states

img

இந்தியத் தாய்மார்களிடமிருந்து பறிக்கப்பட்ட ரூ.84000 கோடி

புதுதில்லி, ஜன. 27 - கடந்த ஏழு ஆண்டு காலமாக ஒன்றிய அரசால் மகப்பேறு நிதியுதவித் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.   இதன் மூலம் கடந்த ஏழு ஆண்டுகளில் 84,000 கோடி ரூபாய் மதிப்பிலான மகப்பேறு நிதியுதவித் திட்டத்தைப் பல லட்சக்கணக்கான இந்தியப் பெண்களுக்கு ஒன்றிய அரசு மறுத்து ள்ளது. பெண்களுக்கான மகப்பேறு நிதியுதவி களை தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம்  2013ஆம் ஆண்டில் அளித்தது.   இச்சட்டத்தின் பிரிவு 4ன்படி, ஒவ்வொரு கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்க்கும் உகந்த ஊட்டச்சத்தையும், மகப்பேறு நிதியுதவிகளையும் பெற தகுதி யுண்டு.  ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்படி தவணை முறையில் குறைந்தது 6000 ரூபாய்களாவது மகப்பேறு நிதியுதவியாக அளிக்கப்பட வேண்டும். 132 கோடியாக உள்ள நமது நாட்டின் மக்கள் தொகையில், 1000 பேர்களுக்கு 20 குழந்தை கள் என்ற பிறப்பு விகிதம் இருப்பதாகவும், இதில் 90 சதவீதத்தினருக்கு பயன்கள் அளிக்கப் படுவதாகவும் வைத்துக் கொண்டால், இத்திட்டத் திற்கு செய்யப்பட வேண்டிய நிதி ஒதுக்கீட்டின் மதிப்பு 14,000 கோடி ரூபாய்களாகும்.  இது  இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் 0.05 சதவீதத்திற்கும் குறைவான தாகும்.  

சட்டப்பூர்வமான இந்த வாக்குறுதியை மிக நீண்ட காலத்திற்கு முன்னரே அரசு செயல்படுத்தியிருக்க வேண்டும்.  2015-16ஆம் நிதியாண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு துவங்கியிருந்தால் கூட, பயனாளிகளுக்குத் தற்போது முழுமையான பலன்கள் கிடைத்திருக்கும். 2015-16 முதல் 2021-22 வரையிலான ஏழு நிதியாண்டுகளில் 98,000 கோடி ரூபாய்கள் அளிக்கப்பட்டிருக்கும்.   எனினும், இந்த சட்டப்பூர்வமான கடமை யை நிறைவேற்ற உண்மையில் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா? ஓராண்டு காலத்திற்கு தேவைப்படும் தொகையான வெறும் 14,000 கோடி ரூபாய்களே கடந்த ஏழாண்டு காலத்தில் செலவிடப்பட்டுள்ளது.  இதையே வேறு வார்த்தைகளில் சொல்வ தானால், இந்த ஏழாண்டு காலத்தில் 84000 கோடி ரூபாய்கள் (ரூ.98000 கோடியிலிருந்து ரூ.14000 கோடி கழித்தால் வரும் தொகை) இந்தியத் தாய்மார்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.  இந்த 84,000 கோடி ரூபாய் என்பது ஆண்டொ ன்றுக்கு ரூ.12,000 கோடி ரூபாய் அல்லது 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்  சராசரி வருடாந்திர செலவாக இருந்திருக்கும்.  2017ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட இத்தகைய சட்டப்பூர்வமான உரிமையை செயல்படுத்துவதில் பிரதானமாக பிரதம மந்திரி மாத்ரு வந்தனா திட்டத்திற்கே (பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா) தொகை செல விடப்பட்டதை நாம் காண்கிறோம்.

பட்ஜெட் ஒதுக்கீடும் வெட்டப்பட்டது

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறையை தயார் செய்வதற்கே இரண்டு ஆண்டு காலத்தை எடுத்துக் கொண்ட பிறகும் கூட, சொற்பமான தொகையே 2015-16, 2016-17 ஆகிய நிதியாண்டுகளில் ஒதுக்கப்பட்டது.  2017-18ஆம் ஆண்டில் 2,700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.  ஆனால், பின்னர் பட்ஜெட் மதிப்பீட்டில் இது வெட்டிச் சுருக்கப்பட்டது.  அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில் நிதியின் அளவு வெட்டிச் சுருக்கப்படுவதே அதிகரித்தது.  2020-21 நிதியாண்டில் இத்தகைய வெட்டு பெருமளவில் இருந்தது.  2500 கோடி ரூபாய்களாக இருந்த பட்ஜெட் நிதி ஒதுக்கீடு வெறும் 1300 கோடி ரூபாய்களாக சுருங்கிப் போனது. 2017ஆம் ஆண்டில் ‘பிரதம மந்திரி மாத்ரு வந்தனா திட்டம்’ தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை அரசு உருவாக்கியபோது, மகப்பேறு பயன்களைப் பெறுவதற்கான ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்டப்பூர்வ மான விதிமுறைகளைப் புறக்கணித்தது.  உயிரோடு உள்ள முதல் குழந்தைக்கு மட்டுமே இந்த பயன்கள் கிடைக்கும் என்ற நிபந்தனை யை விதித்தது.  மேலும், 6000 ரூபாய் மூன்று தவணைகளில் அளிக்கப்பட வேண்டும் என்ற சட்டப்பூர்வமான உத்தரவு உள்ளபோதும், நிதியுதவியை 5000 ரூபாய் எனக் குறைத்தது. 

சிக்கலான நடைமுறை

மேலும், இத்திட்டத்தின் கீழ் பயனடைய வேண்டிய தாய்மார்களுக்கு – குறிப்பாக இப்பயன்கள் மிகவும் தேவைப்படும் ஏழை களாக இருப்பதோடு எழுத்தறிவைப் பெற  முடியாமல் இருக்கும் பிரிவினருக்கு - இத்திட்டத்தின் பலன்களைப் பெறுவதே மிகப் பெரிய சவாலாக இருக்கும் வகையில் இதன் நடைமுறை மிகவும் சிக்கலானதாக அமைக்கப்பட்டுள்ளது.  சில சமயங்களில், வீட்டிலேயே குழந்தையைப் பெற்றெடுத்த பெண்களுக்கு அல்லது ஆதார் அட்டை அல்லது இதர சம்பந்தப்பட்ட ஆவணங்கள் இல்லாத பெண்களுக்கு இப்பயன் மறுக்கப்படுகிறது.  இத்திட்டத்தின் கீழ் பலனடைய மிக நீண்ட படிவங்களை பூர்த்தி செய்வதோடு, தாய்-சேய் பாதுகாப்பு அட்டை, தாய் மற்றும் அவளது  கணவனின் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு  புத்தகம் போன்ற ஆவணங்களை அளிப்ப தோடு, வங்கிக் கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டியுள்ளது.   சமர்ப்பிக்கும் ஆவ ணங்களில் ஏதேனும் சிறு பிழை இருந்தால் கூட இத்திட்டத்தின் கீழ் பயன் மறுக்கப்படு கிறது.  இணையவழியில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் கூட பல்வேறு காரணங் களைக் காட்டி நிராகரிக்கப்படுகின்றன.  விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் கூட, பணப்பயன் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.  சில சமயங்களில், தவறான வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு விடு கிறது.  இத்தகைய தவறுகளை சரி செய்வது மற்றொரு சவாலாக உள்ளது.

தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் ஒரு பகுதியாக உள்ள மகப்பேறு நிதியுதவித் திட்டத்தை செயல்படுத்துவதில் பல அநீதிகள் நிகழ்ந்துள்ளன.  இவை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.  உயிரோடு உள்ள முதல் குழந்தைக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பலனடைய முடியும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டு, அனைத்துப் பிரசவங்களுக்கும் நிதி யுதவி அளிக்கப்பட வேண்டும்.  நிதியுதவித் தொகையை ரூ.6000/- என்பதிலிருந்து ரூ.5000/- எனத்  தன்னிச்சையாகக் குறைத்த தையும் அரசு திரும்பப் பெற வேண்டும்.  குறைந்தபட்சமாக ரூ.6000/- அளிக்கப்பட வேண்டும் என்பது சட்டப்பூர்வமாக வெளி யிடப்பட்ட உத்தரவாகும்.  இத்தொகையின் பயன்மதிப்பை தக்கவைக்க பணவீக்க விகிதத்தின் படி நிதியுதவித் தொகையின் அளவு அதிகரிக்கப்பட வேண்டும்.  இத்தொகை எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகும்.  இதனை அதிகரிக்க வேண்டும்.  இதற்காக குறைந்தது 18,000 கோடி ரூபாய்கள் வருடாந்திர பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.  தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரத்தை கணக்கில் கொண்டு இத்தகைய தொகை ஒதுக்குவது மிகவும் தேவையான ஒன்றாகும்.   இது போன்ற முக்கியமான திட்டத்தின் பயன்களைப் பெறுவதற்கான நடைமுறை எளிமையானதாக இருக்க வேண்டும்.  குறிப்பாக ஆதார் அட்டையைக் கோருவதும், வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது போன்றவை நீக்கப்பட வேண்டும்.  இத்தகைய நிதியுதவி மிகவும் தேவைப்படும் பயனாளிகளுக்கு தடையை ஏற்படுத்தும் நடைமுறைகளுக்கு பதிலாக நிதியுதவி அவர்களைச் சென்று சேருவதை உத்தரவாதம் செய்ய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.   

நியூஸ் கிளிக் இணைய இதழின் செய்தித் தொகுப்பு : எம். கிரிஜா
 

;