் சிறுகுறுதொழில்களை பாதுகாக்கும் வகையில் ஜாப் ஆர்டருக்கு ஜிஎஸ்டி வரியை அறவே ஒழிப்போம். முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கு மட்டும் குறைந்தபட்ச வரியை நிர்ணயிப்போம் என்கிற வாக்குறுதியை நாங்கள் அளித்துவருகிறோம். மக்களோடு மக்களாக நாங்கள் இருக்கிற காரணத்தால் சிறுகுறு தொழில்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முழுமையாக அறிந்திருக்கிறோம். எங்களின் பிரச்சாரத்தில் நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் உண்மையானவை என அறிந்து தொழில்முனைவோர்கள் நேரில்வந்து ஆதரவை தந்து வருகின்றனர். இந்நிலையில் எதிர் தரப்பில்உள்ள வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டியை குறைப்போம் என்று வாக்குறுதி அளித்துவருகிறார். மக்களின் எதிர்ப்பும் எங்களின் பிரச்சாரமும் இவ்வாறுஎதிரணியை பேசவைத்திருக்கிறது. அப்படியென்றால் ஜிஎஸ்டியால் தொழில்கள் பாதித்துள்ளது என்பதை அவர் ஏற்றுக்கொள்கிறார். இப்போது இவர்கள் கொடுக்கும் வாக்குறுதி ஓட்டு வாங்குவதற்காக என்பதைமக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். மோடி அரசு கடந்த ஐந்தாண்டு காலத்தில் மக்களுக்கான எந்த திட்டங்களும் நிறைவேற்றவில்லை.


முந்தைய ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்தது மட்டும்தான் இவர்களின்சாதனை. இங்குள்ள இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனை நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 580 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் போராடி பெற்று இங்கு கொண்டு வந்த மருத்துவமனை மருத்துவக் கல்லூரியாகும். மோடி பதவியேற்றவுடன் கோவை வந்தவர், நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துநிதி ஒதுக்கீடு பெற்று கட்டிமுடிக்கப்பட்ட இந்த இஎஸ்ஐ மருத்துவமனை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இவர்களின் ஆட்சிக்காலம் முழுக்க ரூ.10 ஆயிரம் கோடிக்கு திட்டம் அறிவிப்பார்கள், ஆனால் வெறும் ஆயிரம் ரூபாய்க்கு அடிக்கல் நட்டி வைத்துவிட்டு சென்றுவிடுவார்கள். ஐந்தாண்டு காலம் முழுக்க இப்படித்தான் நடைபெற்றுள்ளது. எங்களுடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது என்றுஒரு திட்டத்தையும் உறுதியோடுஇவர்கள் சொல்ல முடியாது. இவர்கள் ஆட்சிக்காலம் முழுவதும் மக்கள் சொல்லென்னா துயரத்தை அனுபவித்தது மட்டும்தான் நடந்தது. ஒவ்வொரு நாளும் புதிய இந்திய, புதிய இந்தியா என்று எதைச்சொல்வார்களோ என்கிற படபடப்பிலேயே நாட்டு மக்களை பீதிக்குள்ளாக்கியதுதான் பாஜகவின் ஐந்தாண்டு சாதனை. இந்த மோசடித்தனமான மோடிஆட்சியை விரட்ட மக்கள் தயாரகிவிட்டார்கள். இனி இவர்களின் எந்த ஒரு பொய் வாக்குறுதியும் எடுபடாது. இவ்வாறு பி.ஆர்.நடராஜன் பேசினார்.

;