மும்பை, பிப்.22- கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே, இந்திய பங்குச் சந்தைகள் தொடர் சரிவைச் சந்தித்து வருகின்றன. இதனால், கடந்த 5 வர்த்தக நாட்களில் மட்டும் இந்தியப் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 9 லட்சம் கோடியை இழந்துள்ளனர். உக்ரைன் விவகாரத்தை வைத்து, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தி வருவதால், ஆசியப் பங்குச் சந்தைகள் தொடர் தடுமாற்றத்தில் இருந்து வருகின்றன. சர்வதேச அளவில் நிலவிவரும் பதற்ற மான நிலைக்கு மத்தியில், கச்சா எண் ணெய் விலையும் தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. இது மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியாவுக்கு, மேலும் பணவீக்கத்தை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 97 டாலர்களை தாண்டிள்ளது. தங்கத்தின் விலையும் 1900 டாலர்களைத் தாண்டியுள்ளது. இதன் காரணமாக மேற்கொண்டு விலை என்னவாகுமோ? என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
இதனால், இந்தியப் பங்குச் சந்தைகளும், கடந்த பிப்ரவரி 16 முதல் சரிவைக் கண்டு வருகின்றன. வர்த்தக வாரத்தின் முதல் நாளான திங்களன்று (பிப்ரவரி 21) சென்செக்ஸ் 149.38 புள்ளிகள் சரிந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான நிப்டி, 69.65 புள்ளிகள் சரிவு கண்டு, 17,206.65 புள்ளிகளில் முடிவுற்றது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறு வனங்களின் மொத்த பங்குச் சந்தை மதிப்பு ரூ. 257.39 லட்சம் கோடியாக குறைந் தது. அதாவது திங்களன்று முதலீட்டா ளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ. 3.12 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில், வர்த்தக வாரத்தின் இரண்டாவது நாளான செவ்வாயன்றும் மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 382.91 புள்ளிகள், தேசியப் பங்குச் சந்தைக் குறியீடான நிப்டி 114.45 புள்ளிகள் என மேலும் சரிவைக் கண்டன. இதன் காரணமாக, கடந்த 5 நாட்களில் இந்தியப் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ரூ. 9.1 லட்சம் கோடி அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளனர்.