states

img

பெண் சக்தி மீது திடீர்ப் பாசம் மோடியின் வெளிவேசம்!

மனதின் குரல்’ நிகழ்ச்சியில் மட்டும் பேசி வந்த பிரதமர் நரேந்திர மோடி, பத்தாண்டு நிறைவடையும் நிலையில், மக்களிடம் வாக்குக் கேட்கும் தருணத்தில் தொலைபேசியில் பேசியிருக்கிறார். எல்லாம் தேர்தல் படுத்தும் பாடுதான். அப்போதும் கூட சாதாரண மக்களிடம் பேசவில்லை; அவரது கட்சி சார்பில்  போட்டியிடும் பெண் வேட்பாளரிடம் தான். அவர் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ரேகா பத்ரா. ஞாயிறன்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டவருடன் செவ்வாயன்று பேசியதாகவும் பிரச்சாரம் பற்றி விசாரித்ததாகவும் பின்னர் அவரை ‘சக்தியின் வடிவம்’ என்று பாராட்டியதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியது. ரேகா பத்ராவும், துணிச்சலான மற்றும் தன்னம்பிக்கையான வார்த்தைகளைக் கூறிய பிரதமர் மோடிக்கும் வேட்பாளராக தேர்வு செய்த பாஜகவுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். எங்கெல்லாம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆதரவாக  பாஜகவினர் குரல் கொடுப்பதோ ஆறுதல் கூறுவதோ இல்லை என்பது நாடறிந்த நடப்பு. ஏனென்றால் அதற்கு காரணமாக இருப்பவர்கள் அல்லது அதற்கு ஆதரவாக இருப்பவர்கள் பாஜக - பரிவாரங்களைச் சேர்ந்தவர்களே என்பது உலகறிந்த உண்மை. பாஜக ஆளுகிற மாநிலங்களில் குஜராத் - பில்கிஸ் பானு, உ.பி. - தலித் பெண், காஷ்மீர் சிறுமி என்று பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் நீளும். அங்கெல்லாம் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே பாஜக கட்சியும் ஆட்சியும் இருந்திருக்கிறது. அந்த வரிசையில் உலகமே  காறித் துப்பிய கொடுமையான நிகழ்வுகளாக மல்யுத்த வீராங்கனைகளுக்கான நீதிமறுப்பும், மணிப்பூர் பழங்குடியினப் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டது,

பாலியல் பலாத்காரம், கொடூரக் கொலைகளும் அமைந்தன. மனதின் குரலைக் கேட்கும் பிரதமரே, எங்கள் குரலையும் கேளுங்கள், எங்களுக்கு நீதி தாருங்கள் என்று மல்யுத்த வீராங்கனைகள், மன்றாடினார்களே நாடாளுமன்ற வீதியில், அவர்களின் குரலைக் கேட்டாரா பிரதமர், தொலைபேசியிலாவது? உலக மல்யுத்த கூட்டமைப்பு, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து கூட செய்ததே. அப்போதும் அசைவில்லையே மோடியிடம். மணிப்பூர் கொடூரங்களைக் கண்டு உலகமே அதிர்ச்சியில் உறைந்தது. ஓராண்டாகியும் கூட அந்த மாநிலத்தை எட்டிக் கூடப் பார்க்கவில்லையே, ஆறுதலும் கூறவில்லையே. அங்கே நடப்பது பிரதமரின் இரட்டை எஞ்சின் ஆட்சி தானே! இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லையே! அது பற்றி ஒரு பேச்சும்  மூச்சும் விடவில்லையே மோடி. இதில் பாதிக்கப்பட்ட வர்கள் எல்லாம் ‘பெண் சக்தி’ இல்லையா?  எதிர்க்கட்சி ஆளும் மாநிலம் என்றால், அதுவும் தேர்தல் காலமென்றால் பாசம் பொங்கி வழிகிறது பாஜகவின ர்க்கு. இப்போது பேசும் நாக்குக்கு அப்போது எல்லாம் இரட்டைத் தாழ்ப்பாளா போட்டிருந்தது? இரட்டை எஞ்சின் ஆட்சியில் நடந்தால் கண்கள், காதுகள்,  வாயை மூடிக் கொள்வதும் எதிர்க்கட்சி  மாநிலம் என்றால் ஒற்றை நாக்கில் அல்ல, இரட்டை நாக்கில் பேசுவதும் நாட்டு மக்கள் அறியாததல்ல! இது பாசமும் அல்ல பெண் சக்திக்கு கொடுக்கும் மரியாதையும் அல்ல. எல்லாம் வெளி வேஷம்; தேர்தல் காலப் பாசம்! -ப.முருகன்

;