மும்பை, ஜூலை 5 - மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்தது மட்டுமல்லாமல், ஏக்நாத் ஷிண்டே-வுக்கு முதல்வர் பதவியைக் கொடுத்து, சிவசேனா சட்டமன்றக் கட்சியையும் தாக்கரே-விடமிருந்து பாஜக பறித்துள்ளது. இந்நிலையில், இந்த அரசியல் விளையாட்டுக்களை விளையாடுவதற்குப் பதில், தேர்தலைச் சந்திக்க பாஜக தயாரா? என்று உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். மும்பையில் உள்ள சிவசேனா பவனில் கட்சியின் மாவட்டத் தலைவா்களுடன் உத்தவ் தாக்கரே திங்கட்கிழமை யன்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசியது, சிவசேனா சார்பில் அறிக்கையாக வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சிவசேனாவை அழிக்க பாஜக சதி செய்து வருகிறது. பாஜக-வுக்குத் துணிவு இருந்தால், மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு உடனடியாக தோ்தல் நடத்த வேண்டும் என்று சவால் விடுகிறேன். தேவையற்ற அரசியல் விளையாட்டுகளைக் கைவிட்டு, மீண்டும் மக்களிடம் தீா்ப்புக் கேட்டு தோ்தலை எதிர்கொள்ளலாம். யார் ஆட்சியில் இருக்க வேண்டும்- யார் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதை மகாராஷ்டிர மக்கள் முடிவு செய்யட்டும். இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.