tamilnadu

img

பட்டினி கிடக்கும் தெருக்கூத்து, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ. 15 ஆயிரம் வழங்க கோரிக்கை

தருமபுரி, ஏப்.27- கொரோனா அச்சம் காரணமாக தருமபுரி  மாவட்டத்தில் கோவில் திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் தெருக்கூத்து வாய்ப்பிழந்த கலைஞர்கள் வருவாய் இன்றி பட்டினி கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. பாரம்பரிய கலையான  தெரு க்கூத்து கலையை நிகழ்த்து வதில் தமிழகத்திலேயே தருமபுரி மாவட்டம் முதன்மை வகிக்கிறது. தருமபுரி மாவட்டத்தில் பாரம்பரிய கலைகளான தெரு க்கூத்து ,கோள் ஆட்டம்,சிலம்பாட்டம், பம்பை, பறை,தப்பாட்டம், கரகாட்டம் மற்றும் தெருக்கூத்துக்கு தேவையான ஆடை அணிகலன் தயாரிப்பு பணியாளர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் உள்ளனர். இதில் ஒருசிலர் சிறுகுறு விவசாயிகள் உள்ளனர். பெரும்பகுதி கலை ஞர்கள் தெருக்கூத்து உள்ளிட்ட கிராமிய கலையை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

கலையே தொழிலும் வாழ்வாதாரமும்

குறிப்பாக தெருக்கூத்து கலைஞர்களுக்கு ஒரு வருடத்தில் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை தெருக்கூத்து நடக்கும். குறிப்பாக கோடை காலத்தில் 15 நாட்கள் தொடர்ந்து நடக்கும் மகாபாரதம், கோயில் திருவிழாக்கள், தனிகுடும்ப நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சிகளில் தெருக்கூத்து  வழக்கமாக நடந்து வருகிறது.
இந்த நான்கு மாதத்தில் நடக்கும் நிகழ்ச்சிதான் வருட ஒட்டுமொத்த வருவாயில் 80 சதவிகிதமாகும். பாரம்பரிய கலையையே தொழிலாக , வாழ்வாதாரமாக கருதி வாழ்ந்துவரும் இக்கலைஞர்களுக்கு ஊரடங்கால்  வருட ஒட்டுமொத்த வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது.

கலைபண்பாட்டுத்துறை நாட்டு ப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் மாவட்ட த்தில் 1700 கலைஞர்கள் மட்டுமே   பதிவாகியுள்ளனர். போதிய விழிப்புணர்வு இல்லாததால் மற்ற கலைஞர்கள் பதிவுசெய்யவில்லை. தற்போது கொரோனா தடுப்பு நிவாரணமாக அரசு ஆயிரம் ரூபாய்  அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால் குறைந்த அளவு கலைஞர்கள் மட்டுமே பயன்பெற வாய்ப்புள்ளது. மீதமுள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கூத்து மற்றும் நாட்டுப்புறக்கலைஞர்களை பாதுகாக்கவும்  ,இவர்கள்  பயன்பெறும் வகையில் கிராம நிர்வாக அலுவலர்மூலம் கணக்கெடுப்பு நடத்தி விடுபட்டவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தையும்  தமிழக அரசையும் கலைஞர்கள் வலியுறுத்துகின்றனர்.

மாதம் ரூ.15 ஆயிரம் வழங்குக

இதுகுறித்து தமிழ்நாடு தெருக்கூத்து மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் சின்னசாமி தெரிவித்த தாவது: கொரோனா பரவல் தடுப்பு ஊரட ங்கால் தெருக்கூத்து கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புறக்கலைஞர்கள் மாதக்கணக்கில் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வருவாய் இன்றி வாடும் நிலையில் உள்ளனர். பல்வேறு தொழிலாளர் நல வாரியங்கள் மூலமாக பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் கொரோனா அச்சம் நீங்கி இயல்பு நிலை திரும்பும் வரை நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் தெருக்கூத்து கலைஞர்களை பாதுகாத்திட குடும்பத்திற்கு மாதம் ரூ.15 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

- லெனின், தருமபுரி .