கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து
மதுரை, ஜன. 7- தமிழ் இலக்கிய உலகில் தீவிரமாக இயங்கி வரும் எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசனுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் உயரிய விருதான ‘இயல்’ விருது 2019 அறிவிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2019ம் வருடத்திற்கான இயல் விருது என அழைக்கப்படும் தமிழ் இலக்கிய வாழ்நாள் சாத னையாளர் விருதை 1989ல் இருந்து இன்று வரை தமிழ் இலக்கிய உலகில் தீவிரமாக இயங்கிவரும் கவிஞரும், எழுத்தாளரும் அரசியல்வாதியுமான சு. வெங்கடேசன் அவர்களுக்கு வழங்குவதில் பெருமையடைகிறது.
இவர் மதுரை மாவட்டம் ஹார்விபட்டியில் சுப்புராம் மற்றும் நல்லம்மாள் தம்பதியினருக்கு பிறந்தவர். பன்னிரெண்டாம் வகுப்பு விடுமுறை யில் தனது முதல் கவிதை நூலினை வெளி யிட்டுள்ளார். இளங்கலை வணிகவியல் படித்த வர். இதுவரை 4 கவிதை தொகுப்புகள், 5 கட்டுரை தொகுப்புகள், 2 புதினங்கள், ஒரு கிராஃபிக் நாவல் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய முதல் நாவலான காவல் கோட்டம் நூலுக்கு 2011ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப் பட்டது. இந்த விருதை பெற்ற எழுத்தாளர்களில் இளம் வயதினர் சு. வெங்கடேசன் என்ற பெருமை அவருக்குண்டு. முதல் நாவலுக்கே இவ்விருதினைப் பெற்ற முதல் எழுத்தாளர் இவரே. இந்நாவல் மதுரையின் காவல் உரிமையை மையப்படுத்தியது. சுமார் 600 ஆண்டுகாலப் பயணத்தினூடே மதுரையின் காவல் உரிமை கைமாறிய கதையை விரிவாக பேசுகிற நாவல். காலனிய அரசதிகாரமும் மக்கள் திரளின் உரிமையும் நேர்நிலையில் நின்று மோதும் போது உருவாகும் கொந்தளிப்பை பெரும் சித்திரமாக விரித்துள்ள நாவல். வசந்த பாலன் இயக்கத்தில் 2012ல் வெளிவந்த அரவாண் திரைப்படம் இந்த நாவலை அடிப்படை யாகக் கொண்டது. காவல் கோட்டம் பற்றி வெங்கடேசன் இவ்வாறு சொல்கிறார்: ‘‘நாவல் எழுதத் தொடங்கியபோது என் மூத்த மகள் யாழினி பிறந்தார். எழுதி முடித்தபோது அவர் என் தோளுக்கு இணையாக வளர்ந்திருந்தார். நாவலுக்காக 10 ஆண்டுகள் உழைத்தேன். இதற்காக நான் இழந்ததது அதிகம்.’’
இவர் ஆனந்த விகடனில் 111 வாரங்கள் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரியின் தொட ரை வாசகர்கள் தமிழக இலக்கிய சரித்திரத்தில் இதுவரை காணாத வகையில் வரவேற்றார்கள். உலகெங்கும் இருந்து வாசகர்கள் அடுத்த வாரத்துக்காக ஏங்கி காத்திருந்தார்கள். இவருடைய புகழ் தமிழ் உலகம் முழுக்க பரவ இந்த நாவல் காரணமாகவிருந்தது. சங்க இலக்கியத்தில் சில வரிகளில் அறியப்பட்ட வள்ளலும், வேளிர்குலத் தலைவனுமான பாரி யை சேர சோழ பாண்டிய மன்னர் மூவரும் ஒன்றிணைந்து போர்தொடுத்தும் தோற்கடிக்க முடியாத கதையை இந்த நாவல் சொல்கிறது. இதனுடைய வெற்றி இன்று தமிழ் உலக மெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இவர் மார்க்ஸிய பொதுவுடமைக்கட்சியின் முழுநேர ஊழியர். அத்துடன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர். 2019ல் நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மதுரைத் தொகுதியில் மார்க்ஸிய பொதுவுடமைக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளால் வெற்றியீட்டியவர். இவர் மக்களைக் கவர்ந்திழுக்கும் பேச்சாற்றல் கொண்டவர். இவருடைய நாடாளுமன்ற உரைகள் புகழ் வாய்ந்தவை. இவர் நாடாளுமன்றத்தில் தமிழின் மேன்மைக்காக வைத்த கோரிக்கைகளும், அவதானிப்புகளும் பிரசித்தமானவை: ‘தமிழ் நாகரிகம் உருவான காலத்தை பள்ளிப் பாடப் புத்தகத்தில் கி.மு.ஆறாம் நூற்றாண்டு என மாற்ற வேண்டும்.’ ‘சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் ஒருவித போட்டியும் கிடையாது. சமஸ்கிருதம் தமிழிலும் பார்க்க 700 வருடங்கள் இளமையானது. நாம் ஏன் இளமையான ஒரு மொழியுடன் சண்டை போடப்போகிறோம்.’ சு.வெங்கடசேன் தமிழ் நாட்டிலும், வெளி நாடுகளிலும் மேடைகளில் தமிழின் மேன்மை யை பரப்பி வருகிறார். தமிழின் தொன்மை பற்றியும், கீழடி ஆய்வு தரவுகளின் தாக்கம் பற்றியும் தொடர்ந்து விழிப்புணர்வு சொற்பொழிவுகள் ஆற்றுகிறார். இவர் தன் மனைவி பி.ஆர்.கமலாவுடனும், பிள்ளைகள் யாழினி, தமிழினி உடனும் மதுரையில் வசித்து வருகிறார். இயல் விருது வழங்கும் விழா டொராண்டோவில் 2020 ஜூன் மாதம் வழமைபோல நடைபெறும். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து
சு.வெங்கேடசன் எம்.பி.க்கு இயல் விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இலக்கிய உலகிலும் அன்றாட மக்கள் நலனுக்கான அரசியல் பணியிலும் இடைவிடாமல் இயங்கி வரும் சு.வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆவார்; அவரது இலக்கியப் பணியை அங்கீகரித்து தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதாக போற்றப்படுகிற கனடா இயல் விருது அறிவிக்கப்பட்டிருப்பதை மகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் வரவேற்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.