states

img

கார்ப்பரேட்டுகளிடம் வங்கிகளை ஒப்படைக்கக் கூடாது -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

இந்திய ரிசர்வ் வங்கியின் உள்ளார்ந்த பணிக்குழு (Internal Working Group) 1949ஆம் ஆண்டு வங்கிப் பதிவுச் சட்டத்தைத் திருத்துவதன்  மூலம் பெரிய அளவிலான கார்ப்பரேட்டுகளும், தொழில்துறை நிறுவனங்களும்  சொந்தமாக  வங்கிகள் தொடங்குவதற்கு அனுமதித்து முன்மொழிந்திருக்கிறது. மற்றொரு முன்மொழிவு,  (கார்ப்பரேட் நிறுவனங்கள் உட்பட) பத்தாண்டுகளுக்கும் மேலாக,  50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும்  மற்றும் அதற்கும் மேலாக  சொத்துக்களை உடைய வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் (NBFCs-Non-Banking Financial Companies), தங்கள் நிறுவனங்களை வங்கிகளாக மாற்றிக்கொள்வதற்கும் அனுமதிக்கிறது. இந்தப் பரிந்துரைகள் அனைத்தும் உண்மையில்,  பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு வங்கித்துறையை அகலத் திறந்துவிட வேண்டும் என்கிற மோடி அரசாங்கத்தின் நோக்கத்தையே சுட்டிக்காட்டுகின்றன. இவ்விரண்டும் நிதி அமைப்பு முறைக்கு ஊறு விளைவித்திடக்கூடியதும், 
மக்களின் சேமிப்புகளுக்கு இடர் ஏற்படுத்திடக்கூடியதுமான ஆபத்தான முன்மொழிவுகளாகும்.

இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டால், பின்னர் அம்பானிகளும், அதானிகளும் நேரடியாகவே வங்கிகளைத் தொடங்குவதற்கு விண்ணப்பித்திட முடியும். ஏற்கனவே கார்ப்பரேட்டுகளால் நடத்தப்பட்டுவரும் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் அனைத்தும் வங்கிகளாக மாற்றப்பட்டுவிடும். தற்போது செயல்பட்டுவரும் டாட்டாக்கள், ஆதித்யா பிர்லா குழுமம் மற்றும் பஜாஜ் குழுமம் ஆகியவற்றின் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் வங்கிகளாக மாற முடியும். கார்ப்பரேட்டுகள் மற்றும் பெரும்தொழில்நிறுவனங்கள் நடத்திடும் வங்கிகள், அவற்றில் முதலீடு செய்துள்ள சேமிப்பாளர்களின் தொகைகளை, தாங்கள் சம்பந்தப்பட்ட தொழில்நிறுவனங்களுக்குத் திருப்பிவிடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. நிதித்துறையில் உள்ள ஒழுங்குமுறை விதிகளை, வங்கிகளை உருவாக்குபவர்கள் மிக எளிதாகத் தங்களுக்கேற்ப வளைத்து, அவற்றில் உள்ள ஓட்டைகள் மூலமாகத் தங்கள் சொந்த நிதியல்லாத வர்த்தக நலன்களுக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

கார்ப்பரேட் நிறுவனங்களால் நடத்தப்படும் வங்கிகள் மேலும் பல அறநெறி சார்ந்த ஆபத்துக்களை வரவழைத்திடும். கடன்கள் கொடுக்கப்படுவது என்பது சின்னாபின்னமாக சிதைக்கப்பட்டுவிடும். நிச்சயமாக விவசாயிகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவினர்கள், கடன் கொடுக்கப்படுவதிலிருந்து ஓரங்கட்டப்படுவார்கள். நிதி மற்றும் தொழில்பிரிவுகளைக் கூட்டாக நடத்திவரும் பெரிய நிறுவனங்கள் கடன் பெறுவதைத் தங்களுக்குச் சாதகமான விதிமுறைகளை ஏற்படுத்திக்கொண்டுப் பெற்றுக்கொள்வார்கள்.

1969இல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதற்கான பிரதான நோக்கங்களில் ஒன்று, அப்போது பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் இடையே இருந்த புனிதமற்றக் கூட்டணியைத் தகர்த்திட வேண்டும் என்பதேயாகும். அப்போது வங்கிகள் விவசாயத்துறையையும், சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவுகளையும் கண்டுகொள்வதே இல்லை. அதன்மூலம் பொருளாதார வளர்ச்சி விகிதத்திற்கு ஊறுவிளைவித்து வறுமை ஒழிப்புக்கு மிகப்பெரிய அளவில் தடைக்கற்களாக இருந்து வந்தன.

வங்கிகள் தேசியமயமாக்கப்படுவதற்கு முன்பிருந்த நாட்களில், யுனைடெட் கமர்சியல் வங்கி, பிர்லா நிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தது. தி ஒரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், தாபர் நிறுவனங்களுக்கு சார்பாகவும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, டாட்டா நிறுவனங்களுடனும், பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் யுனிவர்சல் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை சாஹூ-ஜெயின் குழுமத்துடனும் தங்களைப் பிணைத்துக் கொண்டிருந்தன.

மோடி அரசாங்கத்தின் கீழ், பொருளாதார அமைப்புகள் பலவற்றை அரசாங்கத்தின் கூட்டுக் களவாணி முதலாளிகளும், கார்ப்பரேட்டுகளும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். இப்போது அவர்கள் வங்கிகளையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு அனுமதிப்பதென்பது படுபிற்போக்குத்தனமான, கேடு பயக்கத்தக்க நடவடிக்கையுமாகும்.   இது, மூலதனம் குவிவதற்கும், சமத்துவமின்மையை அதிகரிப்பதற்கும் இட்டுச் செல்லும்.

தனியார் வங்கிகளின் புதிய தலைமுறைக்கு உரிமங்கள் கொடுப்பது 1993இல் தொடங்கியது. ஆனாலும், 2013இல்தான், ஐமுகூ ஆட்சிக்காலத்தில்தான், இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டும் விதிமுறைகள், நிதியல்லாத கார்ப்பரேட்டுகள் வங்கி உரிமங்கள் கோருவதற்கேற்றவிதத்தில் மாற்றியமைக்கப்பட்டன.  அவர்கள் அனுமதிக்கப்பட்டபோது, பல விதிகளும் ஏற்படுத்தப்பட்டன. ஆயினும், இத்தகைய வழிகாட்டும் நெறிமுறைகள் மற்றும் விதிகள் இருந்தபோதிலும், இதுவரையிலும் அளிக்கப்பட்டுள்ள 14 உரிமங்களில் எதுவும் கார்ப்பரேட்டுகளுக்குச் சென்றடையவில்லை. இரு உரிமங்கள் மட்டுமே 2013க்குப்பின்னர் ஐடிஎப்சி (IDFC) மற்றும் பந்தான் வங்கி ஆகியவற்றிக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. இவை இரண்டும் நிதி நிறுவனங்களேயொழிய, நிதியல்லாத கார்ப்பரேட் நிறுவனங்கள் அல்ல.

1993க்குப் பின்னர், உரிமங்கள் வழங்கப்பட்ட புதிய தலைமுறை தனியார் வங்கிகளின் செயல்பாடு அப்படி ஒன்றும் உத்வேகம் அளிக்கக்கூடியதாக இல்லை. குளோபல் டிரஸ்ட் வங்கி மற்றும் யெஸ் வங்கி போன்று அவற்றில் சில பரிதாபகரமான முறையில் படுதோல்வி அடைந்துள்ளன. யெஸ் வங்கி, மோசடி மற்றும் பணப் பரிமாற்றத் தில்லுமுல்லு மோசடி (money-laundering) முதலான குற்றங்களைச் செய்ததாகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கிறது. 2015க்குப்பின்னர் தனியார் வங்கிகள் தாங்கள் கடன் கொடுக்கும் பங்கினை அதிகரித்திருக்கின்றன என்றால் அதற்குக் காரணம், தேசிய வங்கிகளில் செயல்படா சொத்துக்கள் (NPAs-Non-Performing Assets) உயர்ந்திருப்பதேயாகும். இவ்வாறு செயல்படா சொத்துக்கள் அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம், அரசாங்கம் ஒருசில கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் ஆதரவாக இருந்து வருவதாகும்.

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட சமயத்தில் வங்கிகளை நடத்துவதில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், 2013 வழிகாட்டும் நெறிமுறைகள் இந்த எச்சரிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கச் செய்தது. இப்போது இந்திய ரிசர்வ் வங்கியின் உள்ளார்ந்த பணிக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையானது இந்த வழிகாட்டும் நெறிமுறைகள் அரிக்கப்பட்டுவருவதை மேலும் அரிக்கப்படும் விதத்தில் கார்ப்பரேட்டுகளையும் தொழில்நிறுவனங்களையும் உயர்த்திப்பிடித்து, கீழ்க்கண்டவாறு கூறியிருக்கிறது: “கார்ப்பரேட்டுகளும், தொழில்நிறுவனங்களும் மூலதனத்தின் முக்கியமான ஆதாரங்களாகும். அவர்கள் வங்கிகளுக்கு அவர்களுடைய அனுபவம், மேலாண்மைத் திறன் மற்றும் புத்திகூர்மையைச் செலுத்திட முடியும்.” இவ்வாறு இந்திய ரிசர்வ் வங்கியின் உள்ளார்ந்த பணிக்குழு நிலை எடுத்திருப்பது விசித்திரமானது. உண்மையில் இதில் அங்கம் வகிக்கும் பத்து வல்லுநர்களில் ஒன்பதுபேர்,  கார்ப்பரேட்டுகள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் வங்கிகளைத் தொடங்குவதற்கு எதிராக கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்கள். அப்படி இருந்தும் உள்ளார்ந்த பணிக்குழு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக அறிக்கையினை அளித்திருக்கிறது. எனவேதான் உள்ளார்ந்த பணிக்குழுவின் இந்த முன்மொழிவுகளுக்குப் பின்னே அரசாங்கம் இருக்கிறது என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் இந்நடவடிக்கைக்கு எதிராக நிதித்துறையின் வல்லுநர்கள்,  முன்னாள் வங்கியாளர்கள் மற்றும் பொருளாதார மேதைகள் கடுமையாக எதிர்வினையாற்றி இருக்கிறார்கள்.  இந்த நடவடிக்கையை, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் மற்றும் முன்னாள் துணை கவர்னர் விரல் ஆச்சார்யா எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறார்கள். ராஜன், இது “பொருளாதாரம் மற்றும் அரசியல் அதிகாரம் ஒரேயிடத்தில் பெரிய அளவிற்குக் குவிந்திடும் இடர்களை ஏற்படுத்திடும்,” என்று கூறியிருக்கிறார். அவர் மேலும், இதன்பின்னே கூட்டுக்களவாணி முதலாளிகள் இருக்கக்கூடும் என்கிற ஐயுறவினையும் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு வங்கியின் முன்னாள் கவர்னர்கள் இருவர், அவர்கள் இருவரும் தனியார் துறை வங்கிக்கு வக்காலத்து வாங்குபவர்களாக இருந்தபோதிலும்கூட, இதற்கு எதிராகக் கருத்துக்கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மோடி அரசாங்கம், நிதித்துறையைத் தனியாருக்குத் தாரை வார்த்திடும் கொள்கைகயைத் தீவிரமாகப் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. இதற்காக இது, பொதுத்துறை வங்கிகளை, அவற்றின் பங்குகளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதன் மூலமாகவும், சில பொதுத்துறை வங்கிகளைத் தனியாரிடம் தாரை வார்த்திருப்பதன் மூலமாகவும் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறது. வங்கித் தொழிலில் தோல்வி அடைந்துள்ள ‘தி லெட்சுமி விலாஸ் வங்கி’யை, இந்திய ரிசர்வ் வங்கி, அந்நிய வங்கியான டிபிஎஸ் கையகப்படுத்த அனுமதித்திருக்கிறது. இதேபோன்று மேலும் சில பலவீனமாகியுள்ள பொதுத்துறை வங்கிகள் கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாடுகளின் கீழ் உள்ள தனியார் வங்கிகளிடம் ஒப்படைக்கப்படும் காலமும் வரலாம்.
கார்ப்பரேட்டுகள் மற்றும் தொழில்நிறுவனங்கள், நம் நாட்டின் பொதுத்துறை வங்கிகளைக் கையகப்படுத்தி, நடத்துவதற்கு அனுமதிப்பதன் மூலம், மோடி அரசாங்கம் பொதுத்துறை வங்கிகளை அழிப்பதற்கு அனுமதித்திடக் கூடாது.    

(நவம்பர் 25, 2020)

(தமிழில்: ச. வீரமணி)

 

;