திருப்பூர், ஜன. 3- திருப்பூர் அருகே இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கே.கணேசன் அபார வெற்றி பெற்றார். திருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இடுவாய் கிராம ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் கே.ரத்தினசாமி 1996, 2001 ஆகிய இரு முறை ஊராட்சிமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றினார். அதுவும் மக்கள் முன்னணி என்ற பெயரில் உள்ளூரின் ஆதிக்க சக்திகள், அனைத்துக் கட்சியினரை சேர்த்துக் கொண்டு மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக நின்ற போதும், மக்களுடன் உண்மையான கூட்டணி கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் கே.ரத்தினசாமி அசைக்க முடியாத சக்தியாக வெற்றி பெற்றார். அப்பதவிக்கு உரிய குறைந்தபட்ச அதிகாரத்தை பயன்படுத்தி நேர்மையாக, ஊழல் இல்லாமல் ஒரு கம்யூனிஸ்டாக அனைத்துத் தரப்பு ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு சேவை செய்தவர் ரத்தினசாமி.
இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்க சக்தியைச் சேர்ந்தோர் அவரை 2002ஆம் ஆண்டு சதிச் செயல் செய்து படுகொலை செய்தனர். அவரை படுகொலை செய்தவர்கள் அவரின் இரண்டு கைகளை கட்டி, அவரது வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மரத்தில் தொங்க விட்டிருந்தனர். மேலும், அவரை கொலை செய்த கயவர்கள் அதற்கான காரணங்களையும் பட்டியலிட்டிருந்தார்கள். இதில், தலித்துகளுக்கு ஆதரவாக இருந்தது, கம்யூனிஸ்ட்டாக இருந்தது, பஞ்சாயத்துத் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டது என எழுதப்பட்டிருந்தது. இந்த படுகொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 17 ஆண்டுகள் கடந்து இன்றளவும் இடுவாய் மக்கள், தியாகி ரத்தினசாமியை போற்றி வருகின்றனர். இந்நிலையில், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இடுவாய் ஊராட்சி மன்ற தலைவராக மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் கே.கணேசன் போட்டியிட்டார். வியாழனன்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், கே.கணேசன் 1028 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இதேபோல் இடுவாய் ஊராட்சி மன்ற 1 ஆவது வார்டில் ஷர்மிளா, மூன்றாவது வார்டில் ஈஸ்வரி, 6 ஆவது வார்டில் ஈஸ்வரி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.