states

img

மூத்த குடிமக்களின் பாதுகாப்பை பறித்த மோடி அரசு

சென்னை, மார்ச் 28 - நாடு முழுவதும் உள்ள மூத்த குடிமக்களின்  பாதுகாப்பை பறித்த  மோடி அரசை வீழ்த்துவது நமது கடமை  என அனைத்து ஓய்வூதியர்களுக்கும் அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.  இதுதொடர்பாக சம்மேளனத்தின் தலைவர் அசோக் தூல், பொதுச் செயலாளர் நெ.இல.ஸ்ரீதரன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் மோடி அரசு நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்தது. வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் கோடிக்கணக்கான இளைஞர்களை ஏமாற்றியது, பொதுத் துறை சொத்துக்களை தனியார் கார்ப்பரேட் கம்பெனி களுக்கு விற்று வருவது, விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கொடுக்காமல் வஞ்சித்து  வருவது,  நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் மதச்சார்பின்மை விழுமியங்களையும் சீர்குலைத்திருப்பது உள்ளிட்ட பல்வேறு கார ணங்களுக்காக மோடி ஆட்சியை மாற்றியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர். மேலும், மூத்த குடிமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய மோடி அரசு குறித்து விவரித்துள்ள அவர்கள், “கடந்த பத்தாண்டு கால மோடி ஆட்சியில் மூத்த குடிமக்கள் குறிப்பாக ஓய்வூதியம் பெறுபவர்களின் நிலை, மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் காலத்தில் ரயில்வேயால் திரும்பப் பெறப்பட்ட மூத்த குடிமக்களுக்கான சலுகை இப்போதும் மறுக்கப்படும் அதே வேளையில், பிரதமரின் படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ரயில்வே கோடிக்கணக்கான ரூபாயை செலவிடுகிறது.

தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் புதிய ஓய்வூதியத் திட்டம் திரும்பப் பெறப்படவில்லை. மாறாக, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்த மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைகள் உருவாக்கப்படுகின்றன.  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை அரசாங்கம் கணிசமாகக் குறைத்து, கோடிக்கணக்கான ரூபாய்களை இழந்தாலும், ஓய்வூதியர் வருமானத்திற்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்க மறுக்கிறார்கள்.

உண்மையில், மூத்த குடிமக்களுக்கு ஏற்கனவே இருந்த சலுகை புதிய வரி விதிப்பில் பறிக்கப்படுகிறது. 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை திரும்ப வழங்கப்படவில்லை. வட்டி விகிதங்கள் அடிக்கடி குறைக்கப்பட்டாலும், 12 ஆண்டுகளுக்குப் பிறகு கம்முடேசன் பிடித்தம் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது. 65,70,75 வயதில் கூடுதல் ஓய்வூதியம் வழங்க நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்த போதிலும், சரியான காரணமின்றி அந்த பரிந்துரைகளை அரசு நிராகரித்தது. 78% மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்கள் தங்கள் மகன்/ மகளைச் சார்ந்து இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளனர். இந்த பின்னணியில், தற்போதைய ஆட்சி மாற்றப்படு வது கட்டாயமாகும். அனைத்து ஓய்வூதியதாரர்களிடமும் தங்கள் குடும்பங்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அருகாமையில் உள்ளவர்களிடம் மக்களின் அவல நிலையை முன்னிலைப்படுத்தவும், அனைவரை யும் உள்ளடக்கிய இந்தியாவுக்காக முன் நிற்கும் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

;