tamilnadu

img

‘கேரம் இளவரசி’

விடுமுறை நாட்களில் பலரது பொழுதுபோக்கு விளையாட்டு கேரம். சிலருக்கு அதுவே வாழ்க்கையாகவும் அமைந்துவிடுகிறது. அத்தகையோரில் ஒருவர்தான் ‘கேரம் இளவரசி’ சென்னையைச் சேர்ந்த இளவழகி.


தணியாத தாகம்...


கருப்பு-வெள்ளை காய்களோடு கேரம் போர்டு முன்னாள் அமர்ந்தாள் பலருக்கு நேரம் போவதே தெரியாது. அந்த அளவுக்கு இந்த விளையாட்டில் மூழ்கி விடுவார்கள். அதில் ஒருவர்தான் இளவழகி. 6-வது வயதிலிருந்து கேரம் விளையாடி வருகிறார். தொழில்முறை வீராங்கனையாக உருவெடுப்பதற்கு முன்பாகவே ஒவ்வொரு போட்டியையும் வெல்ல வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அதற்காக முழு நேரத்தையும் செலவழித்தார். இறுதியில் வெற்றியும் பெற்றார். பத்து வயதிலிருந்து போட்டிகளில் பங்கேற்கத் துவங்கி மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்று உச்சத்தைத் தொட்ட தோடு சென்னைக்கும் பெருமை சேர்த்தார்.


அலங்கரிக்கும் பதக்கம்...


கேரம் விளையாட்டில் கால் நூற்றாண்டு காலமாக கோலோச்சி வரும் இளவழகியின் வெற்றிப் பயணம் உள்ளூரில் துவங்கி மாவட்டம், மாநிலம், தேசியம் எனத் தொடர்ந்தது. சர்வதேச அளவில் உலக சாம்பியன் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இரு முறையும், இரட்டையர் பிரிவில் ஒரு முறை என மூன்று முறை கோப்பையை தட்டி வந்தார். 125-க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை குவித்துள்ளார் .35 வெள்ளி, 20 வெண்கலம் என மேலும் பதக்கப்பட்டியலை அலங்கரிக்கிறார்.


தந்தை வழியில்...


இளவழகியின் தந்தை இருதயராஜ் வட சென்னையில் எந்தப் பகுதியில் கேரம் போட்டி நடந்தாலும் முதல் ஆளாக இருப்பார். அவரைப் பார்த்து வளர்ந்த இளவழகி, தானும் கேரம் விளையாட வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், சொந்தமாக ஒரு சிறிய கேரம்போர்டு கூட வாங்கும் வசதி கிடையாது. அவரது தணியாத தாகத்தில் தந்தையின் நண்பர் உதவியுடன் பயிற்சியை துவங்கி நுணுக்கங்கள் அனைத்தையும் கற்றுக் கொண்டார்.


வறுமையின் நிறம்...


சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக அமெரிக்கா, பிரான்ஸ் என வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமல் பரிதவித்தார். ஐஏஎஸ் அதிகாரி கிருஷ்ணதாஸ் காந்தி, வேலம்மாள் கல்விக் குழுமத்தின் வேல்முருகன் உள்ளிட்ட சிலரின் உதவியுடன் வெளி நாடுகளுக்குச் சென்றார். அந்த பயணங்களை வெற்றிகரமாக முடித்து பதக்கங்களுடன் திரும்பி வந்த இளவழகியை மத்திய-மாநில ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவே இல்லை என்றாலும், தமிழ்நாடு கேரம் சங்கம் மட்டுமே பாராட்டு விழா எடுத்தது. கூலித்தொழிலாளி...


மரியம் இதயத்திற்கு பிறகு கேரம் விளையாட்டு உலகில் புகழின் உச்சிக்கு சென்ற இளவழகி பிறந்தது ஒரு ஏழைக் குடும்பம். அவரது தந்தை இருதயராஜ் தள்ளுவண்டி (ஆட்டோ ரிக்ஷா) தொழிலாளி. அதில் கிடைத்த சொற்ப வருமானத்தைக் கொண்டு தனது இரண்டு மகள்களையும் படிக்க வைத்ததுடன் குடும்பத்தையும் நடத்தி வந்தார்.


அங்கீகாரம் இல்லை!


அபூர்வா, நிர்மலா, ராஷ்மி குமாரி, ரேவதி, யுவராணி, சங்கீதா, அமீதா, ரோகிணி வரிசையில் தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்து வரும் இளவழகிக்கு இதுவரைக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. உலக அளவில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை அதுவும் ஒரு முறை மட்டுமே 10 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது. அந்த பணத்தையும் அவர் தன்னை வளர்த்து உலகிற்கு அறிமுகம் செய்த தந்தைக்கு மோட்டார் வண்டியை வாங்கிக் கொடுத்து அழகு பார்த்தார்.


அடுத்த வாரிசுகள்.....


தான் கற்றுக்கொண்ட விளையாட்டை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க பயிற்சி மையத்தை துவக்கினார் இளவழகி. முன்னாள் தேசிய கேரம் சாம்பியனான அவரது கணவர் சக்திவேலும் அவரது முயற்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். தற்போது அவர் வசித்து வரும் மாதவரம் பயிற்சி மையத்தில் ஆட்டோ ஓட்டுநர், கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள் ஆர்வத்துடன் இணைந்ததால் அம்பத்தூர், திருவள்ளூரிலும் பயிற்சி மையங்களை துவக்கி கிராமப்புற மாணவர்களை சிறந்த கேரம் வீரர்களாக உருவாக்க பாடுபட்டு வருகிறார். இவரிடம் பயிற்சி பெற்றவர்களில் ஜூனியர் பிரிவில் 4 பேரும், சீனியர் பிரிவில் 9 பேரும் நேஷனல் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சப்-ஜூனியர் மாநில போட்டிக்கு ஒருவரும் தேர்வாகியிருப்பது இவருக்கு கிடைத்த பெருமையாகும்.

மத்திய அரசும் தமிழக அரசும் உதவி செய்ய முன்வராத நிலையில் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் அவர்கள் நாட்டிற்காக விளையாட பலமுறை அழைப்பு விடுத்தும் 5 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குவதாக ஒப்பந்தம் செய்து கொள்ள பல முறை முயன்றன. அனைத்தையும் தாய் நாட்டிற்காக நிராகரித்தவர் இந்த இளவழகி. தனது மன உறுதியால் வறுமை, புறக்கணிப்பு என அனைத்தையும் தாண்டி திறமையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திருப்பது இமாலய சாதனையாகும்!;