tamilnadu

img

காலந்தோறும் பரப்பப்பட வேண்டியவை பாரதிதாசன் படைப்புகள்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் புதுச்சேரியில் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 29ல் பிறந்தவர். இவரது இயற்பெயர் கனக சுப்புரத்தினம். திருப்புளிச்சாமியிடம் ஆரம்பக் கல்வி கற்றார். பிரெஞ்சு மொழியும் கற்றார். மகா வித்வான் பு.அ.பெரியசாமி, புலவர்பங்காரு பத்தரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்கள், சித்தாந்த, வேதாந்தப் பாடங்களை கற்றுத் தேர்ந்தார்.கல்லூரியில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். 10 வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார்.ஒரு திருமண விழாவில் இவர் பாடியபாரதியாரின் பாடல் அங்கு வந்திருந்த பாரதியாருக்கு இவரை அறிமுகம் செய்து வைத்தது. அவர் மீது கொண்ட பற்றால், தன் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார். தமிழ் ஆசிரியராக 1909-ல் பணியில் சேர்ந்தார். 37ஆண்டுகள் பணியாற்றினார். பாரதியார், வவேசு, அரவிந்தர் உள்ளிட்ட பல விடுதலை வீரர்கள் காவலில் இருந்து தப்ப உதவியதோடு, அவர்களுக்கு அடைக்கலமும் அளித்தார்.புதுச்சேரியில் ஒருமுறை சூறாவளிக் காற்றில் சிக்கி 5 கி.மீ. தூரத்துக்குதூக்கி எறியப்பட்டு, ஒருநாள் முழுவதும்அலைந்து திரிந்து பிறகு வீடு வந்து சேர்ந்தார். இந்த அனுபவத்தை ‘காற்றும்கனகசுப்புரத்தினமும்’ என்று கட்டுரையாக வடித்தார். அதை மீண்டும் மீண்டும்கேட்டு ரசித்தாராம் அரவிந்தர்.ஆஷ் கொலை வழக்கில் தொடர்புடைய மாடசாமி, புதுச்சேரி வந்தபோது அவரை போலீசுக்குத் தெரியாமல் கட்டுமரத்தில் ஏற்றி நடுக்கடல் வரை கொண்டுசென்று வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தார். கைத்தறித் துணிகளை தெருத்தெருவாக விற்றார். தேச சேவகன், புதுவைக் கலைமகன், தேசோபகாரி, தேசபக்தன், ஆனந்தபோதினி, சுதேசிமித்திரன், புதுவைமுரசு, குயில் உள்ளிட்ட பல இதழ்களின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

1930களில் நவீன எழுத்தாளர்களின் வேடந்தாங்கலாகத் திகழ்ந்த மணிக்கொடி இதழின் அட்டைப்படக் கவிதைகளாகவும் பாரதிதாசன் கவிதைகள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.“யாப்பு அறிந்த பலரிடம் கவிதைஇருப்பதில்லை. பாரதிதாசன் கவிதைகளில் புதுமையான சொற்பிரயோகங்கள் ஆச்சரியமூட்டுகின்றன. மனிதர் தமிழ் மீது வைத்திருக்கும் பற்றுமகத்தானது.” இது சிறுகதை இலக்கியத்தின் பிதாமகன் புதுமைப்பித்தனின் வார்த்தைகள்.“தமிழுக்கு அமுதென்று பேர்”, என தமிழ் குறித்த பாரதிதாசன் பாடல் தேனினும் இனியது. தமிழுக்குப் புது ரத்தம் பாய்ச்சிய புரட்சிக் கவிஞர் புத்தம்புது தமிழ் வார்த்தைகளைக் கோர்த்தவராவார்.“ஆர்த்திடும் எந்திரக் கூட்டங்களே” என தொழிற்சாலையைக் குறிப்பதும், ‘மண்டைச் சுரப்பு’ சிந்தனையைக் குறிப்பதும், ‘குடும்ப விளக்கு’பெண்களைக் குறிப்பதும் பாரதிதாசனின் தமிழ் வார்த்தைகள் என்னும் பானைச் சோற்றுக்குப் பதங்கள் எனலாம்.சாதி மறுப்புக்கு முக்கியத்துவம் தந்தவர் பாரதிதாசன். சொல்லில் மட்டுமல்ல..செயலிலும் கூட..‘அமட்டன் மீன்’ என்ற பெயரில் புதுச்சேரி கடற்கரையில் விற்கப்பட்டு வந்த மீனை சாதி இழிவுக்கு அடையாளம் என உண்ண மறுத்தவர். முட்டைவிற்ற சிறுமியிடம் ‘சேரி முட்டை வேகாதே என்ன செய்ய’ என்று குறும்பாகக் கேட்டதாகவும் அந்தப்பெண் அதை உண்மை என நம்பி திகைத்ததையும் சொல்லிப் பாட்டாகப் பாடியவர் பாரதிதாசன். அச்சிறுமி முட்டை விற்கிறாரே தவிர ஒருநாளும் அதை வேகவைத்து உண்டவரில்லை. அதனால்தான் அது வேகுமாவேகாதா என்பதைக்கூட சொல்லத் தெரியாமல் திகைத்தார் என்றாராம்.திரைப்படத் துறையில் 1937-ல் பிரவேசித்தார். கதை, திரைக்கதை, வசனம், பாடல், படத் தயாரிப்பு எனஅனைத்து களங்களிலும் முத்திரை பதித்தார்.

தான் எழுதியதில் மற்றவர்கள் திருத்தம் செய்வதை விரும்பமாட்டார். பாரதிதாசன் திரைத்துறையில் பாட்டெழுத வந்தபோது ஓர் இசையமைப்பாளர் “மானே என்ற வரிஉதைக்கிறதே” என்றபோது வெகுண்டெழுந்து “மான் உதைக்காதடா மடப்பயலே..கழுதைதான் உதைக்கும்” என இடித்துரைத்து விட்டுக் கிளம்பிப் போய்விட்டாராம்.பாடப் புத்தகங்களில் ‘அ அணில்’ என்று இருந்ததை ‘அ அம்மா’என்று மாற்றியவர். பல்வேறு புனைப்பெயர்களில் பாடல், கட்டுரை, நாடகம், கவிதை தொகுப்பு,கதைகளை எழுதிவந்தார். ‘இலக்கியக்கோலங்கள்’, ‘இளைஞர் இலக்கியம்’,‘குடும்ப விளக்கு’, ‘பாண்டியன் பரிசு’,‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘குமரகுருபரர்’ போன்றவை இவரது முக்கியப் படைப்புகள். ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக்கவி, வீரத்தாய் போன்ற காவியங்கள் பாரதிதாசனின் புகழ்பெற்ற காவியங்கள். அழகின் சிரிப்பு தொகுப்பில் எளிய நடையில் அழகு, கடல், தென்றல், காடு, குன்றம்,ஆறு, செந்தாமரை, ஞாயிறு, வான், ஆல், இருள், சிற்றூர், பட்டணம், தமிழ்என்னும் தலைப்புகளில் இயற்கையை நம் கண் முன் அழகுற நிறுத்தியுள்ளார் பாரதிதாசன். பாரதிதாசன்   நகைச்சுவை உணர்வு மிக்கவர்.நன்கு பாடுவார். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார். சிலம்பம், குத்துச்சண்டை, குஸ்தி பயின்றார். வீடு என்று இருந்தால் கோழி,புறா, பசு மூன்றும் இருக்க வேண்டும் என்பார். அவற்றைத் தானும் வளர்த்துவந்தார்.புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினராக 1954-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969-ல் இவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்துக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது கிடைத்தது. 1990-ல் தமிழக அரசுஇவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கியது.பாரதிதாசன் கண்ட கனவு:-“எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்/இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும் /வெளியுலகில் சிந்தனையில் புதிதாகவிளைந்துள்ளவற்றினுக்கும் பெயர்களெலாம் கண்டு / தெளிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம்செய்து/ செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்/ எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்/ இங்குள்ள எல்லோரும் நாணவும் வேண்டும்”இக் கனவு இத்தனை ஆண்டுகள் ஆகியும் கனவாகவே உள்ளது வெட்கக்கேடானது.(பாரதிதாசன் பிறந்த நாள் ஏப்ரல் 29)

;