tamilnadu

img

குஜராத் ‘அறிவு’ - மனிதர்களுக்கிடையே கலப்பு இனப்பெருக்கம் : சங்கிகள் பாணி - சங்கர நாராயணன்

சாதி முறையையும், அதன் அடிப்படையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளையும் ஒழிக்க வேண்டும் என்றே சமூகச்
சீர்திருத்தவாதிகள் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளனர். ஆனால் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தைச்
(ஆர்எஸ்எஸ்) சார்ந்தவர்களுக்கு அது ஏற்கத்தக்கதாக இருக்கவில்லை. சாதி முறையை உறுதியாக நம்புகின்ற
ஆர்எஸ்எஸ், இந்தியர்களுக்கிடையே உயர்ந்த, தாழ்ந்த இனங்கள் இருப்பதாக நம்புகின்றது.

1960 டிசம்பரில் குஜராத் பல்கலைக் கழக மாணவர்களிடையே உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்த
குருவான எம்.எஸ்.கோல்வால்கர் "வர்ண அமைப்பு மூலமாகவே சொத்து மீதான கட்டுப்பாடுகளுக்கான
முயற்சிகளை ஒருவரால் மேற்கொள்ள முடியும். சமுதாயத்தில் சிலர் அறிவாளிகளாகவும், சிலர் உற்பத்தியில்
நிபுணத்துவம் கொண்டு செல்வத்தைச் சம்பாதிக்கக் கூடியவர்களாகவும், சிலர் உழைக்கும் திறனைக்
கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். இந்த வர்ண அமைப்பு இந்த பிரிவுகள் அனைத்தையும் சரியான
முறையில் ஒருங்கிணைத்து, தான் பரம்பரையாகச் சிறந்து விளங்குகிற செயல்பாட்டின் மூலமாக தன்னால்

இயன்ற அளவிற்கு சமுதாயத்திற்குச் சேவை செய்ய ஒருவருக்கு உதவுவதாகவே இருக்கின்றது" என்று
பேசினார்.

தன்னுடைய சிந்தனைக் களஞ்சியம் (1966) என்ற புத்தகத்தில் மீண்டும் சாதி முறையை ஆதரித்து கோல்வால்கர்
எழுதினார். ‘அறிவை விருத்தி செய்பவர் என்பதால் பிராமணர் அனைவரிலும் தலைசிறந்தவராகக்
கருதப்படுகிறார். எதிரிகளை அழித்ததன் காரணமாக சத்திரியர்களும் இணையாகக் கருதப்பட்டனர். விவசாயம்,
வணிகம் மூலம் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்கிற வைசியர்களும் யாருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல.
தங்களுடைய உழைப்பால் சமூகத்திற்குச் சேவை செய்யும் சூத்திரர்களும் முக்கியமானவர்களே’ என்று அந்த
புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் பிராமணர்கள், சத்திரியர்கள்,
வைசியர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய மதரீதியிலான கடமை சூத்திரர்களுக்கு இருப்பதாக தெளிவாகக்
கூறுகிறது. உயர்சாதியினருக்குச் செய்யும் சேவையை சமுதாயத்திற்காகச் செய்யும் சேவை என்று மிகவும்
புத்திசாலித்தனமாக கோல்வால்கர் தனது புத்தகத்தில் மாற்றிக் கூறுகிறார்.

குஜராத் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய உரையில் ‘கலப்பு இனப்பெருக்கச் சோதனைகளை நாம்
விலங்குகளுக்கிடையில் மட்டுமே செய்து வருகிறோம். ஆனால் மனிதர்களிடையே கலப்பு இனப்பெருக்கம்
குறித்த மிகுந்த தைரியமான சோதனைகளை நம்முடைய முன்னோர்கள் செய்திருக்கின்றனர். கலப்பு
இனப்பெருக்கத்தின் மூலமாக மனித இனத்தை மேம்படுத்தும் வகையில் வடக்கே இருந்த நம்பூதிரி
பிராமணர்கள் கேரளாவில் குடியேற்றப்பட்டனர். எந்தவொரு வகுப்பைச் சார்ந்த திருமணமான பெண்ணின்
முதல் குழந்தைக்கும் நம்பூதிரிப் பிராமணனே தந்தையாக இருக்க வேண்டும் என்றும், அதற்குப் பிறகே தனது
கணவன் மூலமாக அந்தப் பெண் குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் மிகத் தைரியமான சட்டம்
இயற்றப்பட்டது’ என்று அவர் குறிப்பிட்டுப் பேசினார். அவருடைய இந்த மாய்மாலப் பேச்சின் முழு
உரையையும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊதுகுழலான ஆர்கனைசர் பத்திரிகை 1961 ஜனவரி 2 அன்று
வெளியிட்டிருந்தது.

கோல்வால்கரின் கருத்துக்கள் இனவாதம், நிலப்பிரபுத்துவம், ஆணாதிக்கவாதம் கொண்டவையாகவே
இருக்கின்றன. இந்தியாவில் உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்றிருக்கிறது. கலப்பு இனப்பெருக்கம் மூலமாக
தாழ்ந்த இனத்தை முன்னேற்றலாம் என்று கோல்வால்கர் நம்புகிறார். வடக்கில் இருந்த பிராமணர்கள் குறிப்பாக
நம்பூதிரி பிராமணர்கள் உயர்ந்த இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தமையால், அவர்கள் கேரளாவில் இருந்த
தாழ்ந்த இன ஹிந்துக்களை மேம்படுத்துவதற்காக வடக்கில் இருந்து கேரளாவிற்கு அனுப்பப்பட்டனர்.
கோல்வால்கரைப் பொறுத்தவரை, கேரள ஹிந்துப் பெண்களின் கர்ப்பப்பைகள் எவ்விதப் புனிதத்தன்மையும்
அற்றவையாக, நம்பூதிரி பிராமணர்களோடு உடலுறவு கொண்டு வெறுமனே தங்கள் இனத்தை
மேம்படுத்துவதற்கான பொருள்களாக மட்டுமே இருந்தன.
கடந்த காலங்களில் ஆணாதிக்கம் நிறைந்த உயர்சாதிச் சமூகங்களில், புதிதாகத் திருமணமான பெண்கள் தங்கள்
முதல் இரவுகளை உயர்சாதி ஆண்களுடன் கழிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். கோல்வால்கர்
முன்வைத்த கோட்பாடு அதுபோன்ற காலம்கடந்ததொரு வழக்கத்தை ஆதரிக்கும் வகையிலேயே இருந்தது.
அவரது கோட்பாட்டின்படி நம்பூதிரி பிராமண பெண் ஒருவளோடு நம்பூதிரி பிராமணர் அல்லாத/சூத்திர ஆண்
ஒருவன் உறவு கொண்டு ஏன் தாழ்ந்த கேரள ஹிந்துக்களை மேம்படுத்த முடியாது? ஏனெனில், அவர்களைப்
பொறுத்தவரை தாழ்வான இனத்தைச் சேர்ந்தவர்கள் கறைப்படுத்த முடியாத அளவிற்கு உயர்ந்தவர்களாக
நம்பூதிரி பெண்கள் இருக்கிறார்கள். அவர்களால் நம்பூதிரிகள் அல்லாத பிராமணர்கள்கூட சூத்திரர்களைப்
போன்று மிகவும் தாழ்ந்தவர்களாகவே கருதப்படுகிறார்கள்.
ஆர்எஸ்எஸ்சின் இந்த புகழ்பெற்ற மனித கலப்பு இனப்பெருக்கத்திற்கு இப்போது மீண்டும் புத்துயிர்
அளிக்கப்பட்டுள்ளது. கர்ப்ப அறிவியல் கலாச்சாரம் (கர்ப்ப விஞ்ஞான் சன்ஸ்கார்) என்ற திட்டத்தின் மூலமாக,
பெற்றோர்கள் தங்களுடைய தேவைக்கேற்ப உருவாக்கப்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள ஆர்எஸ்எஸ்

அமைப்பின் சுகாதாரப் பிரிவான ஆரோக்கிய பாரதி உதவி வருகிறது. அவ்வாறான திட்டத்தின் மூலமாக
இதுவரையிலும் 450க்கும் மேற்பட்ட சிறந்த, உயரமான, அழகான செழுமையான குழந்தைகள் முன்கூட்டியே
திட்டமிடப்பட்டு, தேவைக்கேற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளன என்று அந்த அமைப்பு கூறுகிறது.

பத்தாண்டுகளுக்கு முன்னர் அந்த திட்டம் குஜராத்தில் தொடங்கப்பட்டு, 2015இல் தேசிய அளவிலான
நிலைப்பாட்டை அடைந்துள்ளதாக அந்த திட்டத்தில் உயர்பதவியில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். இரண்டாம்
உலகப் போருக்குப் பின்னர், இருபது ஆண்டுகளுக்குள் ஆயுர்வேத நடைமுறைகளைக் கொண்டு இது போன்ற
குழந்தைகளை உருவாக்கிய ஜெர்மனியின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டே தங்களுடைய திட்டம்
உருவாக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தேவைக்கேற்ப உருவாக்கப்பட்ட சரியான குழந்தைகளின் மூலமாக, பெண்கள் சிறந்ததொரு
சந்ததியை உருவாக்க வேண்டும் என்பதே அந்த திட்டத்தின் நோக்கமாக இருக்கின்றது. கர்ப்பத்திற்கு முன்பும்,
பின்பும் என்று இரண்டு பகுதிகளாக அந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அந்த திட்டத்தில் பங்கு பெறுகின்ற
பெற்றோருக்கு மூன்று மாத கால சுத்திகரிப்பு தேவைப்படுகிறது. அவர்கள் உடலுறவு கொள்வதற்கான காலம்
கிரக அமைப்புகளால் முடிவு செய்யப்படுவது, கருவுற்ற பிறகு உடலுறவை முழுமையாகத் தவிர்ப்பது, உணவு
ஒழுங்குமுறையுடனான நடைமுறைகளும் அதில் உண்டு. அழகான, உயரமான குழந்தைகளை

உருவாக்குவதற்கான திட்டத்தின் நோக்கங்களைப் பரப்புவதற்கான கூட்டங்கள் தில்லி, மும்பை, உடுப்பி,
காசர்கோடு, விசாகப்பட்டினம், விஜயவாடா ஆகிய இடங்களில் நடைபெற்றிருக்கிறது. 2020ஆம் ஆண்டுக்குள்
இந்த திட்டத்தின் மூலமாக ஆயிரக்கணக்கான குழந்தைகளை உருவாக்குவது என்பது இலக்காக
கொள்ளப்பட்டிருக்கிறது.
‘ஆரியர்களே மேலானவர்கள்’ என்ற நம்பிக்கை ஹிட்லரிடம் இருந்தும், ஜெர்மனியின் நாஜி கட்சியிடமிருந்தும்
ஆர்எஸ்எஸ் அமைப்பால் கடனாகப் பெறப்பட்டது. ஜெர்மனியின் அதிபராக வருவதற்கு முன்பே அடால்ப்
ஹிட்லர் இனம் குறித்த கருத்துக்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக இருந்தார். இனத்தூய்மை
குறித்தும், ஜெர்மானிய இனத்தின் மேன்மை மீதும் அவர் அதீத நம்பிக்கை கொண்டவராக இருந்தார்.
ஜெர்மானிய இனத்தை ‘ஆரியன் மாஸ்டர் இனம்’ என்றே அவர் விவரித்தார். மிக விரைவிலேயே இந்த
உலகத்தை ஆட்சி செய்யப் போகின்ற ஆரிய இனம் மிகவும் தூய்மையுடன் இருக்க வேண்டும் என்று அவர்
அறிவித்தார். ஹிட்லரின் கருத்துப்படி சிறந்த ‘ஆரியன்’ என்பவர் இளஞ்சிவப்பு நிறத்துடன் நீலக் கண் கொண்டு
உயரமாக இருப்பவர் ஆவார்.

ஹிட்லரும், நாஜிக்களும் அதிகாரத்திற்கு வந்தபோது, ​​இதுபோன்ற நம்பிக்கைகள் அனைத்தும் அரசாங்கத்தின்
சித்தாங்களாக மாறி பொதுவெளியில் சுவரொட்டிகளில், ரேடியோவில், திரைப்படங்களில், வகுப்பறைகள்,
செய்தித்தாள்களில் பரப்பப்பட்டன. தாழ்ந்தவர்கள் எனக் கருதப்படுகின்ற மக்களின் இனப்பெருக்கத்தைக்
கட்டுப்படுத்துவதன் மூலமாக மனித இனத்தை மேம்படுத்த முடியும் என்று நம்பிய ஜெர்மன்
அறிவியலாளர்களின் துணையோடு தங்களுடைய சித்தாந்தத்தை நாஜிக்கள் நடைமுறைக்குக் கொண்டு
வந்தனர். 1933ஆம் ஆண்டு தொடங்கி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை
சிகிச்சைகளைச் செய்ததன் மூலம், அவர்களை ஜெர்மன் மருத்துவர்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள
இயலாதவர்களாக்கினர்.

அழகான, உயரமான குழந்தைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஆர்எஸ்எஸ்சின் இந்தத் திட்டம்,
ஆரியன் மாஸ்டர் இனத்தை உருவாக்க நாஜிக்கள் மேற்கொண்ட ‘வாழ்வின் வசந்தம்’ (லெபன்ஸ்பார்ன்-
ஸ்பிரிங் ஆஃப் லைஃப்) என்ற திட்டத்தோடு நேரடியாக தொடர்புடையதாக இருக்கிறது. நாஜி
தத்துவார்த்தவாதியும், தலைவருமான ஹென்ரிக் ஹிம்லரின் நேரடி மேற்பார்வையில் தூய ஆரிய இனக்
குழந்தைகளை உருவாக்கும் வகையிலான லெபன்ஸ்பார்ன் திட்டத்தின் கீழ், தூய ரத்தத்தைக் கொண்ட
பெண்கள் அழகான, உயரமான ஆரிய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று
ஊக்குவிக்கப்பட்டனர். அதன் மூலமாக, ஜெர்மனியில் சுமார் 8,000 குழந்தைகள், நார்வேயில் 12,000
குழந்தைகள் பிறந்தன. ஆனால் இவ்வாறு பிறந்த குழந்தைகளில் பெரும்பாலானவை அழகாக, உயரமாக,
இளஞ்சிவப்பு நிறத்துடன் வளரவில்லை என்பதே உண்மை. ஒருபுறம் தூய ஆரியக் குழந்தைகளை
உருவாக்குவது, மறுபுறம் யூதர்களைப் போன்ற ஆரியர்கள் அல்லாதவர்களைக் கொல்வது, பரம்பரை
நோய்களைக் கொண்ட மக்களுக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை செய்வது போன்ற செயல்களைக்
கொண்டிருந்த கொடூரமான இனக் கொள்கையின் ஒரு பகுதியாகவே அந்த திட்டம் அமைந்திருந்தது.

இனம் என்ற கருத்து அறிவியலில் மறைந்து போயிருந்தாலும், இனமேம்பாட்டியல் முறையில் குழந்தைகளை
உருவாக்கிக் கொள்வது, கடந்த ஏப்ரல் மாதம் ஆர்எஸ்எஸ்-பாஜக தலைவர் தருண் விஜய் திராவிட மொழி
பேசுகின்ற இந்தியர்களை கறுப்பர்கள் என்று கூறியது போன்ற நிகழ்வுகள் ஹிந்துத்துவக் கொள்கைகளுக்குள்
அதுபோன்ற கருத்து இன்னமும் வாழ்ந்து கொண்டிருப்பதையே நமக்கு நினைவூட்டுகின்றன. ஆர்எஸ்எஸ்
தலைவர்களிடம் முஸ்லீம்கள் அல்லது கிறிஸ்துவர்களைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கின்ற கருத்துக்களை
மட்டுமல்லாது, ஹிந்துக்கள் குறித்து கொண்டிருக்கும் இதுபோன்ற அருவருக்கத்தக்க கருத்துக்களைப் பற்றியும்
இந்திய மக்கள் கேள்வி எழுப்ப வேண்டிய நேரமிது.
http://frontierweekly.com/views/sep-17/29-9-17-Human%20cross-breeding.html
நன்றி:ஃப்ரான்டியர்வீக்லி
தமிழில்: தா.சந்திரகுரு

;