tamilnadu

img

சோசலிச யதார்த்தவாதத்தின் நண்பர் வல்லிக்கண்ணன்.....

திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரம் சுப்பிரமணியம் கிருஷ்ணசாமி 1920 நவம்பர் 12 ல் பிறந்தார். 2006 நவம்பர் 9 ல் நாடறியப்பட்ட வல்லிக்கண்ணனாக சென்னையில் இயற்கை அடைந்தார். 

100 சிறுகதைகள் ,  13 நாவல்கள் , சரஸ்வதி காலம்,தீபம் யுகம் போன்ற இதழ் தொகுப்புகள் , புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், பாரதிக்கு பின் உரைநடை, தமிழில் சிறுபத்திரிகைகள்  உள்ளிட்ட கட்டுரை தொகுதிகள், டால்ஸ்டாய் ,கார்க்கி குறித்த படைப்புகளின் மொழிபெயர்ப்புகள், அமரவேதனை கவிதை தொகுப்பு, நாடகம், கடித இலக்கியம் என்று 86 நூல்களை 65 ஆண்டுகால தம் எழுத்து இயக்கத்தில் தமிழ் வாசகர்களுக்கு கையளித்திருந்தார். 

சென்னை வானொலிக்காக கவிஞர் ரவிசுப்பிரமணியனிடம் வல்லிக்கண்ணன் 12 மணி நேர அற்புதமான பேட்டியை தான் இறப்பதற்கு ஓராண்டு முன் அளித்திருக்கிறார் . இது நூலாக தொகுக்கப்பட இருக்கிறது.  வல்லிக்கண்ணன் குறித்த சிறந்த ஆவணமாக இந்த நூல் அமையும். 1939 ல் பிரசண்டவிகடன் இதழில் சந்திரக்காந்தக்கல் என்கிற தன் முதல் கதையை எழுதிய வல்லிக்கண்ணனின்  இறுதி எழுத்தாக அமைந்தது ஒரு கவிதை நூலிற்கு அவர்எழுதிய முன்னுரையாகும். அ. உமர் பாரூக் எழுதிய நல்லாப் புரியும் நவீனக் கவிதைகள் என்பது வல்லிக்கண்ணன் இறுதி எழுத்து இடம் பெற்ற நூலாகும். வாழ்நாள் முழுவதும் அறத்தின் பால் நிற்கின்ற படைப்பாளியாக யாரிடமும் எதன் பொருட்டும் தயை கோராத சுயமரியாதை கொண்டவராக வாழ்ந்தார் வல்லிக்கண்ணன்.

எழுத வருகின்ற இளம் படைப்பாளர்களை அன்போடு வழி நடத்தும் தாயுள்ளம் கொண்டவர். தமிழ்நாட்டின் ஏதோ ஓர் ஊரில் வல்லிக்கண்ணனின் வழிநடத்தலை பாராட்டை முன்னுரையை பெற்ற ஒரு படைப்பாளி இருந்துகொண்டிருப்பார்.எழுத்தாளர் ஜெயகாந்தன் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை விட்டு வெளிவந்து சென்னையில் வாழ்வதற்கான இடம் தேடிய பொழுது சில காலம் சென்னை கிருஷ்ணாம்பேட்டையில் தான் குடியிருந்த வீட்டில் தங்க வைத்து ஆதரித்தவர் வல்லிக்கண்ணன்.
கடல்புரத்தில், எஸ்தர் போன்ற பாராட்டு பெற்ற படைப்புகளையும் எம்.எல் என்ற கடுமையாக விமர்சிக்கப்பட்ட நாவலையும் தந்த  உ.ராமச்சந்திரனிற்கு வண்ணநிலவன் என தமிழ் எழுத்துலகிற்கான பெயர் வைத்தார்.தன் தொடக்க காலம் முதல் இறுதி வரை அநீதிகளை எதிர்ப்பவராக அவ்வாறு எதிர்க்கும் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு நீதி கோருபவராக இருந்திருக்கிறார் வல்லிக்கண்ணன்.ஏவிஎம் ஸ்டுடியோ அதிபர் ஏ.வி.மெய்யப்பசெட்டியாரிடம் மகாகவி பாரதியின் படைப்புகள் சிறைபட்டு கொண்டிருந்த 1948 காலத்தில் , பாரதியின் படைப்புகளை மக்கள் எவரும் பயன்படுத்தும் பொருட்டு அரசை வற்புறுத்தி நாட்டுடைமையாக்குவதற்கான பெரும் இயக்கம் அன்று நடந்தது . அன்றைய இயக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி
அதன் தலைவர்களுள் ஒருவர் தோழர் ஜீவா முன் நின்றுஅரசியல் ரீதியிலான குரல் கொடுத்தார். நாரணதுரைகண்ணன் , வ. ரா , அவ்வை சண்முகம் ,திருலோகசீதாராம் போன்ற அன்றைய புகழ் பெற்ற   படைப்பாளர்களை திரட்டிபடைப்பாளர்களின் குரலை ஒலிக்கச் செய்தவர் வல்லிக்கண்ணன். 

2001 ல் புதுமைப்பித்தன் பெயரை எவர் ஒருவரும் பயன்படுத்தக்கூடாது என்று காலச்சுவடு தூண்டுதலில் தினகரி சொக்கலிங்கம் கண்மணி கமலாவிற்கு நூல் மீதான பதிப்புரிமை வழக்கு ஒன்று தொடுத்தார். இதனை எதிர்த்து புதுமைப்பித்தன் தமிழ்ச்சொத்தா? தனிச் சொத்தா? என முகிழ்த்த இயக்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மைய அச்சாக இருந்தது . சிகரம் ச.செந்தில்நாதன், இரா.தெ.முத்து ஒருங்கிணைப்பில், பலபல படைப்பாளர்களை ஒருங்கிணைத்து , பல வடிவங்களில் புதுமைப்பித்தன் படைப்புகளை நாட்டுடைமையாக்கப் போராடி வெற்றி பெற்றது. இந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு இது குறித்த கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று நீதியின் பால் உறுதியோடு வல்லிக்கண்ணன் நின்றார் .  
சுயசாதி அபிமானம் அற்றவராகவும் சாதிகள் மீது விமர்சன கண்ணோட்டம் கொண்டவராகவுமே வாழ்ந்தார். 1996 ல் திருநெல்வேலியில் தமுஎச அவருக்கு எடுத்த பாராட்டு விழாவிற்கு வந்த வல்லிக்கண்ணனை, சுய
சாதிக்காரர்கள் சிலர் சந்தித்து தாங்கள் நடத்தும் பாராட்டு விழாவிற்கு அழைத்திட , அந்த அழைப்பை திடமாக மறுத்துவிட்டு, தனது எழுத்து குறிப்பிட்ட சாதிக்கு சொந்தமானவைகள் அல்ல என்றும் அவைகள் தமிழ் மக்களுக்கானது என்றுமறுத்துப் பேசி  வந்தவர்களை அனுப்பி விட்டதை எழுத்தாளர்நாறும்பூநாதன் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.1950 களின் தமிழ் கலை இலக்கியப்போக்குகளை தம் வாழ்வின் அனுபவப் பின்னணியில் வல்லிக்கண்ணன் பகிர்வது இன்றும் பொருந்தி வருகின்றது. வாழ்வு குறித்து அவரின் பார்வையை புரிந்து கொள்ள உதவுகிறது . 

வல்லிக்கண்ணன் சொல்கிறார் : எழுத்தாளர்கள் பிறர்எழுதுவதை படிக்க மனமற்றவர்களாக வளர்வதை உணர்ந்தோம்.அறிவுப்பசியை அவ்வளவாகக் காணவில்லை.பத்திரிகைகாரர்களும் புத்தக வெளியீட்டாளர்களும் பிஸினஸ் பிஸினஸ் என்று உச்சரிக்க கற்றுக் கொண்டார்கள். ஆகவே நான் யாரையும் சந்திக்க சென்று காலத்தை வீணடிக்க விரும்பவில்லை. எழுத்தை நம்பி உயிர் வாழ இயலாது. சுயநல தேடலிற்கு நான் ஒத்துழைத்து இருந்தால் சினிமா உலகம் எனக்கு பணம் தர தயாராக இருந்தது. நான்வாழும் முறை தனி ரகமானது. பிறர் என்னை ஒத்துக்கொள்ள வேண்டுமென நான் விரும்பவில்லை. (1958 சரஸ்வதி இதழ் )வாழ்வின் மன அலைகளை எண்ண ஓட்டங்களை காலத்தின் அனுபவம் சார்ந்து பதிவு செய்தவைகள் வல்லிக்கண்ணன் கதைகள் நாவல்கள் . இப்படைப்புகள் காலத்தின் அழியாத ஆவணமாக வாசகர் முன் இருக்கின்றன. இவைகளை மீளுருவாக்கம் செய்து பரவலான வாசிப்பிற்கு உட்படுத்த வேண்டும். பாரதி, புதுமைப்பித்தன் மீதான ஈர்ப்பின் காரணமாக எளிய மொழிநடையை தன் படைப்புமுறைமையாக மாற்றிக் கொண்டார்.

காலவேகத்தில் கவிதையில் இயல்பாக ஏற்பட்ட ஒருபரிணாமம் புதுக்கவிதை இயக்கம் . அது குறித்த வரலாற்றை தீபம் இதழில் 1972 நவம்பர் முதல் 1975 மே வரை எழுதினார். பாரதிக்குப் பிறகு கொஞ்சகாலம் தேக்கமுற்றிருந்த புதுக்கவிதை 1940 ல் கலாமோகினி இதழ் 1950 களில் எழுத்து இதழ், உள்ளடக்கம் சார்ந்து வானம்பாடி இதழ் இயக்கம் வழியாக புதுக்கவிதை இயக்கம் நிகழ்ந்த வரலாற்றுக் காலத்தை எழுதியிருக்கிறார்.புதுக்கவிதை இயக்கத்தில் வல்லிக்கண்ணன் முக்கிய கண்ணியாக இயங்கியமையை இந்த நூலின் வழியாக நாம் உணர்ந்து கொள்ளலாம். மகத்தான புதுக்கவிதை இயக்க வரலாற்றை எழுதிய பங்களிப்பிற்காக “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” நூல் 1978 ஆம் ஆண்டின் சாகித்ய அகாதமி விருது பெற்றது. 

நவசக்தியிலும் ஜனசக்தியிலும் இணையாசிரியராகப் பணியாற்றிய எழுத்தாளர் தோழர் கே. ராமநாதன் வழியாக சோவியத் இலக்கியங்கள் மீது ஆர்வம்  கொண்டு வாசித்தார்; மொழிபெயர்த்தார் வல்லிக்கண்ணன். நிமோனியா காய்ச்சலில் பாதிக்கப்பட்டு சுவாசிக்க இயலாமல் சாப்பிட இயலாமல்  2006 நவம்பர் 9 இரவு ஒன்பதரை மணிக்கு இயற்கை அடைந்தார் வல்லிக்கண்ணன்.அடுத்த சில நாட்களில் கவிஞர் இளையபாரதி உதவியில்தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தோடு இணைந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வல்லிகண்ணனுக்கு அஞ்சலிக் கூட்டம் ஏற்பாடு செய்தது.அதில் பேசிய சிகரம் ச. செந்தில்நாதன் , ச.தமிழ்செல்வன், சின்னக்குத்தூசி, கவிஞர் இன்குலாப், பாலம் கல்யாணசுந்தரம் பேராசிரியர் வீ. அரசு, இரா. தெ. முத்து போன்ற     படைப்பாளிகள் பலரும் வல்லிக்கண்ணன் படைப்புகளை நாட்டுடமையாக்கி ,வல்லிகண்ணனை ஆதரித்த மறைந்தஅவர் அண்ணன் கோமதி நாயகம் வாரிசுகளை பாதுகாக்கவேண்டும் என பேசினார்கள். 

படைப்பாளர்கள் குரல் முதல்வர் கலைஞர் காதுகளுக்குக் கேட்டது. 2008 மார்ச் மாதம் சு. சமுத்திரம் ,விந்தன்,வல்லிக்கண்ணன் உள்ளிட்ட பதினெட்டு படைப்பாளர்கள் படைப்புகளை நாட்டுடமையாக்கினார் கலைஞர். வல்லிக்கண்ணன் குடும்பத்திற்கு 5 லட்சம் பரிவுத் தொகை கிடைத்தது. வல்லிக்கண்ணன் அவர்களுக்கு நேரடி வாரிசு இல்லைஎன்பதால் பரிவுத்தொகையை அவர் அண்ணன் வாரிசுகளுக்கு தருவதற்கான வாரிசுரிமை சான்றிதழ் பெறுவதற்கு தமுஎசவின் தென்சென்னை மாவட்ட திருவல்லிக்கேணி கிளை நிர்வாகிகள் பிரின்ஸ்கஜேந்திரபாபு, வீரபெருமாள், பழனி போன்றோர்   ச.செந்தில்நாதனிற்கு உதவினார்கள்.  

இருபதாம் நூற்றாண்டிற்கும் இருபத்தோராம் நூற்றாண்டிற்குமான  தமிழ் இலக்கிய வரலாற்று தொடர்ச்சியாக பாலமாக வல்லிக்கண்ணனின் படைப்புகள் இருக்கின்றன. புதுமைப்பித்தனின் யதார்த்தவாதப்பார்வை கொண்ட, சோசலிச முற்போக்குப் பார்வையை புரிந்துகொண்டு அதனோடு இயைந்து பணியாற்றிய வல்லிக்கண்ணனின் படைப்புகளை பரவலான வாசிப்பிற்கும் புரிதலிற்கும் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு தமிழக முற்போக்கு இலக்கிய அரசியல் இயக்கத்திற்கு உண்டு.    

கட்டுரையாளர் : இரா.தெ. முத்து, ஒருங்கிணைப்பாளர்; எழுத்தாளர் வல்லிக்கண்ணன் நூற்றாண்டு விழாக்குழு. 
தொடர்பிற்கு era.the.muthu@gmail.com 

;