states

img

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய ஹன்னன் முல்லா மீது வழக்கு - அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் நாடாளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதற்காக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் முன்னணி ஊழியர்களை மிரட்டும் விதத்தில் தில்லிக் காவல்துறையினர் மூலம் வழக்குகள் பதிவு செய்துள்ள பாஜக அரசாங்கத்தின் கோழைத்தனமான முயற்சிக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

செப்டம்பர் 25ஆம் தேதியன்று, நாடாளுமன்ற வீதியில் கிளர்ச்சிப் போராட்டம் நடத்தியமைக்காக,  தில்லிக் காவல்துறையினர் ஹன்னன் முல்லாவிற்கு ஏழாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகுத்திடும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 188ஆவது பிரிவின் கீழ் (அரசாங்கத்தால் பிறப்பிக்கப்பட்ட ஆணைக்குக் கீழ்ப்படியாமை) குற்றம் சுமத்தி அறிவிப்பு அனுப்பியிருக்கிறது. அரசியல் கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்காக பாஜக அரசாங்கம் 1897, தொற்றுநோய் சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்து  கொண்டிருக்கிறது. இது அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்பது தெளிவாகும். பாஜக அரசாங்கம், கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட சமூக முடக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஜனநாயக பூர்வமாக நடைபெறும் கிளர்ச்சிப் போராட்டங்களை ஒடுக்க முனைகிறது.  

இதேகாலத்தில் இவற்றை பல முறை மீறியுள்ள ஆர்எஸ்எஸ்/பாஜகவின் செயல்கள் கண்டுகொள்ளப்படவில்லை.

நம் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகக் கிளர்ந்தெழ வேண்டும் என்று அனைத்து ஜனநாயக இயக்கங்களையும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவி அழைக்கிறது. நாடு முழுவதும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று போராடி வரும் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் முன்னணி ஊழியர்கள்மீது பதிவு செய்துள்ள வழக்குகள் அனைத்தும் நிபந்தனையின்றி திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கோருகிறோம்.

நாட்டின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகவும், பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லாவிற்கு எதிராக அறிவிப்பு அனுப்பியிருப்பதற்கு எதிராகவும், டிசம்பர் 5 அன்று, கிளர்ந்தெழ வேண்டும் என்றும், அனைத்துக் கிளைகளுக்கும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவல் விடுக்கிறது.

மேலும் டிசம்பர் 5 அன்று மிகப்பெரிய அளவில் நடைபெறும் நரேந்திர மோடி, அமித் ஷா, அதானி, அம்பானி கொடும்பாவிகளை எரிக்கும் போராட்டத்தில் இணைந்து கொள்வோம்.   

இவ்வாறு அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறிக்கையில் கோரியுள்ளது.

 

;