ஒடிசாவில் லான்ஜிகர் பகுதியில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான அலுமினிய சுத்திகரிப்பு ஆலை 250 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஒடிசாவின் நியாம்கிரி மலைப்பகுதியில் பாக்ஸைட் தாதுவை வெட்டியெடுக்க வேதாந்தா குழுமம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதை எதிர்த்து அப்பகுதி பழங்குடி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு தரப்பினர், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி பிரதான வாயிலில் நேற்று 40க்கும் மேற்பட்டோர் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை ஓஐஎஸ்எப் போலீஸார் அப்புறப்படுத்த முயன்றபோது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தியதில் போராட்டக்காரர்களில் ஒருவரும், ஒடிசா தொழில்துறை பாதுகாப்பு படை போலீஸ் ஒருவரும் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர்.
தற்போது, லான்ஜிகர் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆலைக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.