states

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கம்

முதல்நாளே அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்தது மோடி அரசு

புதுதில்லி, ஜூலை 18- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் திங்களன்று (ஜூலை 18) துவங்கிய நிலையில், விலைவாசி உயர்வு  பிரச்சனை களை கிளப்பி எதிர்க்கட்சிகள் போராட்டத் தில் இறங்கின. குறிப்பாக, அரிசி, கோதுமை, பருப்பு  வகைகள், பால், தயிர், மோர் உள்ளிட்ட வற்றுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக் கப்பட்டதைத் திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். ஆனால், ஒன்றிய பாஜக அரசு அதற்கு  தயாராக இல்லை என்பதால், எதிர்க்கட்சி கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி,  பதாகைகளை ஏந்தியபடி தொடர்ந்து முழக்  கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  இதனால், கூடிய முதல்நாளிலேயே நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள், நாள்  முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 13-ஆம்  தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் வனப் பாதுகாப்புத் திருத்த மசோதா, தேசிய பல் மருத்துவ  ஆணைய மசோதா, மத்திய பல்கலைக்கழ கங்கள் திருத்த மசோதா, ஆள்கடத்தல் (பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதா, குடும்ப நீதிமன்றங்கள் திருத்த  மசோதா, பல மாநில கூட்டுறவு சங்கங்கள்  திருத்த மசோதா உள்ளிட்ட 24 மசோதாக் களை தாக்கல் செய்து, அவற்றை நிறை வேற்றிவிட வேண்டும் என்பதில் ஒன்றிய பாஜக அரசு தீவிரமாக உள்ளது.  அதேநேரம், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மோடி ஆட்சியில் அதி கரித்து வரும் வேலையின்மை, விலை வாசி, ஜிஎஸ்டி என்ற பெயரில் நாளும் ஏற்றப்படும் வரிச்சுமை, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு,  நூபுர் சர்மா, நவீன் ஜிண் டால் போன்றவர்களின் வெறுப்புப் பேச்சு, பாஜக ஆளும் மாநிலங்களில் இஸ்  லாமியர்களின் வீடுகள் குறி வைத்து இடிக்கப்படுவது ஆகிய விவகாரங்களை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்ட மிட்டுள்ளன. இந்நிலையில், திங்க ளன்று காலை மாநிலங்க ளவை கூடியவுடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவி யேற்றுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, அவையின் வழக்கமான அலு வல்கள் தொடங்கின. அப் போது, மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயு டுவின் இருக்கைக்கு முன்பு கூடிய எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர் கள் பாஜக அரசின் ஜிஎஸ்டி  வரி விதிப்பு, விலைவாசி உயர்வுக்கு எதிராக பதாகை களை ஏந்தி முழக்கமிட்டனர்.  குறிப்பாக, பிராண்ட் பெயர்  இல்லாத அரிசி, கோதுமை,  பருப்பு உள்ளிட்ட தானி யங்கள், தயிர் உள்ளிட்ட பால்  பொருட்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மற்றும்  லேபிள் ஒட்டி விற்கப்படும் இறைச்சி (உறைந்தது தவிர), மீன், பன்னீர், தேன், உலர்ந்த காய்கறிகள், உலர்ந்த மக்கானா, கோதுமை மாவு  ஆகியவற்றுக்கு விதிக்கப் பட்டுள்ள 5 சதவிகித ஜிஎஸ்டியை திரும்பப் பெற  வேண்டும் என்று வலியுறுத்தி னர். இதனால் மாநிலங்கள வையை செவ்வாய்க் கிழமை காலை 11 மணிவரை  வெங்கையா நாயுடு ஒத்தி வைத்தார். இதேபோல, திங்க ளன்று காலை தொடங்கிய மக்களவை, குடியரசுத் தலைவர் தேர்தலில் உறுப்பி னர்கள் வாக்களிப்பதற்காக பிற்பகல் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.  பிற்பகலில் அவை கூடிய போது அங்கும், ஜிஎஸ்டி வரி விதிப்பு, எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்ச னைகளுக்கு எதிராக பதா கைகளை ஏந்தி எதிர்க்கட்சி  எம்.பி.க்கள் முழக்கமிட்ட னர். இதனால், மக்களவை யும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாக அறிவிக்கப் பட்டது.

ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்பு!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்,  திங்களன்று கூடிய நிலையில், மாநிலங்கள வைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், ஒன்றிய  முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம், திமுக உறுப்  பினர்கள் கே.ஆர்.என். ராஜேஷ் குமார், ஆர். கிரிராஜன்,  எஸ்.கல்யாணசுந்தரம், அதிமுகவைச் சேர்ந்த சி.வி. சண்முகம் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். மேலும்,  தமிழ்நாட்டு எம்.பி.க்கள் அனைவரும் தமிழ் மொழியி லேயே  பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். பஞ்சாப் மாநிலத்திலிருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்  சிங்-கும் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

இளையராஜா, பி.டி. உஷா பதவியேற்கவில்லை!

மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் பதவிக்கு  இசையமைப்பாளர் இளைய ராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, தா்மசாலா கோயில் நிர்வாக அறங்காவலா் வீரேந்திர ஹெக்டே, பிர பல திரைக்கதை எழுத்தாளா் வி. விஜயேந்திர பிரசாத் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.  இவர்கள் திங்களன்று பதவியேற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இளையராஜா, பி.டி. உஷா ஆகியோர் பதவியேற்கவில்லை. மாநிலங்க ளவைத் தலைவர் வெங்கையா நாயுடு, இளையராஜா என்று கூப்பிட்டவுடன் அவையில் இருந்த அனைவரும் உற்சாகத்துடன் கைகளைத் தட்ட ஆரம்பித்தனர். ஆனால், இளையராஜா அவைக்கே வராததை அறிந்து  ஏமாற்றம் அடைந்தனர். அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றுள்  ளதால், இளையராஜாவால் இன்றைய கூட்டத்தில் பங்  கேற்க இயலவில்லை எனக் கூறப்படுகிறது.  அதே போல், பி.டி. உஷாவும் அவைக்கு வரவில்லை.