கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் 6-வது நாளாக கனமழை பெய்து வருவதால், பொது மக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.வங்கக்கடலில், உருவான புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 6 தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
தென்பெண்ணை, பழைய கொள்ளிடம், கெடிலம் உள்ளிட்ட ஆறுகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு மேல், விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதியில் இருந்து பொது மக்கள் பலர் முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.மேலும், பொதுமக்கள் பலர் தங்களது வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் வடியாமல் அப்படியே தேங்கி உள்ளது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.