tamilnadu

img

தமிழக நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்விக்கு மத்திய அமைச்சர் இந்தி மொழியில் பதில் அளிப்பதா? மத்திய அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை:
தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்விக்கு இந்தி மொழியில் பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் மற்றும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் அண்மையில் சிஆர்பிஎப்துணை மருத்துவப் பணி நியமனங்களுக்கான தேர்வு மையங்களை தமிழகத்தில் அமைக்க  வேண்டும் என கோரிக்கை விடுத்து அனுப்பிய கடிதத்திற்கு மத்திய  உள்துறை இணையமைச்சர் நித்யானந்தராய் இந்தி மொழியில் பதில் கடிதத்தை  அனுப்பியுள்ளார். இது சட்டத்தையும், நாடாளுமன்ற நடைமுறைகளையும் அப்பட்டமாக மீறுகிற ஒரு செயலாகும்.

தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் அலுவல் மொழியாக இந்தி  திணிக்கப்பட மாட்டாது  என அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவும், அதற்கு பிறகு பிரதமராக  இருந்த லால் பகதூர் சாஸ்திரியும் உறுதி அளித்துள்ளனர். மேலும் 1967ல் அலுவல் மொழிச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் மூலம் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களாலும் இது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 1976 அலுவல் மொழி விதிகள் அடிப்படையிலும் இது மீண்டும் உறுதி செய்யப்பட்டது. மேலும் அதே விதிகள் “சி” பிரிவில் இடம் பெற்றுள்ள  பகுதியில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங் களுக்கான மற்றும் அம்மாநிலங்களைச்  சேர்ந்த அலுவலகங்கள், தனி நபர்களுக்கான  மத்திய அரசு அலுவலகங்களின் கடிதப் பரிமாற்றங்கள் ஆங்கிலத்திலேயே அமைய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.

மாநிலங்களுக்கான அலுவல் மொழிதொடர்பான உரிமைகள் இத்தகைய அடிப்படையில் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் தமிழகத்தைச் சார்ந்த  நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் அவர்களின் கடிதத்திற்கு  இந்தியில் பதில் தருவதான  மத்திய உள்துறை இணையமைச்சரின் நடவடிக்கை இச்சட்ட விதிகளை அப்பட்டமாக மீறுவதாகும்  என்பதோடு மிகுந்த  கண்டனத்திற்குரிய ஒன்றாகும்.   இந்தியா “வேற்றுமையில் ஒற்றுமை” என்கிற பன்மைத்துவ பண்பை பாதுகாக்கிற மேன்மையான  வரலாற்றுப் பெருமிதம் உள்ளநாடாகும். அத்தகைய பார்வை அரசாங்கத் தின் ஒவ்வொரு  நகர்விலும்  வெளிப்பட வேண்டும். இதுவே நாட்டின் ஒற்றுமையை, கூட்டாட்சி முறைமையை வலுப்படுத்துவதாய் அமையும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்வதோடு மத்தியஅமைச்சரக  அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களைத் தந்து தமிழ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடிதங்களுக்கு, ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வருவதைப்  போலவே ஆங்கிலத்திலேயே பதில் தருவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.