states

சத்யபால் மாலிக் எழுப்பிய பிரச்சனைகளுக்குப் பதில் எங்கே?

புதுதில்லி, ஏப். 23- நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் எழுப்பிய பிரச்சனைகளுக்கு பதில் அளிப்பதற்கு பதிலாக, அவர் மீது மோடி அரசு சிபிஐயை ஏவிவிட்டுள்ளது. இது ஜனநாயகத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் (ஏப்., 15) ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் பிரபல ஊடகவியலாளர் கரண் தாப்பருக்கு அளித்த நேர்காணலில்,”புல்வாமா தாக்குதலுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமே காரணம். நிலைமை சரியில்லாததை உணர்ந்த சிஆர்பிஎப், தனது வீரர்களை அழைத்துச் செல்ல உள்துறை அமைச்சகத்திடம் விமானங்களை கேட்டது. 5 விமானங்கள்தான் தேவைப்பட்டன. என்னிடம் கேட்டிருந்தால் நான் ஏற்பாடு செய்திருப்பேன். ஆனால் ஒன்றிய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது” என்னும் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டார்.  

மேலும் அவர், “இதனை பிரதமர் மோடியிடம் கூறினேன். நமது (ஒன்றிய அரசின்) தவறின் காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது என எடுத்துக் கூறினேன்.ஆனால் பிரதமர் மோடியோ இதனை வெளியில் சொல்ல வேண்டாம்; வாய்மூடிக் கொண்டு இருங்கள் எனக் கூறினார்” என்று  பல்வேறு கருத்துக்களை போட்டுடைத்தார் சத்யபால் மாலிக். புல்வாமா தாக்குதல் தொடர்பாக சத்யபால் மாலிக்கின் கருத்திற்கு மோடி அரசிடம் எதிர்க்கட்சிகள் விளக்கம் கேட்டு வரும் நிலையில், இந்த பிரச்சனையை திசை திருப்புவதற்காக சத்யபால் மாலிக் மீது மறைமுகமான பழிவாங்கும் நடவடிக்கையில் களமிறங்கிய மோடி அரசு, கடந்த காலத்தில் நிகழ்ந்த ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் வழக்கில் தற்போது சத்யபால் மாலிக்குக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் வழக்கு

கடந்த 2018-ஆம் ஆண்டு சத்யபால் மாலிக் ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்தபோது, பிரதமர் மோடிக்கு நெருக்கமானவரும், முகேஷ் அம்பானியின் சகோதரருமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு வழங்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்திருந்தார். இந்த இன்சூரன்ஸ் திட்டம் 3.5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு பலனளிக்கும் என்று கூறப்பட்ட நிலையில், ஒரே மாதத்தில் இந்தத் திட்டத்தை சத்யபால் மாலிக் ரத்து செய்தார்.  இதுகுறித்து அப்போதே சத்யபால் மாலிக் அளித்த விளக்கத்தில்,”இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டபோது அரசு ஊழியர்கள் அது மோசடி திட்டம் போல் இருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். நானும் கோப்புகளை உற்று கவனித்தபோது எனக்கும் ஒப்பந்தம் தவறாக கொடுக்கப்பட்டது தெரிந்தது. அதனால் ரத்து செய்தேன்” என்று கூறியிருந்தார். இந்த விவகாரத்தின் அடிப்படையில்தான் ஜம்மு-காஷ்மீர் அரசு ஊழியர்களுக்கு மருத்துவ இன்சூரன்ஸ் வழங்கியதில் மிகப்பெரிய அளவில் ஊழலில் ஈடுபட்டதாக சத்யபால் மாலிக் மீது குற்றம்சாட்டி, தற்போது சிபிஐ நடவடிக்கை பாய்ந்துள்ளது. சிபிஐ-யின் முதல் தகவல் அறிக்கையில் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ், டிரினிட்டி இன்சூரன்ஸ் ப்ரோக்கர்ஸ் நிறுவனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக பேரம் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர்

ஏப்ரல் 14-ஆம் தேதி ஊடகவியலாளர் கரண் தாப்பரின் நேர்காணலின் பொழுது ரிலையன்ஸ் ஒப்பந்தம் பற்றியும் சத்யபால் மாலிக் பேசியிருந்தார். அதில்,”பாஜக மூத்த தலைவரும், ஆர்எஸ்எஸ் தலைவருமான ராம் மாதவ், ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக என்னை சந்தித்தார். ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் ரத்து செய்யப்பட்டு, ஆவணங்கள் கையெழுத்திட்டப் பின்பு ராம் மாதவிடம் இந்த விவகாரத்தை தெளிவுபடுத்திய பொழுது அவர் மிகுந்த ஏமாற்றத்துடன் ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேறினார்” எனக் கூறினார். கரண் தாப்பரின் நேர்காணலுக்கு முன் நடத்தப்பட்ட டிபி லைவ் (DB லைவ்) யூடியூப் நேர்காணலில் பிரசாந்த் டாண்டனுக்கு அளித்த பேட்டியிலும் சத்யபால் மாலிக் ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் சம்பவத்தை குறிப்பிட்டிருந்தார்.  டிபி லைவ்வில் ஒளிபரப்பான பிறகு மாலிக்கிற்கு  ராம் மாதவ் அவதூறு நோட்டீஸ் அனுப்பினார்.

சீத்தாராம் யெச்சூரி கண்டனம்

சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “இது இந்திய ஜனநாயகத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல்.நமது தேசப் பாதுகாப்பு மற்றும் ஆட்சியின் உச்ச நலன் கருதி சத்யபால் மாலிக் எழுப்பிய பிரச்சனைகளுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக, மோடி அரசு சிபிஐயை திட்டமிட்ட வகையில் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இது வெட்கக்கேடானது. மிகவும் கண்டிக்கத்தக்கது” எனக் கூறியுள்ளார்.