அய்சால், ஆக. 11- மணிப்பூர் விவகாரத்தால் மிசோரமில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் பாஜக - மிசோ தேசிய முன்னணியின் (எம்என்எப்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் எம்என்எப் கட்சி உள்ள நிலையில், கடந்த புதனன்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் பொழுது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா,”மணிப்பூர் வன்முறைக்கு மியான்மர் நாட்டிலிருந்து “வந்தேறி” குக்கி இனமக்களே வன்முறைக்கு காரணம்” என விமர்சித்திருந்தார். அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு எம்என்எப் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. வியாழனன்று எம்என்எப் கட்சியின் ஒரே மக்களவை எம்பியான சி.லால்ரோசங்கா நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதாக கூறி, “இந்தியா” கூட்டணி எதிர்க்கட்சி எம்பிக்களுடன் அமர்ந்து இருந்தார். பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பேசாததால் “இந்தியா” கூட்டணி எம்பிக்களுடன் சி.லால்ரோசங்காவும் வெளியேறினார். வியாழனன்று எம்என்எப் எம்பியான வன்லால்வேனா மாநிலங்களவையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குக்கி பழங்குடி இன மக்களை “வந்தேறி” எனக் கூறியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மாநிலங்களவையில்,”நான் மிசோரமில் இருந்து வந்துள்ள பழங்குடி வகுப்பை சேர்ந்தவன். நாங்கள் அந்நிய நாட்டில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் அல்ல. நாங்கள் மியான்மர் நாட்டு குடிமக்கள் அல்ல. நாங்கள் இந்தி யர்கள்தான். நாடு விடுதலைக்கு முன்னரே வடகிழக்கு மாநிலங்களில் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பழங்குடிகள் நாங்கள்” என ஆக்ரோஷமாக பேசினார். வன்லால்வேனாவின் பேச்சிற்கு பாஜக கூட்டணி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.
மைக் துண்டிப்பு, சபை குறிப்புகளில் இருந்து நீக்கம்
மாநிலங்களவையில் எம்என்எப் எம்பி வன்லால்வேனா பாஜகவிற்கு எதிராக பேசியதால் அவர் பேசும் பொழுது மைக் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சபை குறிப்புகளில் இருந்து வன்லால்வேனாவின் கருத்துக்கள் நீக்கப்பட்டன. இதனை வன்லால்வேனா டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியின் பொழுது உறுதிப்படுத்தினார். அமித் ஷாவின் “வந்தேறி” பேச்சுக்கு மிசோரமில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கூட்டணி கட்சியான எம்என்எப் கட்சி, காங்கிரஸ் மற்றும் மிசோரம் மாநிலத்தின் அனைத்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மிசோரமில் பாஜக கூட்டணி ஆட்சி உள்ளது. ஒரே ஒரு தொகுதியை மட்டும் வென்றுள்ள பாஜக, 26 எம்எல்ஏ-க்களுடன் ஆளுங்கட்சியாக எம்என்எப் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேசிய ஜனநாயக கூட்டணியை பாஜக உருவாக்கியது. இதனால் இப்போது மிசோரமில் தேசிய ஜனநாயக கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களவை, மாநிலங்களவையில் எம்என்எப் கட்சிக்கு தலா ஒரு எம்பி உள்ளனர். அசாமில் வன்முறை பரவ வாய்ப்பு இந்நிலையில் பாஜக ஆளும் அசாமில் இருந்து மிசோ மக்கள் வெளியேற அசாம் பாஜக ஆதரவு மாணவர் அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இதனால் அசாம், மிசோரமில் வன்முறை பரவிடும் அபாயம் உருவாகியுள்ளது.
பழங்குடி மக்களுக்கு ஆதரவாக மிசோரம்
மணிப்பூரில் இருந்து துரத்தும் நோக்கில் குக்கி இனமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் குக்கி இன மக்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகள் போல வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், குக்கி இன மக்களுக்கு ஆதரவாக மிசோரம் மாநிலம் முழு ஆதரவு அளித்து வருகிறது. அகதிகளாக இடம்பெயரும் மக்களுக்கு தேவையானதை கவனித்து வருகிறது. குக்கி இன ஆதரவாக ஒரு மாநிலமே (மிசோரம்) இருப்பதால் வடகிழக்கு மாநிலங்களில் பதற்றம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.