கடலூர், ஏப். 4-
ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள கடலூர் மஞ்சைநகர் மைதானத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என கடலூர் குடியிருப்போர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கடலூரின் மையப்பகுதியில், பழைய ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே மஞ்சை நகர் மைதானம் உள்ளது. மிகப் பழமையானதும், பாராம்பரியமானதாகும். பல்வேறு வரலாற்று சிறப்புகளை இந்த மைதானம் பெற்றுள்ளது. மாநாடுகள் பொதுக்கூட்டங் கள், அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் என ஆயிரக்கணக்கில் நடந்துள்ளன. கடலூர் மஞ்சை நகர் மைதானம் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. சுற்றுச் சூழல் பெரிதும் பாதிக்கப்பட் டுள்ளது. குப்பை கிடங்காக மாறி வருகிறது.மைதானத்தை சுற்றிலும் 4 இடங்களில் கழிப் பறைகள் கட்டி உள்ளனர். குப்பைகளையும் கொட்டி வருகின்றனர். கட்டிட கழிவுகளையும் கொட்டி வருகின்றனர். தட்டிக் கேட்க வேண்டிய நகராட்சி நிர்வாகம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.மஞ்சை நகர் மைதானம் கிருத்துவ பள்ளி அருகே காலியாக இருந்த இடத்தில் பொதுநல அமைப்புகள் மரம் நட்டு பராமரித்து வந்தன. அந்த மரங்கள் அனைத்தும் வெட்டப் பட்டு அங்கு ராமசாமி படையாட்சியார் மணி மண்டபம் கட்டியுள்ளனர். இம்மரங்களை வெட்டுவதற்கு சாராட்சியரின் அனுமதி பெற்றார்களா என தெரியவில்லை.அந்த மைதானத்தின் அருகாமையில் ஆளும் கட்சியின் ஆதரவு ஒப்பந்ததாரர் கான்கிரீட் கலவை பிளான்ட்ஐ நிறுவினார். இதற்கு நகராட்சி நிர்வாகம் எப்படி அனுமதி தந்தது என்பதுதான் புரியாத புதிர். நகரின் மையமான பகுதியில் அன்றாடம் ஏராளமான பொது மக்கள் காலை,மாலை நடைபயிற்சி செய்யும் நடைபாதை அருகில் இந்த பிளாண்ட்டை நிறுவி அதன் தூசுகள் நடைப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை பாதிக்கிறது.இதுகுறித்து நகராட்சிகளின் அரசு செயலாளருக்கு கடலூர் அனைத்து குடியிருப் போர் நலச் சங்கங்களின் சார்பில் பொதுச் செயலாளர் எம்.மருதவாணன் அனுப்பியுள்ள புகார் மனுவில், ஆளும் கட்சியினரின் ஆதரவோடு தவறான பாதையில் கடலூர் நகராட்சி நிர்வாகம் செல்வதை அரசும், மாவட்ட நிர்வாகமும் கண்டும் காணாமலும் உள்ளது கவலையளிக்கிறதுதனியார் நிறுவத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் குளிப்பதற்கு தொட்டிகள் கட்டியுள்ளனர். கழிப்பறை, கழிவு நீர் கால் வாய் என மைதான நிலத்தை தங்களின் சொந்த இடம் போல் சேதப்படுத்தி வருகின்றனர்.கான்கிரீட் கலவைகள் தயாரிக்க மண், கருங்கள் ஜல்லிகளை நிரப்பி மைதானத்தை சேமிப்பு குடோனாக மாற்றியுள்ளார்கள். இதற்கு நகராட்சி நிர்வாகம் எப்படி அனுமதி அளித்தது? ரிலையன்ஸ் நிறுவன ஒப்பந்த பணிகளுக்காக எந்தவித கட்டணமும் இல்லாமல் வருட கணக்கில் பைப்புகளை குவித்து உள்ளார்கள். அனைத்து தனியார் பள்ளி வாகனங்கள் ஆம்னி பேருந்து, தனியார் வேன், வாடகை கார்களை அன்றாடம் நிறுத்தும் இடமாகவும் மாறியுள்ளது.கடலூர் மஞ்சை நகர் மைதானம் முழுவதையும் இப்படி சூறையாடி வருவதை கண்டும் காணாதது போல செயல்படும் நகராட்சி நிர்வாகம் அதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மைதானத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.