tamilnadu

img

தோழர் எம்.மீனாட்சிசுந்தரத்திற்கு வயது 99

மதுரை,டிச.27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான தோழர் எம். மீனாட்சி சுந்தரம், டிசம்பர் 27 வெள்ளியன்று தமது 99 வது அகவையை எட்டினார்.  திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் 1921ல் பிறந்தவர் தோழர் மீனாட்சி சுந்தரம். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்களில் ஒருவரும், மறைந்த முன்னாள் மாநிலச் செயலாளருமான தோழர் ஏ.நல்லசிவனுடன் அம்பாசமுத்திரம் உயர்நிலைப் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்த உற்ற தோழர் இவர். பின்னாட்களில் தோழர் நல்லசிவனுடனே இணைந்து ஒரு கம்யூனிஸ்ட்டாக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர். 

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி கிடைக்கப் பெற்று விருதுநகர் பகுதியில் தமது தொழிற்சங்க வாழ்க்கையை துவக்கிய தோழர் மீனாட்சி சுந்தரம், 1957ல் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பை  உருவாக்கிய ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரானார். 1958ல் அன்றைய அரசுக்கு தொழிலாளர் கோரிக்கைகளை முன்வைத்து கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டு காலம் மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். 1960ல் விடு தலையான பின்பு தொழிற்சங்கத்தின் பணிகளில் முழு நேரமாக இணைத்துக் கொண்டு, 1964ல் மார்க்சிஸ்ட் கட்சி உதயமானபோது அதன் ஊழியராக முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அப்போது முதல் ஒன்றுபட்ட முகவை மாவட்டம், பின்னர் விருதுநகர் மாவட்டத்தில் தொழிற்சங்கத் தலைவராக, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக; பின்னர் சிஐடியு விருதுநகர் மாவட்ட தலைவ ராக, கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராக அரை நூற்றாண்டு காலம் பணியாற்றி எண்ணற்ற போராட்டங்க ளுக்கு வழிகாட்டியாய் திகழ்ந்தவர். 

தற்போது மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகரில் தமது மகன் பாரதியுடன் வசித்து வருகிறார். தோழர் பாரதி கட்சி யின் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் செயலாற்றி வருகிறார்.  வெள்ளியன்று 99 வது அகவையை எட்டிய தோழர் எம்.மீனாட்சி சுந்தரத்தை நேரில் சந்தித்து கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன், மத்திய பகுதிக்குழு செயலாளர் பி.ஜீவா, சிறுபான்மை மக்கள் நலக்குழு துணைச் செயலாளர் மு.முகமது ஷெரீப், சிஐடியு அப்பள தொழிலாளர் சங்க செயலாளர் த.கனகவேல் உள்ளிட்ட தோழர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.  கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் கே.அர்ச்சுணன் உள்ளிட்டோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.